Published:Updated:

`காட்டுப்பக்கமே போவதில்லை!' கரடியைப் பிடித்து அடர் வனத்தில் விடுவித்த ஊட்டி வனத்துறையினர்

உணவு தேடலுக்குக் காட்டைப் பயன்படுத்தாமல் குடியிருப்பைச் சார்ந்து இருந்த ஒற்றைக் கரடியைக் கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கரடி
கரடி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள முள்ளிமலை கிராமத்தைச் சுற்றி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒற்றைக் கரடி ஒன்று உலவி வந்தது.

கரடி
கரடி

இந்தக் கரடி அருகில் இருந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து அங்கன்வாடி மையக் கதவுகளை உடைத்து, உள்ளே இருக்கும் உணவுப் பொருள்களை உண்பதையும், அதேசமயம் அருகில் இருக்கும் கோயிலுக்குள் புகுந்து எண்ணெய் குடிப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்து. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படும் உணவுக்கழிவுகளையும் உண்டுவந்தது.

`மனிதர்கள் பொருட்டல்ல; தனியாகவே நடமாட்டம்!' - ஊட்டி வனத்துறை அதிகாரிகளைக் குழப்பும் புலிக்குட்டி

அச்சமடைந்த ஊர்மக்கள் இதுதொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உணவு தேடலுக்கு வனத்தைப் பயன்படுத்தாம,ல் குடியிருப்பைச் சார்ந்து இருந்த இந்தக் கரடியைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்தப் பள்ளி வளாகத்திற்கு அருகில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கூண்டு வைத்து, அதற்குள் பழங்களையும் வைத்தனர்.

கரடி
கரடி

நேற்று முன்தினம் இரவு கூண்டிற்குள் வைக்கப்பட்டிருந்த பழங்களைச் சுவைக்க வந்த கரடி கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

கூண்டில் சிக்கிய கரடி, ஆக்ரோஷமாகச் சத்தமிட்டுக் கூண்டை உடைக்க முயற்சி செய்தது. இதனால், அந்தக் கூண்டை போர்வையைக் கொண்டு மூடிய வனத்துறையினர், கரடியை அடர் வனப் பகுதியான முக்கூர்த்தி தேசிய பூங்காவிற்கு உட்பட்ட பங்கிதபால் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

கரடி
கரடி

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முள்ளிமலை கிராமப் பகுதியைச் சுற்றி இந்தக் கரடி உலவி வந்தது. இதனால் கூண்டு வைத்துப் பிடித்தோம். சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி என்பது தெரியவந்தது. பாதுகாப்பாக எடுத்துச் சென்று அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தோம்" என்றார்.