Published:Updated:

கால்நடை: ஆடு, மாடு, கோழி, குதிரை... மாதம் ரூ.1 லட்சம் லாபம்!

நாட்டு மாடுகளுடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு மாடுகளுடன்

கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். அதற்குத் தோதாக, ‘கால்நடை மருத்துவர் படிப்பு படிக்கணும்’னு நினைச்சேன்.

ஒரு குதிரையைப் பராமரிக்க, மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும்.

‘பொறியியல் படிப்பு, எம்.என்.சி கம்பெனி வேலை, கைநிறைய சம்பளம்’ என்பது ஒருகாலத்தில் பெருவாரியான இளைஞர்களின் கனவு. தற்போது, அது பழைய கதையாகிவிட்டது. இப்போது, இன்ஜினீயர் படித்தால், தகுந்த வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்கிறது. அதேநேரம், இன்ஜினீயர் படித்துவிட்டு, நல்ல வேலையில் கைநிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட, நம்மாழ்வார் ஏற்படுத்திய பாதிப்பில், அந்த வேலையை உதறிவிட்டு, இயற்கை வேளாண்மைக்குள் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் மறுபக்கம்.

நாட்டு மாடுகளுடன்
நாட்டு மாடுகளுடன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கரூரைச் சேர்ந்த சரவணபிரபுவும், இன்ஜினீயரிங் படிப்பு மூலமாகக் கிடைத்த ரூ.85,000 சம்பளம் தந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது கிராமத்தில் நாட்டுமாடுகள், குதிரை, ஆடு, கோழி வளர்க்கும் ஒருங்கிணைந்த பண்ணையத் தொழிலில் இறங்கி, வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அதன்மூலம், மாதம் 1,20,000 வரை சம்பாதித்து, மற்ற இளைஞர்களுக்கு உந்துசக்தியாக மாறியிருக்கிறார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள கோடங்கிப்பட்டியில், ஐந்து ஏக்கர் நிலத்தில் இருக்கிறது இவரது கால்நடை வளர்ப்புப் பண்ணை. அங்கே கால்நடைப் பராமரிப்பில் பரபரப்பாக இருந்த சரவணபிரபுவைச் சந்தித்துப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்பா காட்டிய வழி

“எனக்குச் சொந்த ஊர், கரூர். எங்களுக்குச் சொந்தமா உள்ள ஒரே சொத்து, இந்தப் பண்ணை அமைந்துள்ள அஞ்சு ஏக்கர் நிலம் மட்டும்தான். அப்பா ரத்தினம், தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில மண்டல மேலாளராக இருந்தார். இருந்தாலும், கூடவே இந்த அஞ்சு ஏக்கர் இடத்துல 25 குதிரைகள், 53 கலப்பின மாடுகள், 600 ஆடுகள், 150 கோழிகள்னு வெச்சு வளர்த்துக்கிட்டு வந்தார். எனக்கும் சின்ன வயசில் இருந்தே, கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். அதற்குத் தோதாக, ‘கால்நடை மருத்துவர் படிப்பு படிக்கணும்’னு நினைச்சேன். ஆனா, அப்பா என்னையும், அண்ணனையும், ‘ஒழுங்கா படிச்சு முன்னேறுற வழியைப் பாருங்க; கால்நடை வளர்ப்பெல்லாம் உங்களுக்குச் சரிபடாது’ன்னு கண்டிச்சதோடு, என்னை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்ல சேர்த்துவிட்டார்.

குதிரையுடன் சரவண பிரபு
குதிரையுடன் சரவண பிரபு

2009-ம் வருஷம் நான் பி.இ. இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சேன். பிறகு, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கார் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை டிசைன் செய்வது, தயாரிப்பது சம்பந்தமான எம்.டெக். படிப்பையும் முடிச்சேன். 2011-ம் வருஷம், சென்னையில் இருக்க ஒரு பன்னாட்டு நிறுவனத்துல, 10,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இருந்தாலும் மனசுக்குள்ள, ‘அப்பா வெச்சிருந்த இந்தப் பண்ணைக்கு வரமுடியவில்லையே. நாம ஆசைப்பட்ட கால்நடை வளர்ப்புல ஈடுபடமுடியலையே’ங்கிற ஏக்கம் இருந்துகிட்டே இருந்துச்சு.

