Published:Updated:

வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள்.. பீதியில் உறையும் நீலகிரி மலைக்கிராம மக்கள்!

leopard
leopard

நீலகிரியில் வன விலங்குகள் நடமாட்டம் குறித்து தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன

எப்போதோ, எங்கோ, யாரோ ஒருவரால் எடுக்கப்பட்ட போட்டோ அல்லது வீடியோவையும் ஊரின் பெயரையும் மாற்றி மக்களை பீதி அடையச் செய்யும் பதிவுகள் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரியில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன.

elephant
elephant

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்பை ஒட்டிய பகுதிகளுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது மனித-விலங்கு எதிர்கொள்ளல்களும் நடைபெறுகின்றன.

இதை சாதகமாக்கிக் கொண்ட பலர் யானை சிறுத்தை, புலி, கரடி, பாம்பு உள்ளிட்டவற்றை தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை பீதி அடையச் செய்கின்றனர். இதனால் தேவையின்றி மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வனத்துறைக்கும் பெரும் தலைவலி ஏற்படுகிறது.

sloth bear
sloth bear

வதந்திகளை பரப்புவோர் குறித்து காட்டுயிர் ஆர்வலர்கள் ``தற்போது அனைவரிடமும் கைப்பேசி உள்ளது. மேலும், பல இடங்களில் சிசிடிவி-கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வன விலங்குகளை எளிதில் படம் பிடிக்க முடிகிறது. இவற்றைத் தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். `இந்தப் பூச்சி உலகிலேயே மிகவும் ஆபத்தான கொடிய விஷத்தைக் கொண்டது. இது குழந்தைகளை மட்டுமே தேடிக்கொல்லும். தற்போது இந்தப் பூச்சி நமது பகுதிக்கு வந்துள்ளது இதை உடனே அனைத்து குரூப்புக்கும் பகிருங்கள்.'

`மனிதர்களின் ரத்தத்தை மட்டும் உறிஞ்சி குடிக்கும் கருஞ்சிறுத்தை ஒன்று பல பேரை கொன்றுவிட்டு தற்போது நமது ஏரியாவுக்கும் வந்துவிட்டது. உடனே அனைத்து குரூப்புக்கு பகிருங்கள்' என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சேர்த்து பரப்புகின்றனர். உதாரணமாக விஷத்தன்மையற்ற ஒரு பாம்பை கொடிய விஷம் கொண்டது என படங்களுடன் பகிர்கின்றனர். இதனால் அடித்துக்கொல்லப்படுகிறது. மேலும், வேறு எங்கோ ஓர் இடத்தில் எடுக்கப்பட்ட படங்களை நீலகிரியில் எடுக்கப்பட்டது என வதந்திகளைப் பரப்புகின்றனர். இதனால் தேவையின்றி மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

tiger
tiger

இது குறித்து வனத்துறையினர், ``எங்களுக்கு நாள்தோறும் வனவிலங்குகள் ஊருக்குள் உலவுவதாக ஏராளமான படங்களை அனுப்புகின்றனர். இவற்றில் பெரும்பாலும் தவறாகவே வருகிறது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்டதைக் கூட நீலகிரி என பரப்புகின்றனர். இதுபோன்று வதந்திகளை பரப்புவோரை கண்காணித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு