Published:Updated:

பிரதமர் மோடிக்கு அளிக்கும் SPG பாதுகாப்பு... முதல்முறையாக நாட்டு நாய் சேர்க்கப்பட்டது ஏன் ?

முதோல் நாய்

மனிதர்களைவிட கேட்கும் திறன் அதிகம், உடல் ஒல்லியாக இருப்பதால், ஒரே தாவலாக நீண்ட தூரத்தைத் தாண்டி ஓடும் திறன் கொண்டது. அடர்ந்த இருளிலும் இவற்றால் பார்க்க முடியும், கூர்மையான பார்வையும் வேட்டையாடும் திறனும் கொண்டது.

பிரதமர் மோடிக்கு அளிக்கும் SPG பாதுகாப்பு... முதல்முறையாக நாட்டு நாய் சேர்க்கப்பட்டது ஏன் ?

மனிதர்களைவிட கேட்கும் திறன் அதிகம், உடல் ஒல்லியாக இருப்பதால், ஒரே தாவலாக நீண்ட தூரத்தைத் தாண்டி ஓடும் திறன் கொண்டது. அடர்ந்த இருளிலும் இவற்றால் பார்க்க முடியும், கூர்மையான பார்வையும் வேட்டையாடும் திறனும் கொண்டது.

Published:Updated:
முதோல் நாய்

நாட்டின் மிக உயரிய அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு சிறப்பு பாதுகாப்புக் குழு எனப்படும் SPG பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் வீரர்களுடன் வேட்டை நாய்களும் பாதுகாப்புப் பணியில் பணியமர்த்தப்படும். இதுவரை வெளிநாட்டு ரக நாய்களே இந்தப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரமதர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் குழுவில் நாட்டு ரகமான முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உலகில் இருந்தாலும், அவற்றில் 350 வகை இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில் இந்தியாவில் 10 வகை நாட்டு நாய் இனங்கள் சிறப்பாகக் கருதப்படுகின்றன. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, காரவான்வேட்டை, கைக்காடி, ரம்பூர் வேட்டை, கன்னி, கோச்சி, முதோல் வேட்டை, அலங்கு இந்த 10 வகை நாய்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என அங்கீகரித் துள்ளது. இதில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தில் உள்ள நாட்டு நாய் இனமாகும்.

முதோல் நாய்
முதோல் நாய்

வெளிநாட்டு நாய்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும். ஆனால், நமது நாட்டு இனநாய்கள் பிறப்பிலேயே வீரமும் விசுவாச குணமும் அதிகம் கொண்டவை.

பொதுவாக, நாட்டு நாய்கள் மீது நாட்டம் கொண்டவர் பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது ராஜபாளையம், ராம்பூர் கிரேஹவுண்ட் போன்ற இனங்கள் குறித்து பேசினார். ``மன்னர்கள் வேட்டைக்குச் செல்லும்போது நாட்டு நாய்களை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். நாட்டு நாய்கள் மூர்க்கத் தன்மை, மோப்பம் பிடிக்கும் திறன், சுறுசுறுப்பு, வேட்டையாடும் வேகம், தெளிவான பார்வை போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றன'' என்றும் பேசியுள்ளார்.

இதையடுத்து பிரதமரின் பாதுகாப்புக்கு நாட்டு நாய்களை சேர்க்க பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இறுதியாக முதோல் இன நாய்களைத் தேர்வு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி பிறந்து 2 மாதங்களே ஆன 2 முதோல் இன நாய்க்குட்டிகளை பிரதமர் மோடியின் பாதுகாப்பு வீரர்கள் எடுத்துச் சென்று பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்திலுள்ள சிப்பிப்பாறை வகை நாய்களைப் போலவே காணப்படும். முதோல் வகை நாய்கள் வேட்டை, மோப்பம் பிடித்து ஆட்களை அடையாளம் காண வெகுவாகப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த நாய் இனங்கள் கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் பகுதியைச் சேர்ந்தது.

முதோல் நாய்
முதோல் நாய்

இந்த முதோல் இன நாய்கள் ஒல்லியான, உயரமான தோற்றத்தைக் கொண்டவை. இவை சராசரியா 20 முதல் 22 கிலோ எடையுடன், 72 செமீ உயரத்துடன் காணப்படுபவை. நீண்ட தலை, கழுத்து மார்புகொண்ட முதோல் நாய்களுக்கு வயிறு மெலிந்தும் கால்கள் நேராகவும் இருக்கும். காது கீழ்நோக்கி இருக்கும் நிமிடத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை பாய்ந்து ஓடும்.

அடர்ந்த இருளிலும் இவற்றால் பார்க்க முடியும், மனிதர்களைவிட கேட்கும் திறன் அதிகம், உடல் ஒல்லியாக இருப்பதால், ஒரே தாவலாக நீண்ட தூரத்தைத் தாண்டி ஓடும் திறன் கொண்டது. படைப் பிரிவில் தாக்குதல், அச்சுறுத்தல் உள்ள இடங்களை அடையாளம் காண மிகவும் பயன்படும். நுண்ணுணர்வுடன் துரிதமாகச் செயல்படும்.

கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த இன நாய்கள் மன்னர்கள் காலத்தில் வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதோல் நாய்களை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியும், பாகல்கோட் மன்னர் கோர்படாவும் தங்களது படைகளில் பயன்படுத்தியுள்ளனர்.

மனிதனின் நட்புக்கு மிகவும் சிறந்ததாக விளங்கும் இந்த நாய், வேட்டையாடுவதில் அதிக திறன் கொண்டது. இதன் கண் பார்வையில் எதுவும் தப்ப முடியாது. எனவே, முதோல் நாய்களை பழங்குடியின மக்கள், தங்களுடைய வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

முதோல் நாய்
முதோல் நாய்

2017-ம் ஆண்டில் முதோல் இன வேட்டை நாய்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையைக் கண்காணிப்பதற்காக ராணுவத்திலும் சேர்க்கப்பட்டன. இந்திய விமானப் படைப்பிரிவில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் முதோல் இன வேட்டை நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பல பாதுகாப்பு அமைப்புகள் சி.ஆர்.ஐ.சி-யில் முதோல் நாய்க்குட்டிகளை வாங்கி பயிற்சி அளிக்கத் தொடங்கின. இந்திய ராணுவம், விமானப்படை, துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகளும் முதோல் நாய்களை வளர்த்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்கு பயன்படுத்துகின்றனர். தற்போது பிரமதர் மோடியின் பாதுகாப்புக் குழுவில் நாட்டு ரக முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வறண்ட காலநிலையை நன்றாகத் தாங்கும் திறனுள்ள இந்த நாய்கள், குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் உடல்வாகு இதற்கு கிடையாது. சில உள்நாட்டு இன நாய்களைவிட இவற்றுக்கு வாசனை உணர்வு குறைவாக உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நாய்களின் சராசரி வயது 16 ஆண்டுகள். மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இப்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. பிரதமரின் பாதுகாப்புப் படையில் இடம்பெற்றிருப்பதன் மூலம் இனி நாட்டு நாய்கள் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அதேசமயம் அழிந்துவரும் நாட்டு நாய் இனங்களைக் காப்பதற்கான முயற்சியாகவும் இதைப் பார்க்கிறோம் என்று நாட்டு நாய் வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.