இந்தச் சூழல்லதான், 2013-ம் வருஷம், அப்பா திடீர்னு தவறிட்டார். மொத்த குடும்பத்துக்கும் அது பேரிடியா இருந்துச்சு. அண்ணன் கார்த்திக் பிரபு, சென்னையில் இருக்க ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில வேலையில் இருந்தார். அதனால், அப்பா விட்டுட்டுப்போன பண்ணையை விடுமுறை நாள்கள்ல நான் வந்து பார்த்துக்க ஆரம்பிச்சேன். வேலை ஆள்களை நியமிச்சு, இந்தப் பண்ணையைத் தொடர்ந்து பராமரிக்க ஆரம்பிச்சேன்” என்றவர், அதன்பிறகு தான் சறுக்கிய கதையைப் பகிர்ந்துகொண்டார்.

“ஆனா, நேரடியா நிர்வாகம் பண்ணாததாலயும், எனக்குக் கால்நடை வளர்ப்பில் போதிய அனுபவம் இல்லாததாலயும் 40 ஆடுகள், 50 கோழிகள், 4 குதிரைகள் இறந்துபோச்சு. அதைப் பார்த்து நான் துடிச்சுப்போனேன். ‘இருக்கிறதை விட்டுட்டு, நீ பார்க்கிற வேலையை மட்டும் தொடர்ந்து பாரு’னு வீட்டுல உள்ளவங்க அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா அப்படிப் பண்ணினா, ‘என்னோட ஆசை அஸ்தமனமாகும்ங்கிறது ஒருபக்கம், இன்னொருபக்கம் சிறுவயது ஆசையில தோத்ததுபோல ஆயிருமே’னு மனசுக்குள்ள மருகிப்போனேன். உடனே, ‘விட்டதைப் புடிக்க, நாமளே களத்தில் இறங்கிப் பார்ப்போம்’னு முடிவு பண்ணினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணியை விட்டுப் பண்ணைக்கு!

நான் பார்த்துட்டு வந்த சென்னை வேலையும் அதிக மன அழுத்தத்தைக் கொடுத்துச்சு. அதனால, ‘ஆடு, மாடு, குதிரைகளின் எண்ணிக்கையைக் குறைச்சு, அதை நாமே பராமரிக்கலாம்’னு முடிவு பண்ணினேன். அதைப் பராமரிக்க மூலதனம் வேணும்ங்கிறதுக்காக, 2016-ம் வருஷம்வரை அந்த வேலையில் இருந்தேன். இதற்கிடையில, தண்ணீர்த் தேவைக்காக இந்தப் பண்ணையில் போர்வெல்கள் அமைச்சேன். தேவையான அளவு ஷெட் அமைச்சேன். அதுக்கு, ரூ.1,35,000 வரை செலவாச்சு. நான் வேலையை விட்டபோது, எனக்குக் கிடைச்ச சம்பளம் ரூ.85,000. எங்க அம்மாவும், ‘குதிரை, மாடு, கோழி வளர்க்கிறதெல்லாம் சாதாரண வேலை இல்லைப்பா. அதைப் பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாது. உன்னால சமாளிக்க முடியாது. எல்லாத்தையும் வித்துட்டு, பேசாம பார்க்கிற வேலையிலேயே இரு’னு சொன்னாங்க. சொந்தக்காரங்க, உறவினர்களெல்லாம் இதையே சொல்லி என்னைப் பயமுறுத்துனாங்க. ஆனால் நான், ‘என்னால் முடியும்’னு துணிஞ்சு வேலையை விட்டுட்டு, இந்தக் கால்நடை வளர்ப்புத் தொழில்ல இறங்கினேன்.

