Published:Updated:

ராஜஸ்தான் ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் மர்ம மரணம்- காரணம் என்ன?

அதிகாரபூர்வமாக 1,500 பறவைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தாலும், இறந்த பறவைகளின் எண்ணிக்கை 5,000 ஆக இருக்கக்கூடும் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

சாம்பர் ஏரி
சாம்பர் ஏரி

ஜெய்ப்பூரில் உள்ள சாம்பர் ஏரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலசை வரும் பறவைகள் இறந்துபோயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் மட்டுமே இது இரண்டாவது நிகழ்வாகும். சில தினங்களுக்கு முன்பு, 37-க்கும் மேற்பட்ட டெமாசெல் கிரேன் (demoiselle crane) பறவைகள் ஜோத்பூரின் கிஞ்சன் என்ற ஏரியில் இறந்திருந்தன.

அதிகாரிகள், உடனடி மீட்புப் பணியாகப் பறவைகளின் உள்ளுறுப்புகளை போபால் மற்றும் லூதியானாவில் உள்ள நோயியல் ஆய்வகத்துக்கு அனுப்பி, இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து விசாரிக்க உள்ளனர்.

Ruddy shellduck
Ruddy shellduck

கிஞ்சன்னில் ஏற்பட்ட விபத்திற்கு, அருகில் உள்ள பூச்சிக்கொல்லி விதைகள் நிறைந்த விவசாய நிலங்களே காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நீர் மாசுபாடும் பறவைகளின் இறப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால், ஆய்வு முடிவுகள் வந்த பிறகே தீர்மானமாகக் கூற முடியும் என்றனர். அதிகாரபூர்வமாக 1,500 பறவைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தாலும், இறந்த பறவைகளின் எண்ணிக்கை 5,000 ஆக இருக்கக்கூடும் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்களில் 1,500 பறவைகள் இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இறப்பிற்கான காரணியாக நச்சுத்தன்மை மிக்க தண்ணீர், பாக்டீரியா மற்றும் வைரல் தொற்று காரணமாக இருக்கக் கூடுமோ என்றும் விசாரணை செய்துவருகிறோம்.
ராஜேந்திர ஜக்கர், வனத்துறை அதிகாரி

மேலும், ஏரியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட இறந்துபோன ப்ளாவர் பறவைகள், நாமக் கோழிகள் (common coot), நெடுங்கால் உள்ளான் (black winged stilt) , நார்தர்ன் ஷாவலர்ஸ் என்ற வகை வாத்து (northern shovelers) , ரட்டி ஷெல்டக் என்ற வாத்து (ruddy shelduck), கோணமூக்கு உள்ளான் (pied avacet) ஆகியவை இறந்துகிடந்துள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ராஜேந்திர ஜக்கர் கூறுகையில், "சில நாள்களுக்கு முன் பெய்த ஆலங்கட்டி மழையால், பறவைகள் இறந்திருக்கலாம். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்களில் 1,500 பறவைகள் இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம்" என்றார்.

ஜெய்ப்பூரிலிருந்து வந்துள்ள மருத்துவக் குழு, சில பறவைகளின் உடல்களையும் தண்ணீர் மாதிரிகளையும் போபாலில் உள்ள ஓர் ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

மருத்துவக் குழுவில் உள்ள கால்நடை மருத்துவரான அசோக் ராவ் கூறுகையில், "இறப்பிற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இது பறவைக் காய்ச்சலால் ஏற்பட்டதல்ல. முதலில் பரிசோதனை செய்தபோது, பறவையிலிருந்து திரவம் போன்ற ஒன்று வெளியேறியதற்கான அறிகுறிகள் இல்லை . இதுவே பறவைக் காய்ச்சலாக இருந்தால், நிச்சயம் திரவங்கள் வெளியேறியிருக்கும்" என்று கூறியுள்ளார்.

பறவைகள் இறப்பு
பறவைகள் இறப்பு

கால்நடை வளர்ப்புத் துறையின் நோடல் அதிகாரி ஆர்.ஜி. உஜ்வல் கூறுகையில், "பறவைகளின் இறப்பு, நீர் மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கக்கூடும். மேலும், தண்ணீரிலுள்ள உப்புத் தன்மையின் அளவு அதிகரித்ததால்கூட ஏற்பட்டிருக்கும். தண்ணீரிலுள்ள உப்பின் அளவு அதிகரித்தால், பறவையின் ரத்தத்திலும் உப்பின் அளவு அதிகரித்து, ரத்த ஓட்டம் மெதுவாகியிருக்கும். இதனால் உள் உறுப்புகள் மற்றும் மூளை போன்றவை செயலிழந்திருக்கலாம் என்றார்.

இந்த ஏரி, பூநாரைகள், நீலச்சிறகி (garganey) , கடற்புறாக்கள் , உள்ளான்கள் மற்றும் இன்னும் பல பறவைகளுக்கும் விருப்பமான ஒன்றாகும். ஜாக்கர் மேலும் தெரிவிக்கையில், "ஒவ்வோர் ஆண்டும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் பறவைகள் இங்கு புலம் பெயர்ந்து வரும். இவற்றில், 50,000 ஃப்ளமிங்கோக்கள் மற்றும் 1,00,000 வேடர் பறவைகள் ஆகியன அடங்கும்" என்றார்.

வனத்துறையோடு பணி செய்யும் உள்ளூர்வாசியான ரமேஷ் சந்திரா தரோகா கூறுகையில், "என் நாற்பது வருடப் பணி அனுபவத்தில் இப்படி ஒன்றை நான் பார்த்ததேயில்லை. முதலில் இது, ஆலங்கட்டி மழையால் ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தேன். ஆனால், ஆலங்கட்டி மழை ஒவ்வொரு வருடமும் வருவதுதான். மேலும், தண்ணீரில் எந்த ஒரு ரசாயனக் கழிவும் கலக்கவில்லை" என்றார்.

Garganey
Garganey

இதற்கிடையே, இறந்த பறவையின் உடல்கள் டிராக்டர், லாரி மூலம் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன. இதுவரை 669 பறவைகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வழுவழுப்பான மண் பகுதிகளில் பரவிக்கிடப்பதால், வனத்துறை அதிகாரிகள் அதை அப்புறப்படுத்த முன்வரவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

ராஜஸ்தானில், இந்த வாரத்தில் மட்டுமே பறவைகளின் இறப்பு இரண்டாவது முறையாக நடந்துள்ளது. உலகமெங்கும் வானிலை மாற்றம் காரணமாகப் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. மனிதன், தன்னுடைய செயலால் சுற்றுச்சுழலை மாசுபடுத்துவது, பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு நதியான சாம்பர் உப்புநீர் ஏரியும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்பது கவலையளிக்கக்கூடிய ஒன்று. புலம்பெயர்ந்து வரும் பறவைகளால்தான் இனப்பெருக்கம் அதிக அளவில் ஏற்படுகின்றன. இதனால், அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

`பறவைகள் இல்லை; இருந்தாலும் சுற்றுலாவாசிகளை அனுமதிக்கிறோம்'- வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்த சோதனை