Published:Updated:

என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி?

 ‘சின்னத்தம்பி’ யானை
பிரீமியம் ஸ்டோரி
News
‘சின்னத்தம்பி’ யானை

பலருக்கும் யானைகள் குறித்த பார்வையை மாற்றிய சின்னத்தம்பி, மீண்டும் பிடிக்கப்பட்டு இப்போது கும்கி யானையாக பயிற்சியெடுத்துவருகிறது

இயற்கையைச் சற்றும் புரிந்துகொள்ளாமல் எழுதப்படும் ‘அட்டகாசம் செய்யும் யானைகள்’ என்ற செய்தியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, ‘அட்டகாசம் செய்வது யானைகள் இல்லை... மனிதர்கள்தான்!’ என்று பாடம் எடுத்தது ‘சின்னத்தம்பி’ யானை. சின்னத்தம்பியை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன..?

`கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்துகிறது’ என்ற புகாரில், கடந்த ஆண்டு வனத்துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது சின்னத்தம்பி. டாப்ஸ்லிப் வரகளியாறு வனத்தில் விடப்பட்ட அந்த யானை, சில நாள்களிலேயே தனது வாழ்விடத்தைத் தேடி மரபார்ந்த வழித்தடங்களில் நடக்க ஆரம்பித்தது. 100 கிலோமீட்டர் தூரம் நடந்தாலும், ஒருவரைக்கூடத் தாக்கவில்லை. ஆனால், அந்த நாள்களில் யானைகள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் பேசவைத்தது சின்னத்தம்பி.

பலருக்கும் யானைகள் குறித்த பார்வையை மாற்றிய சின்னத்தம்பி, மீண்டும் பிடிக்கப்பட்டு இப்போது கும்கி யானையாக பயிற்சியெடுத்துவருகிறது. இதுவும் ஒருவகையில், இயற்கைக்கு முற்றிலும் முரணான செயலே. வனத்துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் யானைகளையும் நாம் ‘பேரிழப்பு’களாகத்தான் கொள்ள வேண்டும். வனத்தில் இறந்துபோன யானைகளின் துயரங்களைவிட, பிடிபட்ட யானைகளுக்கான துயரங்கள் மிக அதிகம். காட்டின் நினைவுகளூடாக அலையும் அடிமை வாழ்க்கை அது.

அப்படித்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சின்னத் தம்பிக்கு இரண்டு பாகன்கள் பயிற்சி கொடுத்துவருகிறார்கள். எப்படியிருக்கிறான் சின்னத்தம்பி? அவனைப் பார்ப்பதற்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கி, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் அருகேயுள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்குச் சென்றோம்.

என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி?

பனி போர்த்திய அந்தச் சாலையில், தூரத்திலிருந்தே வரவேற்றன யானைகளின் விதவிதமான பிளிறல்கள். யானைகளின் நுண்ணுணர்வுகளையும் பாஷையையும் அறியாத நமக்கு, அவை வெறும் பிளிறல்கள் மட்டுமே. வனம் பறிக்கப்பட்ட பேருயிர்களின் கனத்தை, வேதனை மொழியை ஒருபோதும் மனிதர்களால் உணரவே இயலாது. இதோ சின்னத்தம்பி சிறைவைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். அட... சின்னத்தம்பியா அது! அதன் உடல்மொழியே மாறிப்போயிருந்தது.

ஒருகாலத்தில் காட்டாறுகளில் சேற்றை வாரிப் பூசிக்கொண்டு மணிக்கணக்கில் குளித்துக் கொண்டிருந்த சின்னத்தம்பி அப்போதுதான், பிளாஸ்டிக் குழாய் தண்ணீரில் ‘ஷவர்’ பாத் முடித்துவிட்டு வந்திருந்தான். அச்சுசோறு போல ஓர் உணவைச் சின்னத்தம்பிக்குக் கொடுத்துவிட்டு, நம்மிடம் பேசத் தொடங்கினார் பாகன் செல்லதுரை.

‘‘நான் 17 வருஷமா பாகனா இருக்கேன். சின்னத்தம்பியை ரெண்டாவது தடவை பிடிச்சப்ப, கலீம் கும்கி யானையை இயக்கிக்கிட்டிருந்தேன். கலீமைவிட சின்னத்தம்பி பெருசா இருந்தான். எந்த யானையா இருந்தாலும் 90 நாள் மரக் கூண்டுல அடைச்சு பயிற்சி கொடுப்போம். சின்னத்தம்பிக்கும் அப்படித்தான். காட்டுலயே சுத்திக்கிட்டு இருந்த யானைக்கு, நம்ம பாஷை புரிய கொஞ்சம் டைம் எடுக்கும். சின்னத்தம்பியைக் கொஞ்சம் கொஞ்சமா, எங்க கமென்ட்ஸைக் கேட்கவெச்சோம். ‘வர்தா’ அப்பிடினா ‘பக்கம் வா’னு அர்த்தம். படுக்கறதுக்கு ‘பைட்’னு சொல்வோம். படுத்தப்புறம் அதைத் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்துவோம். ‘ஊட்’னா எந்திரிக்கணும். ‘சை’னா அசையாம நிக்கணும். ‘வெடியேன்’னு சொன்னா போகணும். ‘டிரை’னு சொன்னா ஏதாவது பொருளை எடுக்கணும்.

ஆரம்பத்துல இது யானைக்குப் புரியாது. தொடர்ந்து பேசப் பேசப் புரிஞ்சுக்கும். சின்னத்தம்பி பெரிய காட்டு யானை. பிடிச்சப்போ சாதுவா இருந்தாலும், ட்ரெய்னிங்ல கெத்தா நின்னுக்கிட்டிருந்தான். சின்னத்தம்பிக்கு காலையிலயும் சாயங்காலமும் மூணு மணி நேரம் ட்ரெய்னிங் கொடுத்தோம். கரும்பை எங்க பக்கம்வெச்சுட்டு ‘வர்தா... வர்தா’னு சொல்லுவோம். முதல்ல தயங்கினவன், பிறகு வந்து கரும்பைச் சாப்பிட்டான். அதுக்கப்புறம் தட்டிக் கொடுத்து, அதுக்கு நம்பிக்கை கொடுத்தோம்’’ என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொரு பாகன் காளியப்பன் வந்து சேர்ந்தார்.

என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி?

‘‘எனக்கு முதல் ட்ரெய்னிங்கே சின்னத்தம்பிதான். தந்தத்துல குத்திருமோ... மிதிச்சுருமோனு ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தேன். ஏற்கெனவே, மனுசங்ககூட ஓரளவுக்குப் பழகி, யாரையும் அடிக்கலைங்கறதால தைரியம் இருந்துச்சு. ஆனா, யானையை வேடிக்கை பார்க்கறதுக்கும், பக்கத்துல நின்னு ட்ரெய்னிங் கொடுக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு. முதல்ல அதுக்கு சாப்பாட்டை, ஒரு மரத்துலதான் வெச்சோம். அதுக்கு நேரடியா நாங்க சாப்பாடு ஊட்ட ஒன்றரை மாசம் ஆச்சு. ஒருவழியா கூண்டுக்குள்ள எங்க பேச்சைக் கேட்க ஆரம்பிச்சான்னு, 90 நாள் கழிச்சு வெளியே கூட்டிட்டு வந்தோம். வெளியே வந்த பிறகு, அவனுக்கு கெத்து வந்துருச்சு. எங்களை எதிர்க்க ஆரம்பிச்சான்.

ஒருதடவை, சின்னத்தம்பி என்னை பலமா உதைச்சுட்டான். கொஞ்ச தூரம் தள்ளிப்போய் விழுந்தேன். அப்போ மட்டும் உருண்டு போகாட்டி என்னை மிதிச்சிருப்பான். என்னோட கால் பெண்ட் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் திரும்பவும் 90 நாள் கூண்டுல அடைச்சு ட்ரெய்ன் பண்ணினோம். அதுக்கு இன்னும் அதிக நம்பிக்கை ஏற்படுற மாதிரி ட்ரெய்னிங் கொடுத்துக்கிட்டு இருக்கோம். அதுக்கான ரிசல்ட்டும் கிடைச்சுது. அட்டாக் பண்ற மனநிலை இப்போ போயிடுச்சு. குழந்தை மாதிரி எல்லாத்தையும் கத்துக்கிட்டு இருக்கான். எங்களுக்கும் சின்னத்தம்பி மேல பயம் போயிடுச்சு.

ஜனவரில இருந்து வெளியேதான் இருக்கான். மஸ்த் (மதம்) காலகட்டத்துல யானைங்க மனநிலை மாறும். ஆனா, அப்போகூட சின்னத்தம்பி என்னை ஏத்துக்கிட்டான். நான் பக்கத்துலயேதான் இருந்தேன். முன்னாடி, குச்சியைவெச்சு பிடிச்சுத்தான் இவனைக் கூட்டிட்டுப் போவோம். இப்போ முன்னாடிவிட்டு, பின்னால நாங்க போறோம்’’ என்ற காளியப்பன், யானையைத் தொட்டு, “டேய் சின்னத்தம்பி...” என்று குரல் கொடுத்தார்.

