Published:Updated:

`கல்லால் அடிச்சவங்க இப்ப சாப்பாடு தர்றாங்க!' - 1000 நாய்களின் பசியாற்றும் சென்னை இளைஞர்

அருண் ( Photo: Vikatan / Priyanka )

``ஆரம்பத்துல வாரத்துல ஒருநாள் மட்டும் சாப்பாடு கொடுத்திட்டு வந்தோம். ஆனா கொஞ்சநாள்ல, இதுக்காக நிறையபேர் எங்ககூட கைகோத்தாங்க. இப்போ வாரத்துல 3 - 4 நாள்கள் நாங்க நாய்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர்றோம்."

`கல்லால் அடிச்சவங்க இப்ப சாப்பாடு தர்றாங்க!' - 1000 நாய்களின் பசியாற்றும் சென்னை இளைஞர்

``ஆரம்பத்துல வாரத்துல ஒருநாள் மட்டும் சாப்பாடு கொடுத்திட்டு வந்தோம். ஆனா கொஞ்சநாள்ல, இதுக்காக நிறையபேர் எங்ககூட கைகோத்தாங்க. இப்போ வாரத்துல 3 - 4 நாள்கள் நாங்க நாய்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர்றோம்."

Published:Updated:
அருண் ( Photo: Vikatan / Priyanka )

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மனிதர்கள் பலர் பொருளிழப்பையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றனர். மனிதர்களின் நிலையே இப்படி என்றால், இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் வாயில்லா ஜீவன்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதால், தெருவில் வளரும் நாய்கள், பூனைகள் போன்ற உயிரினங்கள் தங்களுக்கு உணவு கிடைக்காமல் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்த இக்கட்டான சூழலில், தெருவில் வளரும் செல்லப் பிராணிகளின் துயரைப்போக்க, அரசு அனுமதியுடன், சிலர் தாமாக முன்வந்து , உணவு தயாரித்து அவ்வுயிர்களைக் காத்துவருகின்றனர். அவர்களுள் ஒருவர்தான் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் அருண். அவரை சந்தித்துப் பேசினோம்.

நாய்களுக்கு உணவளிக்கும் அருண்
நாய்களுக்கு உணவளிக்கும் அருண்
Photo: Vikatan / Priyanka

``இந்த உலகம் மனிஷனுங்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. இது நிறையபேருக்கு புரியல. அப்படிப் புரிஞ்சாலே பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்" என்று கூறிப் பேசத்தொடங்கினார் அருண்.

`` வாயில்லா ஜீவன்களுக்கு உதவணும்ங்குற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், அதை எப்படிச் செய்யறதுன்னு தெரியாம பலர் இங்க இருக்காங்க. அதனாலதான், சரி இதற்கான முதல் படியை நாமே எடுத்து வச்சு மத்தவங்களுக்கும் வழிகாட்டுவோம்னு நெனச்சோம். இந்த எண்ணத்துல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தொடங்குனதுதான், இந்த முயற்சி. ரொம்ப நல்லபடியாவே போயிட்டு இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்துல வாரத்துல ஒருநாள் மட்டும் தெருநாய்களுக்கு சாப்பாடு கொடுத்திட்டு வந்தோம். ஆனா கொஞ்சநாள்ல, இதுக்காக நிறையபேர் எங்ககூட கைகோத்தாங்க. அதனால, ஒருநாள் மட்டும் உணவு கொடுப்பதுனு இருந்தது, அப்புறம் ரெண்டுநாள் ஆச்சு. இப்போ வாரத்துல 3 - 4 நாள்கள் நாங்க நாய்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர்றோம். இதுக்காக பலரும் தங்களோட பங்களிப்பைக் கொடுக்குறாங்க. குறிப்பா யாருக்காவது பிறந்தநாள் வந்தா, அவங்க, நாய்களுக்கு உணவளிப்பதற்கான அந்த ஒருநாள் பொறுப்பை ஏத்துக்குவாங்க. அப்படிதான் நாங்க இதை செஞ்சிகிட்டுவர்றோம். நாங்க ஒருநாள்ல தயார் பண்ற உணவு சுமார் 1000 நாய்கள் வரை சாப்பிடலாம். அந்த அளவுலதான் ரெடிபண்றோம்.

நாய்களுக்கு உணவளிக்கும் சிறுவர்கள்
நாய்களுக்கு உணவளிக்கும் சிறுவர்கள்
Photo: Vikatan / Priyanka

அதுல, எங்க சுற்றுவட்டாரத்துலயே சுமார் 300-க்கும் மேல நாய்கள் இருக்கு. இவற்றுக்கு உணவளிக்க, ஏரியால இருக்கும் சின்னப்பசங்களும் எங்க நண்பர்களும் வருவாங்க. அதேபோல, மற்ற ஏரியாவில் உள்ள நாய்களுக்கு உணவளிக்க, தன்னார்வலர்கள் சிலர் தாமா முன்வந்து எங்ககிட்ட இருந்து உணவு வாங்கிட்டுப் போய் கொடுப்பாங்க. இதை நாங்க வெற்றிகரமா செய்ய காரணமா இருக்கறது எங்களோட நண்பர்கள்தாம். அவங்கதான், உணவுக்குத் தேவையான சிக்கன் வாங்குறதுல இருந்து, உணவு தயார் செய்யுறது, அதைக் கொண்டுபோய் கொடுக்கறதுனு எல்லா வேலைகள்லயும் ரொம்ப உதவியா இருப்பாங்க" என்று பெருமிதத்துடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பேசிய அவர், `` நாங்க இதைச் செய்யறதைப் பார்த்து, `இதெல்லாம் ஒரு வேலையா'னு பலரும் கேலியா கேப்பாங்க. ஆனா, இதை வந்து செஞ்சு பார்த்தாதான், அதுல கிடைக்குற மனநிறைவு தெரியும். குறிப்பிட்டுச் சொல்லணும்னா, தெருவுல இருக்க சின்ன பசங்க சிலர், இதுக்கு முன்னாடி நாய்களைப் பார்த்தாலே கல்லால அடிப்பாங்க. அவங்களைக் கூப்பிட்டு வந்து, `நீங்களும் எங்ககூட வந்து ஒருமுறை உணவு கொடுத்துப் பாருங்க'னு சொன்னோம். இப்போ, கல்லால் அடிச்ச அதே பசங்கதான், `அண்ணா. வாங்க நாம நாய்க்கு சாப்பாடு கொடுக்கலாம்னு சொல்லி எல்லாத்தையும் எடுத்து செஞ்சிட்டு இருக்காங்க. இப்படி உணவுகொடுக்கும்போது வரும் சந்தோஷமே தனிதான்" என்றார்.

அருண் மற்றும் அவரது தாய்
அருண் மற்றும் அவரது தாய்
Photo: Vikatan / Priyanka

இதைச் செய்து முடிக்க, அவரின் குடும்பத்தார் அவருக்குச் செய்யும் உதவிபற்றிக் கேட்டபோது, `` நாங்க வெளியேபோய் இதைச்செய்ய எங்களுக்கு வீட்டிலிருந்து மொத்த உதவியும் செய்யுறது என்னோட அம்மாதான். உணவு தயாரிக்க அரிசி ஊறவைப்பதிலிருந்து, வேலை முடிஞ்சதும், பாத்திரங்களைச் சுத்தம் செய்யுறது, வீட்டுல இருக்குற நாய்களைப் பராமரிப்பது வரை எல்லாத்தையும் அம்மா பார்த்துக்குறாங்க" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இந்தச் சேவையைச் செய்வதால் இடர்ப்பாடுகள் ஏதேனும் வருகின்றனவா என்ற கேள்வியைக் கேட்டோம். அதற்கு பதில் அளித்த அருண், `` நாங்க இதைச் செய்யுறதுக்கு நிறைய பேர் உதவினாலும் சிலர் இதை எதிர்க்கத்தான் செய்றாங்க. `நீங்க உணவு கொடுப்பதால்தான் நாய்ங்க இங்க வந்துட்டு இருக்கு. அதுங்க எங்களை ரொம்ப தொந்தரவு பண்ணுது'னு சொல்வாங்க. அவங்க எல்லாருக்கும் நான் ஒண்ணுதான் சொல்லுவேன். இங்க பலபேரு நாம மட்டும் சாப்பிட்டா போதும்னு இருக்காங்க; நாய்களுக்கும் வயிறு இருக்கு. `பசி'ங்கிறது மனுஷனுக்கு மட்டும் இல்ல. எல்லா உயிரினத்துக்கும்தான் இருக்கு. நாம மட்டும் சாப்டுட்டு நிம்மதியா இருந்திடலாம்னு நினைக்கிறது சரியானது இல்ல. அதை நாம புரிஞ்சிக்கிட்டாலே போதும்.

நாய்களுக்கு உணவளிக்கும் சிறுவர்கள்
நாய்களுக்கு உணவளிக்கும் சிறுவர்கள்
Photo: Vikatan / Priyanka

இன்னும் சொல்லப்போனா ரோடுதான் அதுங்களோட வீடு. அதைவிட்டுட்டு, அதுங்க எங்கபோகும்னு நாம கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். நிறைய பேரு எங்ககிட்ட கோவமா பேசுவாங்க. ஆனா, நாங்க பெருசா ரியாக்ட் பண்ணாமப் போயிடுவோம். நாங்க ஏதாவது சொன்னா, அந்தக் கோபத்தை ரோட்ல இருக்குற நாய்ங்க மேலதான் காட்டுவாங்க" என்றார் பொறுமையாக.

நாய்களுக்குக் கொடுக்கப்படும் உணவு பற்றிக் கேட்டதற்கு, ``நாங்க இதுல நாலு பொருள்கள்தான் சேர்க்குறோம். அரிசி, கறி, தண்ணீர், மஞ்சள்தூள். ஒரு கிலோ அரிசிக்கு அரை கிலோ கறி என்ற அளவுல எடுத்து, அதை வேக வைப்போம். அதுல மசாலா, உப்பு போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது" என்றார்.

இறுதியாக, `` நாய்களைப் பார்த்தாலே கல் எடுத்து அடிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டாம். முடிஞ்சா அதுங்களோட அன்பா பழகவிடுங்க. நாய்களுக்கு சாப்பாடு கொடுக்கப் போகும்போது, நம்மள நோக்கி நாய்கள் அன்போடு ஓடிவர்றதைப் பார்க்கும்போது, அதைவிட சந்தோஷம் இந்த உலகத்துல எதுவுமே இல்லைனு தோணும்.

எங்களைப் பார்த்து நிறைய பேர் இதே போல சாப்பாடு கொடுக்குறாங்கனு கேள்விப்பட்டோம். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதேபோல, முடிஞ்சா மத்தவங்களும் அவங்க ஏரியாவுல உள்ள நாய்களுக்கு இதேபோல சாப்பாடு கொடுங்க. அதிகபட்சம் உங்க தெருவுல இருக்க 2 - 3 நாய்களைப் பார்த்துக்கோங்க. அவங்களுக்கும் நம்மள விட்டா வேற யாரும் இல்ல" என்று கூறி தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுக்கச் சென்றார்.

அன்பே இவ்வுலகின் பெருந்தொற்றுக்கு மாமருந்து என்று இந்த கொரோனா நம் அனைவருக்கும் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தனை உயிர்களிடமும் அன்பை மட்டுமே பகிர்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism