Published:Updated:

`இனி இதற்கு எந்த மதிப்பும் இல்லை!' - முதுமலையில் எரிக்கப்பட்ட யானையின் கோரைப் பற்கள், மான் கொம்புகள்

விலை மதிப்புமிக்க பொருள்கள் என நம்பப்படுபவற்றை மதிப்பிழக்கச் செய்யும் வகையில் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் இறந்த காட்டு யானைகளின் கோரைப் பற்கள், மான் கொம்புகள் ஆகியவை எரியூட்டப்பட்டன.

Mudumalai
Mudumalai

பழங்காலங்களில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் உடல் பாகங்களைக் கடத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக அவை வேட்டையாடப்பட்டு வந்தன. இதனால் வனப்பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டு வந்தன. வேட்டையைத் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதையும் மீறிக் கடத்திய உடல் பாகங்களை கைப்பற்றினால் அவற்றை எரிக்க வேண்டும். மேலும், இயற்கை முறையில் இறந்த புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் உடல்கள், யானைகளின் தந்தங்கள் ஆகியவற்றைத் தீயிட்டு எரியூட்டப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

யானைத் தந்தம், மான் கொம்புகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருப்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ன்படி சட்ட விரோதமாகும். அவ்வாறு சட்டவிரோதமாகப் பதுக்கி வைப்பவர்களைக் கைது செய்து விலங்குகளின் உடல் பாகங்களை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றுகின்றனர்.

Mudumalai
Mudumalai

மேலும், வனப்பகுதியில் இயற்கையான முறையில் இறந்த மற்றும் வேறு காரணங்களால் இறந்த காட்டு யானைகளின் தந்தம், புலி, சிறுத்தையின் உடல் பாகங்கள், மான் கொம்புகள் போன்றவை சேகரிக்கப்பட்டு வனத்துறையினரின் கட்டுபாட்டில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அவ்வப்போது உரிய வழிகாட்டுதல்களுடன் எரியூட்டப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சீகூர், சிங்காரா, மசினகுடி மற்றும் தெங்குமரஹாடா ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்த காட்டு யானைகளின் தந்தங்கள், மான் கொம்புகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அழிக்க முதன்மை வனப் பாதுகாவலா் அனுமதி அளித்துள்ளார். இதைத் தொடா்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெண் யானைகளின் உளிக்கொம்பு [tushes] எனப்படும் கோரைப்பற்கள் 26 , 2 மான் கொம்புகள் ஆகியவற்றை நேற்று காட்சிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கிருஷ்ணகுமார் கவுசல், வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலா்கள் முன்னிலையில் மசினகுடி லாக்அவுஸ் வளாகத்தில் தீயிட்டு எரியூட்டப்பட்டன.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கிருஷ்ணகுமார் கவுசல் கூறுகையில்

`` வனப்பகுதியில் இறந்த யானை, மான் போன்ற வன விலங்குகளின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வனத்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலுடன் சுற்றுச்சூழல் ஆர்வலா்கள் மற்றும் வனத்துறையினா் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு யானைகளின் கோரைப் பற்கள், மான் கொம்புகள் என 24 உடல் பாகங்கள் எரியூட்டப்பட்டன” என்றார்.

list
list

இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். `` யானைத் தந்தம் முதல் புலிப் பல், சிறுத்தை நகம் வரை அனைத்தும் எரிக்கப்படும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இல்லை; மற்றொன்று வேட்டைக்காரர்களாலும் மக்களாலும் விலை மதிப்புமிக்கதாக நம்பப்படும் விலங்குகளின் உடல் பாகங்கள் எரிக்கப்படுவதன் மூலம் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற எண்ணம் உருவாகும்” என்றார்.