Published:Updated:

திரும்ப வரும் தீப்பெட்டி சிவிங்கி

சிவிங்கிப்புலி
பிரீமியம் ஸ்டோரி
சிவிங்கிப்புலி

எதிர்ப்புகளை மீறி இப்போது சிவிங்கிப்புலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே அடுத்த கட்டத்தில் சில அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

திரும்ப வரும் தீப்பெட்டி சிவிங்கி

எதிர்ப்புகளை மீறி இப்போது சிவிங்கிப்புலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே அடுத்த கட்டத்தில் சில அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

Published:Updated:
சிவிங்கிப்புலி
பிரீமியம் ஸ்டோரி
சிவிங்கிப்புலி

ஒரு தீப்பெட்டியின் அட்டையில் அரிவாளோடு இருக்கும் மனிதர் மீது சிவிங்கிப்புலி பாயும் சித்திரம், நம் சிறுவர்களும் அறிந்தது. அவர்கள் அறியாத விஷயம், அந்தச் சிவிங்கிப்புலி இந்தியாவில் அழிந்துவிட்ட உயிரினம் என்பது!

ஒரு காலத்தில் இந்தியா முழுவதிலும் இருந்த புல்வெளி வாழிடங்களில் பரவலாகக் காணப்பட்ட உயிரினம், சிவிங்கி அல்லது சிவிங்கிப்புலி (Cheetah). நிலவாழ் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடிய வேட்டையாடி இனத்தை, பல முகலாய மன்னர்கள் வேட்டைக்குப் பயன்படுத்தினர். அக்பர் நாமா தொடங்கி சரபோஜி மன்னரின் நிதி உதவியோடு உருவான விலங்குகள் ஓவிய நூல் வரை பல்வேறு வரலாற்று ஆவணங்களில் சிவிங்கிகள் பற்றிய குறிப்பைப் பார்க்க முடியும். வேட்டையாடுதல், வாழிட இழப்பு போன்ற காரணங்களால் அருகி வந்த சிவிங்கி இனம், இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1955-ல் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கி இனத்தை மீண்டும் நிலைநிறுத்த, பிற நாடுகளிலிருந்து சிவிங்கிகளைக் கொண்டு வந்து இங்கே அறிமுகப்படுத்தும் யோசனை எழுபதுகளிலேயே தொடங்கிவிட்டது. 2009-ல் இந்தத் திட்டம் மீண்டும் துளிர்விட்டது. ‘பரிசோதனை முயற்சியாக இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை அறிமுகப்படுத்தலாம்’ என்று 2020 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இப்போது முதற்கட்டமாக நமீபியாவிலிருந்து சில சிவிங்கிகள் மத்தியப் பிரதேசத்தின் குனோ-பல்பூர் தேசியப் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றன.

இந்தத் திட்டத்துக்குச் சூழலியலாளர்களும் காட்டுயிர் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானதே. பல்வேறு சூழல்சார் திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறையும் நடைமுறைச் சிக்கல்களும் நிலவிவரும் வேளையில், அதிகமான நிதியும் ஆள்பலமும் உழைப்பும் தேவைப்படுகிற ஒரு புதிய திட்டத்துக்கு என்ன அவசியம் என்ற கேள்வி எழுகிறது.

