Published:Updated:

`இந்த இனம் தப்பிப் பிழைப்பதே அரிதாக உள்ளது!'- மலேசியாவின் கடைசி சுமத்ரன் காண்டாமிருகமும் உயிரிழந்தது

மலேசியாவில் `சுமத்ரன்' வகை காண்டாமிருக இனத்தில் எஞ்சி இருந்த இமான் என்ற பெண் காண்டாமிருகம் நேற்று புற்றுநோயால் உயிரிழந்தது.

சுமத்ரன்
சுமத்ரன்

நமது நகம் மற்றும் முடிகளில் உள்ள அதே `கெரட்டின்' தான் காண்டாமிருகங்களின் கொம்புகளிலும் உள்ளது. ஆனால், மருத்துவப் பயன் என்ற மூடத்தனத்தால் உலகம் முழுக்க ஈவுஇரக்கமின்றி காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு கள்ளச் சந்தைகளில் கொம்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சுமத்ரன்
சுமத்ரன்

காண்டாமிருக இனங்களில் மிகச் சிறியதான சுமத்ரன் காண்டாமிருகங்கள் (Sumatran rhinoceros) ஒருகாலத்தில் இந்தியா உட்பட ஆசியக் காடுகளில் பரவலாக வாழ்ந்தன. காடழிப்பு மற்றும் கட்டுப்படுத்த முடியாத வேட்டை காரணமாக இந்த இனம் இன்னும் சில ஆண்டுகளில் அழிய உள்ளது.

இந்திய, ஜாவா காண்டாமிருகங்களுக்கு ஒற்றைக் கொம்பு மட்டுமே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க, சுமத்ரன் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகள் இருக்கும். இந்தக் கொம்புகளே இவற்றுக்கு பேராபத்தாய் அமைந்துவிட்டன.

மலேசியாவில் உள்ள போர்னியா காண்டாமிருகங்கள் சரணாலயத்தில், எஞ்சியிருந்த சுமத்ரன் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காண்டாமிருகங்கள் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ரன் காண்டாமிருகமான டேம் (Tam) சிறுநீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகளால் கடந்த மே மாதம் இறந்தது.

இதையடுத்து, இதன் ஜோடியான இமான் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வந்தது. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இமான் உடல்நலக் கோளாறுகளைச் சந்தித்தது. இந்நிலையில் கருப்பையிலிருந்து வெளியான அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தது.

Vikatan

மலேசியாவில் இருந்த கடைசி சுமத்ரன் காண்டாமிருகமும் இப்போது இல்லையென்றாகி விட்டது. தற்போது இந்தோனேசியாவில் சுமார் 80 சுமத்ரன் காண்டாமிருகங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவையும் மிக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றின் இனப்பெருக்கங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இனம் தப்பிப் பிழைப்பது அரிதாகவே உள்ளது என W.W.F அமைப்பு நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.