Published:Updated:

சிங்கம், புலிக்கு 400 கிலோ இறைச்சி, முதலைக்கு ஏரி மீன்கள், தினமும் குளியல்...வண்டலூர் பூங்கா நிலவரம்

புலி
புலி

மனிதர்களைத் தாக்கும் வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது. இரண்டையும் ஒரு சேர தாக்கும் வைரஸ்கள் அரிது. அந்த வகையில் ஒன்றுதான் கொரோனா வைரஸ்.

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், முதலில் சீனாவில் பிராணிகளிடமிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிராங்ஸ் மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் நடியா (Nadia) என்ற நான்கு வயது மலேசியப் பெண் புலிக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதை அந்நாட்டின் அயோவா நகரிலுள்ள தேசிய கால்நடைகள் சேவை ஆய்வுக்கூடம் உறுதிசெய்துள்ளது.

புலி
புலி

கொரோனா பாதித்த முதல் வனவிலங்கு இதுதான். அந்த வனவிலங்குச் சரணாலயத்தில் இருந்த பாதுகாவலரிடம் இருந்து புலிக்கு நோய்த் தொற்றியுள்ளது. இந்தப் புலியோடு சேர்த்து அதே மிருகக்காட்சி சாலையில் இருந்த இரண்டு சைபீரியன் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்களுக்கும் இருமல் போன்ற அறிகுறிகள் தெரிகின்றன. இருப்பினும் நடியா புலியைத் தவிர மற்ற விலங்குகளுக்கும் கொரோனா இருப்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. வளர்ப்புப் பிராணிகள், மனிதர்களைத் தொடர்ந்து வனவிலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்து மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ வைரஸ் பரவுவதற்கான எந்த விதமான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அமெரிக்க கால்நடை மருத்துவ மையம் (American Vetrinary Medical Association) அதன் வலைதளத்தில் தெரிவித்திருக்கிறது.

மனிதரிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவுமா?

கொரோனா நோய்த் தொற்று விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகவே அழுத்தமாகக் கூறப்படுகிறது. அது மீண்டும் விலங்குகளைத் தாக்குவது அரிதான ஒன்று. ஏனெனில், விலங்குகளுக்குப் பரவும் வைரஸ் மனிதர்களைப் பாதிக்காது. மனிதர்களைத் தாக்கும் வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது. இரண்டையும் ஒரு சேர தாக்கும் வைரஸ்கள் அரிது. அந்த வகையில் ஒன்றுதான் கொரோனா வைரஸ்.

புலி
புலி

முதலில், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவை சீனாவின் ஹாங்காங் நகரில் இருந்த இரண்டு வளர்ப்பு நாய்கள்தான். அதன் பின்னர், பெல்ஜியத்தில் ஒரு வளர்ப்புப் பூனைக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்து மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ வைரஸ் பரவுவதற்கான எந்த விதமான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அமெரிக்க கால்நடை மருத்துவ மையம் (American Vetrinary Medical Association) அதன் வலைதளத்தில் தெரிவித்திருக்கிறது.

வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மனிதர்களுக்குச் சொல்லப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும், வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

குரங்கு
குரங்கு

குறிப்பாக, கொரோனா விலங்குகளைத் தாக்கியிருந்தாலும், அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. விலங்குகளுக்கு கொரோனா தாக்கம் எந்த அளவில் இருக்கும் என ஆய்வகப் பரிசோதனை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பூனைகளுக்கு மிக அதிக அளவிலான வைரஸ் மாதிரி உடலில் செலுத்தப்பட்டது. ஆனால், அந்தப் பூனைகளுக்கு உடலில் செலுத்தப்பட்ட வைரஸ்கள் அதன் உடலில் எந்தவிதமான தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. எனவேதான் விலங்குகளுக்கு வைரஸ் தாக்கம் அதிகம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் பெரும்பாலும் வளர்ப்புப் பிராணிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதைப் பற்றியே அதிகம் விவரிக்கப்பட்டது.

பல ஆண்டுகள் செல்லம் கொஞ்சி வளர்த்த வளர்ப்புப் பிராணிகளை அதன் உரிமையாளர்கள் தற்போது நிராதரவாகத் தெருவில் விடுவதையும் பல நாடுகளில் பார்க்க முடிகிறது.

பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதா?

சீனாவின் ஹாங்காங் நகரில் வளர்ப்புப் பிராணிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பதாகப் பரவிய செய்தி, உலகம் முழுக்கவுள்ள வளர்ப்புப் பிராணி ஆர்வலர்களையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், வளர்ப்பு மிருகங்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து விலகிவரும் மக்கள், அதைத் தெருவில் ஆதரவின்றி விடத்தொடங்கியிருக்கின்றனர்.