நாட்டுக்கோழியுடன்
நாட்டுக்கோழியுடன்

ஆரம்பத்துல ரொம்ப சிரமமா இருந்துச்சு. கால்நடைகளைப் பத்தி துளிகூட எனக்குத் தெரியலை. தொட்டதெல்லாம் சறுக்கிச்சு. ‘தப்பு பண்ணிட்டோமோ, வேலையில் தொடர்ந்திருக்கணுமோ’னு நினைச்சேன். பலநாள் இரவுகள்ல தூக்கம் வரலை. ஆனால், ‘முன்ன வச்ச காலை கண்டிப்பாகப் பின்னே வைக்கக் கூடாது. என்ன நடந்தாலும், இதுதான் எனது எதிர்காலம்’னு முடிவு பண்ணி, மனதெளிவு அடைஞ்சேன். நம்பிக்கையோடு மறுபடியும் பண்ணைக்குள்ள காலடி எடுத்து வெச்சேன்” என்றவர், மாடுகளுக்குத் தீவனம் கொடுப்பது பற்றி, வேலையாள்களிடம் சில உத்தரவுகளைப் போட்டார். பிறகு தொடர்ந்து பேசிய சரவணபிரபு,

அப்போ 8 லிட்டர் இப்போ 85 லிட்டர்!

“மெள்ள மெள்ள யூடியூப் வீடியோக்கள், கால்நடை மருத்துவர்கள் வழிகாட்டுதல்னு விஷயத்தெளிவு அடைஞ்சேன். பிறகு, நானே ஆடு, மாடுகளுக்குப் பிரசவம் பார்க்குற அளவுக்கு முன்னேறிட்டேன்.

மூணு வருஷத்துக்கு முன்னாடியே குதிரை, மாடு, கோழி, ஆடுகளோட எண்ணிக்கையைக் குறைச்சேன். எல்லாவற்றுக்கும் தேவையான தீவனங்களை நானே தயாரிச்சேன். இதை மேய்ப்பதற்குத் தேவையான நிலங்களை வருடக் குத்தகைக்குப் பேசி, அதைத் தயார் செஞ்சேன். பிறகு, ‘நாட்டு மாட்டுப் பால் விற்பனையைத் தொடங்கலாம்’னு முடிவுபண்ணி, ஒரே ஒரு மாட்டை வெச்சு தினமும் எட்டு லிட்டர் பாலை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இப்போ தினமும் காலையும், மாலையும் சேர்த்து, 85 லிட்டர் பால் கிடைக்கிது. அதில் டீக்கடை, வீடுகள்னு 78 லிட்டர் பால் தினமும் விற்பனையாயிடுது. இப்போது, எட்டு காங்கேயம் ரக நாட்டுமாடுகளும், 5 சிந்தி கலப்பின மாடுகளும் என் பண்ணையில இருக்குது.

குடும்பத்தினருடன் குதிரைகள்
குடும்பத்தினருடன் குதிரைகள்

அதேபோல, போன பிப்ரவரி மாசம் வரை 13 குதிரைகள் இருந்துச்சு. வித்தது போக, இப்போ 4 குதிரைகள் இருக்குது. தவிர, 110 நாட்டுக்கோழிகளை வளர்க்கிறேன். முன்னாடி வியாபாரிகள், தனிநபர்கள்கிட்ட முழுக்கோழிகளாக வித்துக்கிட்டு இருந்தேன். கொரோனா லாக்டவுன்ல நேரடியா மக்களுக்கு விற்பனை செய்றேன். கோழியை நாங்களே சுத்தம் பண்ணி, நேரடியா விக்கிறோம். போன வாரம் வரைக்கும் 58 செம்மறி ஆடுகள் இருந்துச்சு. அதுல, 33 குட்டிகள்வரை வித்தோம். இப்போ 25 தாய் ஆடுகள்தான் பண்ணையில் இருக்கு. இந்திய அளவுல, முக்கியமான குதிரை வளர்ப்பவர்கள் மத்தியில், நான் அறியப்படும் அளவுக்கு விற்பனையில தேறிட்டேன்” என்றார்.

இதுதான் தீவன அளவு!

தொடர்ந்து, கால்நடைகளுக்குக் கொடுக்கும் தீவனம் பற்றிப் பேசியவர், “கால்நடைகளுக்குத் தீவனமா போட, வாரம் ஒருமுறை அந்தியூரிலிருந்து பச்சை சோளத்தட்டை ஒரு டன் வாங்குவேன். அது டன் 3,800 ரூபாய். அதேபோல, மாட்டுக்குக் கூடுதலா அடர்தீவனம் வாங்கிப் போடணும். அதேபோல, மாடு ஒன்றுக்குத் தினமும் 2 கிலோ வீதம் வரத்தீவனம் (வைக்கோல்) கொடுப்பேன். தவிர, தாது உப்புக் கொடுக்கணும். இது மாடுகளுக்கான தீவனம் கொடுக்கும் முறை. செம்மறி ஆடுகள் இங்கு மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் புல்லை அதிகம் மேயும். 6 மாசத்துக்கு ஒருதடவை 28 செம்மறியாட்டுக் குட்டிகளை ரூ.5,400 வீதம் விற்பனை செய்றோம். அதுல, குட்டி ஒன்றுக்கு ரூ.2,500 லாபமா கையில் நிக்கும்.

கறவை மாடுகளுடன்
கறவை மாடுகளுடன்

கோழிகளுக்கு மருந்துச் செலவு மட்டும்தான். ஆடு, மாடு, குதிரை சாணத்தைக் கோழிகள் இரையா எடுத்துக்கும். இல்லைன்னா, கொஞ்சமா கம்பைத் தீனியா கொடுப்போம். அதேபோல், குதிரைக்கு நாளொன்றுக்கு கொள்ளு, மக்காச்சோளத் தட்டை, கம்பு, சூரியகாந்தி விதை, கோதுமைத் தவிடுனு ரூ.400 வரை செலவாகும். அதுக்குத் தேவையான அத்தனை தீனியையையும் உள்ளூர்லயே வாங்கிக்கிறேன். மூணு பேரைப் பராமரிப்பு பணிக்காக வேலைக்கு நியமிச்சுருக்கேன். அவங்க ஒவ்வொருவருக்கும் தினமும் சம்பளம் தலா ரூ.400 தரணும்” என்றவர், நிறைவாக,

மாதம் ரூ.2,24,000 வருமானம்!

“சிந்தி கலப்பின மாட்டுப்பால் ஒரு லிட்டர் ரூ. 50-க்கும், நாட்டுமாட்டுப்பால் ஒரு லிட்டர் ரூ. 90-க்கும் விலை போகுது. இந்த விலைக்கு கரூர்ல பால் வாங்குறாங்களானு நினைக்கலாம். ஆரோக்கியத்தை விரும்புற நிறைய பேரு இந்த விலைக்கு வாங்குறாங்க. ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு நாட்டுமாட்டுப் பாலைத்தான் நிறைய பேரு கொடுக்கிறாங்க. ஒருநாளைக்கு கிடைக்கிற 78 லிட்டர் பாலைச் சராசரி 50 ரூபாய் விலை வெச்சுகிட்டாலும் மாசம் 1,17,000 ரூபாய் கிடைக்கும். ஆடு விற்பனைமூலம் மாசம் ரூ.25,200, கோழி விற்பனைமூலம் ரூ.27,800. கோழி முட்டைகள், சாண எரு, குதிரை லத்தி விற்பனை மூலமா மாசம் ரூ.21,000 கிடைக்கும். அதோடு, வருடத்துக்கு ஒருமுறை ஒரு குதிரையை ரூ. 5 லட்சம் வரை விலை வெச்சு விற்பனை செய்வேன். அந்த வகையில், மாசம் ரூ.33,000 வரை வருமானம் கிடைக்கும். ஆக, எல்லாம் சேர்த்து இப்போ மாசத்துக்கு ரூ.2,24,000 கிடைக்குது. இதுல தீவனம், சம்பளம், மத்த செலவுக்கு 1,24,000 ரூபாய் ஆகிடும். அதுபோக, 1,00,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். இந்த லாபம் ஒரேமாதிரி நிலையா இருக்காது. அப்பப்போ மாறுபடும். இப்போதான் எங்க அம்மா, ‘இனி பயமில்லைடா. தொழில்ல நீ தேறிட்டே’னு தட்டிக்கொடுக்குறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னதான் எனக்குத் திருமணம் ஆச்சு. மனைவி கீர்த்தனாவும் என்னோட பண்ணையில ஆர்வமா இணைஞ்சு செயல்படுறாங்க.

