Published:Updated:

`குட்டியைக் காப்பாற்றச் சென்ற யானைகளுக்கு நேர்ந்த சோகம்!’ - தாய்லாந்தில் நடந்த பாசப்போராட்டம்

அந்த யானைக்குட்டியைக் காப்பாற்ற வந்த இரண்டு யானைகள் நீர்வீழ்ச்சிக்கு மேலே சோர்ந்து நின்றிருப்பதும் தெரியவந்தது.

யானைகள்
யானைகள் ( bangkokpost )

உயிரினங்கள் மனிதர்களைக்காட்டிலும் உணர்வு ரீதியாக மேம்பட்டவை. அஃறிணைகளுக்கு 5 அறிவு என்றபோதிலும், அவற்றிற்கான அன்பு, அறிவைத்தாண்டியது. எந்த உயிரினமாக இருந்தாலும், அவை பாசத்தால் பிணைக்கப்பட்டது. `குட்டி ஒன்றை மீட்கும் பாசப்போராட்டத்தில் 5 யானைகள் தங்கள் உயிரை இழந்துள்ளன’. தாய்லாந்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோர்வடைந்த இரண்டு யானைகள்
சோர்வடைந்த இரண்டு யானைகள்
bangkokpost

`காஹோ யாய்’ என்ற தேசிய பூங்கா தாய்லாந்தில் இருக்கிறது. இங்கு யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. இந்த பூங்காவைப் பொறுத்தவரை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பூங்காவுக்குள் ஹயூ நரோக் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் யானைகளின் சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலை 6 மணி அளவில் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, 3 வயதான யானைக்குட்டி ஒன்று நீர்வீழ்ச்சிக்குக் கீழே மூழ்கி கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அந்த யானைக்குட்டியைக் காப்பாற்ற வந்த இரண்டு யானைகள் நீர்வீழ்ச்சிக்கு மேலே சோர்ந்து நின்றிருப்பதும் தெரியவந்தது. ஊழியர்கள் நீர்வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கு மேலும் 5 யானைகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், `முதலில் 3 வயதுடைய குட்டியானை நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்துள்ளது.

மீட்பு பணி
மீட்பு பணி
bangkokpost

இதையடுத்து அந்த யானையைக் காப்பாற்ற மேலும் சில யானைகள் முயற்சி எடுத்திருக்கலாம். அப்போது, அந்த யானைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர். மேலும், சோர்வடைந்து நீர்வீழ்ச்சிக்கு மேல் நின்றுகொண்டிருந்த 2 யானைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தைத்தொடர்ந்து நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.