அதுவரை அமைதியாக நின்றுகொண்டிருந்த சின்னத்தம்பி ஏதோ கட்டளைக்குக் அடிபணிந்தது போல தலையைக் குனிந்து ஆட்டியது. ஒரு கரும்பைக் கொடுத்துவிட்டு செல்லதுரை தொடர்ந்தார். ‘‘யானைங்களோட ஆக்டிவிட்டியைக் கண்காணிக்கிறது ரொம்ப முக்கியம். யானை விரைப்பாவே நின்னுக்கிட்டு இருந்தா, அது கோபத்துல இருக்குனு அர்த்தம். அந்த நேரத்துல யானையைப் பெருசா தொந்தரவு பண்ணாம, கரும்பு கொடுத்து நார்மலாக்கணும்.

என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி?

இப்போ எந்தக் காட்டு யானையும் அசைக்க முடியாத கும்கியா இருக்குது கலீம் யானை. அதுதான் லீடர். ஆனா, கலீமுக்கு வயசாகிடுச்சு. கலீம் இடத்துக்கு சின்னத்தம்பியைத்தான் கொண்டுவர நினைச்சிருக்கோம். கேம்ப்ல 28 யானைங்க இருக்கு. அதுங்க நடந்துக்கறதுலயே தைரியமா இருக்கா, இல்லையானு கண்டுபிடிச்சிடலாம். இங்கே இருக்குற யானைங்க கிட்ட வந்தாலே சின்னத்தம்பி எதுக்கும் அசராம தைரியமா எதிர்த்து நிக்குறான். அதனால, காட்டு யானையே வந்தாலும், சின்னத்தம்பி எதிர்த்து நிப்பான்னு நம்பிக்கை இருக்கு. இதோட ஹைட், வெயிட் எல்லாமே ப்ளஸ்.

கலீம்கூட சில ஆபரேஷனுக்கு அனுப்பி ட்ரெய்னிங் கொடுக்கலாம்னு இருக்கோம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா காட்டு யானைகளை விரட்டுற கும்கியா மாறிடுவான் சின்னத்தம்பி. மக்கள் சீக்கிரமே சின்னத்தம்பியை வெளியே பார்க்கலாம். ஆனா, அவனைப் பழைய சின்னத்தம்பியா இல்லை... ‘கும்கி’ சின்னத்தம்பி யாத்தான் பார்க்க முடியும்’’ என்றபோது மெலிதாகப் பிளிறி, தலையை ஆட்டினான் சின்னத்தம்பி. என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி? கும்கியாக்க வேண்டாம் என்றா... அல்லது வனத்தில் துள்ளித்திரிந்த என்னை இப்படியாக்கிய, `மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்’ என்று ஜி.நாகராஜன் சொன்னதையா!

ஏன் தேவை கும்கி?

சரி, நமக்கு கும்கி யானைகள் ஏன் தேவை? மனிதன் - யானைகள் எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. யானைகளின் வாழிடங்களும், மரபுவழியாக வலசை செல்லும் இணைப்புப் பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டதால் அவை ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன. அவற்றை விரட்டவே கும்கி யானைகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 166 வன இணைப்புப் பாதைகளை அடையாளம் கண்டிருக்கிறது வன விலங்குகளுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகள் வலசை செல்லும் மரபுவழிப் பாதைகள் அவை.

அவற்றில் 88 இணைப்புப் பாதைகள் மட்டுமே தற்போது இருக்கின்றன. தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களில் சாம்ராஜ் நகர் - தலமலை, சிங்காரா - மசினக்குடி, மாயாறு - அவரஹல்லா, கனியன்புரா - மாயாறு, கல்லட்டி - சிகூர், அவரஹல்லா - சிகூர், கல்லாறு - காந்தப்பள்ளம், தலமலை - குத்தியாளத்தூர், சிலுவைமேடு - காடாம்பாறை தாளவாடி, முத்தஹள்ளி, நிலம்பூர் - அமரம்பாளையம், கரடிக்கல் - மாதேஸ்வரா, தளி, எடையரஹள்ளி, அட்டபாடி, பெரியா, திருநெல்லி - பிரம்மகிரி, பெரியா - கொட்டுயூர், அட்டகட்டி - ஆழியாறு, அய்யர்பாடி நீர்வீழ்ச்சி எஸ்டேட் உள்ளிட்ட 20 இணைப்புப் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போதிருக்கும் சுமார் 30,000 யானைகளில் சுமார் 15,000 யானைகள் இந்த இணைப்புப் பாதைகளில் மட்டுமே வசிக்கின்றன. இவற்றில் 15 இணைப்புப் பாதைகள் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருக்கின்றன.