அடுத்த முயற்சியா, செம்மறி ஆடுகள்ல இருந்து தரமான, ருசியான பிரியாணி தயாரிச்சு, மதிப்புக்கூட்டல் முறையில் விற்பனை செய்ய நினைச்சேன். அதற்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்து, சோதனை செய்தும் பார்த்தாச்சு. செம்மறி ஆடுகள்ல பிரியாணி தயாரிச்சு, அதை ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட கடை மூலமா, பார்சல் முறையில் மட்டும் விற்பனை செய்ய இருந்தேன். ஆனால், அதைச் செயல்படுத்துவதற்குள் கொரோனா வந்து, தடுத்துடுச்சு. கொரோனா பிரச்னை, ஊரடங்கு எல்லாம் முடிவுக்கு வந்தபிறகு, பிரியாணி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தொடங்கிவிடுவேன். கண்டிப்பாக, அதிலயும் ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று நம்பிக்கை வார்த்தைகளில் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, சரவண பிரபு,

செல்போன்: 99524 91213.

குதிரை வளர்ப்பு பெரிய வருமானம் தரும் தொழில்!

குதிரை வளர்ப்பு பற்றி கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அரசுக் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர் கலைவாணனிடம் பேசினோம்.

“தமிழகத்தில் குதிரை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று வருடங்களில் 2,000 குதிரைகள் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் மார்வாரி, காட்டியவாரி, சிந்தி உள்ளிட்ட இந்திய போர் குதிரைகளின் மீதான மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதனால், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதிகபட்சம் பத்து லட்சத்துக்கு விற்பனையான அந்தவகை குதிரைகள், இப்போது 70 லட்சம்வரைக்கும் விலைபோகிறது. அதிகபட்சம் ஒருகோடி வரைகூட விலை போயிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகபட்சம் ஒரு குதிரை ஒரு கோடிக்கு விலை போயிருக்கிறது.

அழகு, உடல் அமைப்பு, கால்கள், பளபளப்பு, பராமரிப்பு ஆகிய அம்சங்களை வைத்து, ஒரு குதிரையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய அளவில் பூனா, பாரங்கடா, ராஜஸ்தானில் உள்ள புஷ்கர்னு பல இடங்களில் குதிரைக் கண்காட்சி நடக்கும். அங்கு வரும் குதிரைகளின் அழகை வைத்து, அதன் மதிப்பை நிர்ணயிப்பார்கள். தமிழகத்தில் அந்தியூரில் இந்தக் குதிரைக் கண்காட்சி கலாசாரம் தொடங்கியிருக்கிறது. கண்காட்சிகளில் மதிப்பைப் பெரும் குதிரைகள்மூலம் உருவாக்கப்படும் புதிய குதிரை குட்டிகளே தலா ஒன்று ரூ.20 லட்சத்துக்கு விலைபோகிறது. அதனால், தமிழகத்தில் குதிரை வளர்ப்பும், அது தொடர்பான வியாபாரமும் அமர்க்களமாக நடக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒரு குதிரையைப் பராமரிக்க, மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும். குதிரையைப் பாதிக்கும் நோய்களில் முதன்மையாக இருப்பது வயிற்றுவலிதான். 60 முதல் 70 சதவிகிதம் குதிரைகள் இறப்பதற்கு, வயிற்றுவலிதான் காரணம். அதனால், வயிற்றுவலி வந்தால், தகுந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். வயிற்றுவலி வந்தால், குதிரை அமைதியாக இருக்கும். இரண்டு முன்னங்கால்களையும் தரையில் பலமாகத் தட்டும், அதேபோல், தரையில் படுத்து உருளும். உடனே அப்போதே மருந்து கொடுக்க வேண்டும். அதேபோல், குதிரையைப் பலமாகத் தாக்கும் பிரச்னை, அதற்கு ஏற்படும் கால்வலிதான். லாடம் சரியாகக் கட்டாதது, தீனியை மாற்றுவது, சீழ் வைப்பது எனப் பல காரணங்களால் கால்வலி ஏற்படும். அதை இனம்கண்டு சரி செய்ய வேண்டும். அதேபோல், சளிப் பிரச்னையும் குதிரைக்குக் குடைச்சல் கொடுக்கும். ரத்தத்தில் வரும் உன்னிக்காய்ச்சலும் குதிரையை நிலைகுலையச் செய்துவிடும். கவனமா தகுந்த மருந்தைக் கொடுக்க வேண்டும்.

