Published:Updated:

`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்!’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்

ஒற்றைக் காட்டு யானையின் கால்தடம்
ஒற்றைக் காட்டு யானையின் கால்தடம்

ஜூன் மாத்திற்கு இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. இந்நிலையில், ஜுன் மாதத்தைக் கண்டு தேனி மாவட்டம் தேவாரம் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்குக் காரணம் என்ன என்பது குறித்து தேவாரம் பகுதி மக்களிடம் பேசினோம்.

Vikatan

”எங்களுக்கு விவசாயம் தான் பிரதானம். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், மா, தென்னை, கப்பை, கடலை போன்ற பயிர்கள் விளைவித்து வருகிறோம். மலை அடிவாரம் என்பதால், காட்டு விலங்குகள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம். குறிப்பாக யானைகள்.

இரண்டு யானைக் கூட்டம் இப்பகுதியில் உள்ளன. மாலை 6 மணிக்கு மேல், மலையிலிருந்து கீழிறங்கும் யானைகள், தோட்டங்களுக்குள் வந்து வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அதிகாலை 5 மணிக்கு மீண்டும் மலையில் ஏறிவிடும். யானைகள் இதுவரை எங்களை எதுவும் செய்ததில்லை. தோட்டங்களுக்குள் வருகிறதே என யானைகள் மீது நாங்களும் கோபம் கொண்டதில்லை.

தேவாரம்
தேவாரம்

இந்த யானைக்கூட்டம், தேவாரம் மட்டுமல்லாமல் கேரளாவிற்கும் செல்லும். அதனால், எங்களுக்கு விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. வழக்கத்திற்கு மாறாக, ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாட ஆரம்பித்தது. இதுவரை நாங்கள் பார்த்திராத யானை அது. பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தது. கடந்த மூன்று வருடங்களில், அந்த ஒற்றை யானையால் சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.” என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார் தேவாரம் பகுதி விவசாயி பழனி.

ஒற்றை யானையால் ஆறு பேர் பலி... அச்சத்தில் தேவாரம் கிராம மக்கள்! 

தொடர்ந்த 18-ம் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி திருப்பதி வாசகன், “முதன் முதலாக கேரளத்தைச் சேர்ந்த மூவர், கடந்த 2016-ம் ஆண்டு, இந்த யானையால் பலியானார்கள். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு அழகேசன் என்ற பள்ளிச்சிறுவன், 2018-ம் ஆண்டு சேகர் என்பவர், 2019-ம் ஆண்டு அய்யாவு என்ற முதியவர் என தேவாரத்தில் மட்டும் இதுவரை மூவரை, ஒற்றை யானை பலிகொண்டிருக்கிறது.

இந்த மூவரும் இறந்தது ஜூன் மாதம்தான். அதிலும் அழகேசன் ஜூன் 12-ம் தேதி. சேகர், ஜூன் 11ம் தேதி. அய்யாவு, ஜூன் 10-ம் தேதி என ஒரே மாதத்தில் அடுத்தடுத்த தினத்தில் பலியாகியிருக்கிறார்கள். இது, எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது.

ஒற்றை காட்டுயானையால் உடைக்கப்பட்ட தென்னை
ஒற்றை காட்டுயானையால் உடைக்கப்பட்ட தென்னை

இதோ, ஜூன் மாதம் வர உள்ளது. இந்த வருடமாவது அந்த யானை, எங்கள் மக்களை எதுவும் செய்யக்கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம். யானைக்குப் பயந்து மாலை 5 மணிக்கு மேல் யாரும் தோட்டத்தில் இருப்பதில்லை. அந்த யானையைப் பிடித்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லுங்கள் எனப் பல முறை வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வனத்துறை கண்டுகொள்ளவில்லை. ஜூன் மாதம் என்றாலே மக்கள் பயப்படும் சூழல் உருவாகிவிட்டது” என்றார் வேதனையோடு.

`5 கி.மீ சுற்றளவு; நான்கு ஆண்டுகள்!' - ஒற்றைக் காட்டு யானையால் அவதிப்படும் தேவாரம் மக்கள்

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஒற்றை யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறோம். யானை, மலையிலிருந்து இறங்கும் 5 கிலோமீட்டர் பகுதி கண்டறியப்பட்டு, அதில் சூறை முள், சோலார் மின் வேலி, அகழி போன்றவை அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு