Published:Updated:

`தன் உடலை தானே விழுங்கிய பாம்பு!' - பசியால் நடந்த விபரீதமா?

பசியால் பாம்பு இப்படி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது

பாம்பு
பாம்பு

பொதுவாக விலங்குகள் பசி எடுத்தால் மட்டுமே மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும். மற்றபடி வேறு உயிரினங்களை விழுங்குவதற்கான தேவை அவற்றுக்கு இருப்பதில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாகப் பாம்பு ஒன்று தன் உடலையே விழுங்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பாம்பு
பாம்பு

பென்சில்வேனியாவில் Forgotten Friend என்ற பெயரில் ஊர்வன சரணாலயம் செயல்பட்டு வருகிறது. அங்கே பல வகையான ஊர்வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் அந்த சரணாலயத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸி ரோத்தகர் ( Jesse Rothacker ) என்பவர் Kingsnake வகை பாம்பு ஒன்று அதன் வால் பகுதியை விழுங்கியிருப்பதைப் பார்த்திருக்கிறார். அதை அப்படியே ஃபேஸ்புக்கில் வீடியோவாகப் பதிவிட அது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

Jesse Rothacker
Jesse Rothacker

`` சில நேரங்களில் பாம்பு அதன் வாலை வேறொரு பாம்பு என நினைத்துக்கொள்ளும். கடித்த பின்னர்தாம் அது தன்னுடைய உடல் என்பதை உணர்ந்துகொள்ளும். வழக்கமாக அவை அப்படிச் செய்வதில்லை என வீடியோவில் கூறுகிறார். முதலில் பாம்பு வாலை விழுங்கியிருப்பதைப் பார்த்த அவர் பின்பு அதிலிருந்து அதை விடுவிக்கிறார். உடலை அதன் வாயிலிருந்து விடுவிப்பது சற்று கடினமாகவே இருந்திருக்கிறது. பசியால் பாம்பு அப்படிச் செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சாதாரணமாக இந்த வகை பாம்புகள் மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்பது வழக்கமான ஒன்றுதான். இந்த சரணாலயத்தின் 15 வருட வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என ரோத்தகர் தெரிவித்திருக்கிறார்.

பாம்பு
பாம்பு

`` அது பசியாலோ அல்லது மன அழுத்தத்திலோ இருந்திருக்கலாம். ஆனால், அது மன அழுத்தத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மேலும், அதற்காக உணவு மற்றும் தண்ணீர் தாராளமாகவே கிடைத்து வந்தது. மறைந்துகொள்வதற்கான இடம், பொருத்தமான வெப்பநிலை ஆகியவை மற்ற பாம்புகளைப் போல இதற்கும் இருந்தது. ஆனால், இது இப்படி நடந்துகொண்டதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை" என்கிறார்கள்