குட்டியை ஆறுமாதம் கழித்துத்தான் தாய் குதிரையிடமிருந்து பிரிக்க வேண்டும். 400 முதல் 500 கிலோ வரை எடை கொண்ட ஒரு குதிரைக்குத் தினமும் 20 முதல் 25 கிலோவரை தீனி கொடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குதிரைகளுக்குப் பூச்சிமருந்து கொடுக்க வேண்டும். 24 மணிநேரமும் தண்ணீரும், தீனியும் குதிரைகளுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். குதிரைகளைக் கட்டி வைக்காமல், அவிழ்த்துவிட்டு மேயவிட வேண்டும். இதெல்லாம் செய்தால், இப்போது உள்ள சூழலில் குதிரை வளர்ப்பு நல்ல வருமானம் தரும் தொழில்” என்றார்.

பெரிய முதலீடு, பெரிய லாபம்!

ஈரோடு மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புரவிமுத்து. பல ஆண்டுகளாகக் குதிரை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர். குதிரை வளர்ப்புக் குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘குதிரை வளர்ப்பு லாபகரமான தொழில்தான். ஆனால் அர்ப்பணிப்பும் ஆர்வமும் உள்ளவர்களால்தான் வளர்க்க முடியும். ஆரம்பகட்ட முதலீடு அதிகம் தேவைப்படும். மாடுகளுக்குச் சுழிகள் உள்ளதுபோல்தான் குதிரைகளுக்கும் சுழி உண்டு. குதிரை வளர்க்கும் நிறையபேர் கெளரவத்திற்காகவும், கம்பீரத்திற்காகவும் அதை வாங்கி வீட்டில் கட்டுகிறார்கள். நல்ல சுழிகள் உள்ள குதிரைகள் பல லட்சங்களில் விலைபோகும்.

கால்நடை: ஆடு, மாடு, கோழி, குதிரை... மாதம் ரூ.1 லட்சம் லாபம்!

பெண்குட்டிகளாகத் தேடிப்பிடித்து வாங்கி வந்து வளர்த்தால், அவை மூன்று ஆண்டுகளில் சினைப் பருவத்திற்கு வந்து விடும். குட்டிகள் ஈன்றதும் அவற்றை வளர்த்து 7 மாதங்கள் முதல் விற்பனை செய்யலாம். 7 மாத குட்டி 2 லட்சம்வரை விலைபோகும். 3 ஆண்டுகள் வயதுள்ள குதிரைகளுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை கூடும் அந்தியூர் குதிரைச் சந்தை பிரபலமானது. 10 நாள்கள் தொடர்ந்து நடக்கும் அந்தச் சந்தையில் குதிரைகளை விற்பனை செய்யலாம். நாடு முழுவதும் இருந்து குதிரை வாங்கவும் விற்கவும் நிறையபேர் அங்கு வருவார்கள். வேறு தரகர் மூலமும் தேவைப்படும்போது மற்ற நாள்களிலும் விற்பனை செய்ய முடியும். கொள்ளு, குதிரை மசால், வைக்கோல் உள்ளிட்ட தீவனம் அவசியம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்குத் தலா ஒரு குதிரைக்கு 250 ரூபாய் செலவாகும். மொத்தத்தில் பெரிய முதலீடு, பெரிய லாபம்’’ என்கிறார் புரவிமுத்து.