இந்தத் திட்டத்தின் அறிவியல் அடிப்படை பற்றியும் பல கேள்விகள் உண்டு. நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட இருக்கிற ஆப்பிரிக்கச் சிவிங்கி, முன்பு இந்தியாவில் இருந்த ஆசியச் சிவிங்கியிலிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டது. ஆகவே அது ஆசியச் சிவிங்கியைப் போலவே இந்தியாவில் தன்னைத் தகவமைத்துக்கொள்ளுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால்கூட, இந்தியக் காடுகளில் உலவப்போவது ஆப்பிரிக்கச் சிவிங்கிதானே தவிர ஆசிய இனம் அல்ல. ஆக, ‘ஆசியச் சிவிங்கி இனத்தை எப்படி மீண்டும் கொண்டுவருவது?’ என்ற கேள்வி அப்போதும் இருக்கும். ‘இந்தத் திட்டத்தின்மூலம் வரலாற்றுரீதியான சிவிங்கிகளின் எண்ணிக்கையையும் பரவலையும் திரும்பக் கொண்டு வருவோம்’ என்கிறது அரசு. ‘நமீபியாவில் இருந்து அடுத்த சில ஆண்டுகளில் வரப்போகும் சிவிங்கிகளின் எண்ணிக்கை அதற்குப் போதாது’ என்கிறார்கள் பெரும்பூனை ஆராய்ச்சியாளர்கள். நிலையாக இனப்பெருக்கம் செய்து அந்தச் சூழலில் நிறுவப்பட வேண்டுமானால் இன்னும் அதிக சிவிங்கிகள் வேண்டும் என்பது அவர்களின் கணிப்பு. இதில் வேறு சில நடைமுறைச் சிக்கல்களும் உண்டு. அந்த வாழிடத்தில் இருக்கப்போகும் கால்நடைகளை சிவிங்கிகள் எப்படி எதிர்கொள்ளும் என்பது தெரியவில்லை. அங்கே ஏற்கெனவே இருக்கும் சிறுத்தைகளை (Leopards) இடம்பெயர்ப்பதும் பெரிய சவால்.

திரும்ப வரும் தீப்பெட்டி சிவிங்கி
slowmotiongli

‘‘இப்போதைக்கு கிர் பூங்காவில் இருக்கும் சிங்கங்களை இடம் பெயர்ப்பதுதான் இந்தியச் சூழலியலின் அவசரத் திட்டமாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சிவிங்கிப்புலி திட்டம் சிங்கங்கள்மீதான கவனத்தைக் குலைக்கிறது’’ என்கிறார், சூழலியலாளர் ரவி செல்லம்.

சவால்களையும் மீறி இந்தியாவில் ஒருவேளை சிவிங்கிகள் நிலைத்துவிட்டால் புலி, சிங்கம், பனிச்சிறுத்தை (Snow Leopard), மேகச்சிறுத்தை (Clouded Leopard), சிறுத்தை, சிவிங்கி என ஆறு ஊன் உண்ணிப் பெரும்பூனைகளைக் கொண்ட ஒரே நாடாக இந்தியா இருக்கும். மலாவியில் சிவிங்கிகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டபோது அங்கு ஒரு சங்கிலித்தொடர் விளைவாக பாறுக்கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை 2011-ல் வெளிவந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதுபோலவே எதிர்பாராத நல்ல விளைவுகளும்கூட நடக்கலாம். உலகிலேயே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்துக்கு ஊன் உண்ணிப் பெருவிலங்கு ஒன்று கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை. ஆகவே இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்குமா என்பது யூகமாகத்தான் இருக்கிறது.

எதிர்ப்புகளை மீறி இப்போது சிவிங்கிப்புலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே அடுத்த கட்டத்தில் சில அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும். புல்வெளி மற்றும் அதுசார்ந்த வாழிடங்கள் தனி கவனத்தோடு பேணப்படவேண்டும். சிவிங்கிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இங்கு ஏற்கெனவே இருக்கும் விலங்குகளின் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து செயல்படவேண்டும். சிவிங்கிப்புலிகள் ஓரளவு நிலைத்தபின்பு உடனடியாக சிங்கங்களின் இடப்பெயர்வு பற்றிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இங்கு ஏற்கெனவே நிலவுகிற காட்டுயிர் - மனித முரண்கள் (Human-wildlife conflict) பட்டியலில் சிவிங்கிகளும் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஒருவேளை சிவிங்கிகள் நிலைப்பதில் ஏதும் சறுக்கல் ஏற்பட்டால் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டு, அதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியை வேறு முக்கிய சூழல் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அனுப்பவேண்டும்.

சில முக்கிய வாழிடங்களைப் பணயமாக வைத்துத் தொடங்கப்பட்டிருக்கும் ஆட்டம் இது. வெற்றி பெறுவோமா இல்லையா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.