புலி
புலி

நியூயார்க்கில் நடியா புலிக்கு கொரோனா பரவியது உறுதியான நிலையில், வைரஸ் தொற்று உள்ள மனிதர்களிடம் இருந்துதான் விலங்குகளுக்குப் பரவியதே தவிர, மிருகங்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அதை உலக சுகாதார நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் வைரஸ் பரவும் பயத்தில் பல ஆண்டுகள் செல்லம் கொஞ்சி வளர்த்த வளர்ப்புப் பிராணிகளை அதன் உரிமையாளர்கள் தற்போது நிராதரவாகத் தெருவில் விடுவதையும் பல நாடுகளில் பார்க்க முடிகிறது. இது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். வீட்டுச் சூழலில் வளர்க்கப்படும் விலங்குகள் தனித்துப் பிழைப்பது கடினம். அதற்குத் தனித்து பிழைக்கும் ஆற்றல் குறைவாகவே இருக்கும். `இதுபோன்று வளர்ப்புப் பிராணிகளை நிராதரவாக விட வேண்டாம்’ என மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குரங்கு
குரங்கு

கடந்த மார்ச் 25-ல் விலங்குகளுக்கும் உணவளிக்குமாறு மக்களையும், விலங்குகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிக்குமாறு மாநில அரசுகளையும், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விலங்குகள் நல அமைப்பும் இந்த ஊரடங்கில் விலங்குக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அதன் மாநிலச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் விலங்குகளுக்கான கவனம் மிகவும் குறைவுதான். எனினும் பூமி மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதே!

வண்டலூர் பூங்காவில் விலங்குகள் எப்படி இருக்கின்றன?

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் தற்போது எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் பார்ப்போம். இங்கு, 2000 -க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. ஊரடங்கு தடை உத்தரவால் பூங்காவில் பார்வையாளர்களுக்கான அனுமதிக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது. ஆனால், பூங்கா பணியாளர்கள் வழக்கம்போல தினசரி வேலைக்குச் செல்கின்றனர். விலங்குகளுக்கான உணவு, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தினமும் நடைபெறுகின்றன. இங்குள்ள விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விஷயங்கள் குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் கூடுதல் இயக்குநர் சேகரிடம் பேசினோம்.

காண்டாமிருகம்
காண்டாமிருகம்

``கொரோனா அச்சுறுத்தல் தமிழகத்திலும் ஏற்பட்ட உடனேயே பார்வையாளர்களுக்குத் தடை விதித்துவிட்டோம். பூங்காவின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி சுரங்கப் பாதை வைத்திருக்கிறோம். தினமும் பூங்காவுக்குள் நுழையும் எல்லா ஊழியர்களும் அந்தப் பாதையின் வழியேதான் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நுழைவுப் பாதை அருகில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலையும் வைத்திருக்கிறோம். அந்தக் கரைசலில் கால் வைத்தப் பிறகுதான் உள்ளே செல்ல வேண்டும். இந்த இரண்டு செயல்பாடுகளால் உள்ளே நுழைபவர்களின் உடலில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அது பரவாமல் தடுக்கப்படும். பிறகு கைகளில் சானிடைஸர் தடவிக்கொண்டு, முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துகொண்டுதான் வழக்கமான பணிகளை அனைவரும் செய்ய வேண்டும்.

விலங்குகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலுள்ள மிருகக்காட்சி சாலைகளில் விலங்குகளுடன் சுற்றுலாப் பயணிகள் நெருக்கமாக இருக்கவும், விலங்குகளைத் தொட்டுப் பார்த்து போட்டோ எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அதற்குத் தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் அத்தகைய அனுமதியெல்லாம் தரப்படுவதில்லை. வண்டலூர் பூங்காவில் உணவளிக்கவும், மருத்துவம் பார்க்கவும் விலங்குகளின் பராமரிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மட்டுமே விலங்குகளைத் தொடுவார்கள். ஆனால், தற்போது அவசியத் தேவைகளுக்குத் தவிர அவர்கள்கூட விலங்குகளைத் தொடுவதில்லை.

குரங்கு
குரங்கு

சில அடி தூரம் விலகியிருந்தே விலங்குகளுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்கிறார்கள். மேலும், அவர்கள் அனைத்துவிதப் பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்துதான் வேலை செய்கிறார்கள். கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க, கடந்த 20 வருடங்களாகவே பூங்காவிலுள்ள விலங்குகளின் இருப்பிடத்தில் மஞ்சள் தூவிவிடுவோம். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இங்குள்ள விலங்குகளுக்கு எந்த நோய்த் தொற்றும் ஏற்பட வாய்ப்பில்லை” என்கிறார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள ஆண் புலிகளுக்கு தலா 10 கிலோ, பெண் புலிக்கு 8 கிலோ, ஆண் மற்றும் பெண் சிங்கத்துக்கு தலா 7 கிலோ, ஆண் மற்றும் பெண் சிறுத்தைக்கு தலா 4 கிலோ அளவில் தினமும் மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது.

யானைகளுக்கு மட்டும் காலையும் மாலையும் உணவு வழங்கப்படுகிறது. மற்ற அனைத்து விலங்குகளுக்கும் ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. வழக்கமான உணவுகளுடன், கோடைக்காலத்தைச் சமாளிக்க விலங்குகளுக்கு பிரத்யேகமான சில உணவுகளும் தற்போது கொடுக்கப்படுகின்றன.

விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்துப் பேசும் சேகர், ``சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட அசைவ உணவுகள் சாப்பிடும் விலங்குகளுக்கு மொத்தமாக தினமும் 440 கிலோ மாட்டிறைச்சி வாங்குவோம். பல்வகையான பறவைகள், முதலைகளுக்கு 220 கிலோ ஏரி மீன்களை வாங்குவோம். யானை, மான், நீர் யானை, காண்டாமிருகள் போன்ற சைவ உணவுகள் சாப்பிடும் மிருகங்களுக்கு 750 கிலோ காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் வாங்குகிறோம்.

தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட உணவுகளை 250 கிலோ அளவில் வாங்குவோம். `கோ 4' உள்ளிட்ட சில கால்நடைத் தீவனங்களை நாங்களே வளர்க்கிறோம். அதனுடன் சேர்த்து மொத்தமாக இரண்டரை டன் புல் வகை உணவுகளையும் விலங்குகளுக்குக் கொடுக்கிறோம். பூங்காவிலுள்ள விலங்குகளுக்குக் கணிசமான அளவு உணவு தினமும் தேவைப்படும் நிலையில், எவ்வித தட்டுப்பாடும் தற்போது ஏற்படாத அளவுக்கு இதற்கான ஒப்பந்ததாரர்கள் மூலம் போதிய உணவுகள் சரியாக வரவழைக்கப்படுகின்றன.

யானை
யானை

ஐஸ் கட்டி வைத்துப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விலங்குகளுக்குக் கொடுப்பதில்லை. அதற்கென உள்ள மாநராட்சி ஊழியர்கள்தாம் ஃப்ரெஷ் இறைச்சியை பல்வேறு அளவுகளில் பிரித்துக் கொடுப்பார்கள். விலங்குகளுக்கான அனைத்து உணவுகளும், பூங்காவின் விலங்குகளுக்கான உணவுப் பிரிவின் பொறுப்பாளரான கால்நடை மருத்துவர் கண்காணிப்பில்தான் பிரித்து, தரம் உறுதிசெய்யப்படுகிறது. பிறகுதான் விலங்குகளுக்கான உணவுகள் தரப்படுகிறது.

நடப்பது, விளையாடுவது, சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளிலும் விலங்குகளிடம் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கிறோம். இதை, எல்லா விலங்குகளின் இருப்பிடத்திலும் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மற்றும் பராமரிப்பாளர்கள் மூலமும் தொடர்ந்து கண்காணிக்கிறோம்” என்றார்.

தற்போது சில வாரங்களாகவே பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், பூங்காவிலுள்ள விலங்குகள் அசௌகரியம் இன்றி கூடுதல் உற்சாகத்துடன் இருக்கின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வழக்கமாகக் கொடுக்கப்படும் உணவுடன் தர்பூசணி, முலாம் பழம், இளநீர், வெள்ளரி போன்ற குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளையும், பழச்சாறுகளையும் தருகிறார்கள். எல்லா விலங்குகளையும் தினமும் காலையில் குழாய் மூலமாகத் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிப்பாட்டிவிடுகிறார்கள்.

மயில்
மயில்

விலங்குகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசுபவர், ``யாராவது ஒருவர் நம்மைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தால் நமக்கு அசௌகரியம் இருக்கும். அதுபோலத்தான் தொடர்ந்து பார்வையாளர்கள் வருவதும், அவர்கள் சத்தம் போடுவதாலும் விலங்குகளுக்குத் தொந்தரவாகவும் இருக்கலாம். எனவே, விலங்குகளின் உற்சாகத்துக்காகவும், அவை இருக்கும் இருப்பிடப் பராமரிப்புக்காகவும் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பார்வையாளர் அனுமதிக்குத் தடைவிதிக்கப்படும்.

வண்டலூர் பூங்காவில் ஆய்வு செய்யும் வனத்துறை அமைச்சர்
வண்டலூர் பூங்காவில் ஆய்வு செய்யும் வனத்துறை அமைச்சர்

பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களின் உடல்நிலையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற மாற்றம் இருந்தாலும் உடனே மருத்துவப் பரிசோதனை செய்கிறோம். வாகனப் போக்குவரத்து தடைப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், பூங்கா பணியாளர்களை அழைத்துவர பிரத்யேக வாகன ஏற்பாடு செய்யப்படுகிறது. அவசியத் தேவை இல்லாத மற்றும் ஏதேனும் சிரமங்களால் விடுமுறை எடுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதில்லை. தமிழக வனத்துறை அமைச்சர் வண்டலூர் பூங்காவுக்கு வருகைதந்து விலங்குகளின் ஆரோக்கியம் குறித்துக் கேட்டறிந்தார். கொரோனா அச்சுறுத்தல் நிலவினாலும் பூங்கா பணிகள் வழக்கம்போலவே நடைபெறுகின்றன” என்று கூறினார் சேகர்.

அடுத்த கட்டுரைக்கு