Published:Updated:

நீலகிரி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டுயானை; துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த கொடூரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்
காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்

நீலகிரி மாவட்டம், மெட்டுக்கல் பகுதியில் நான்கு வருடங்குளுக்கு முன்பு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த யானையைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த ஈஸ்வரன், காட்டுராஜா இருவரையும் கைதுசெய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி மலைச்சரிவில் வனத்துறைக்குச் சொந்தமான காப்பு காடுகள்‌ உள்ளன. அரிய வகை காட்டு மரங்கள், யானை, புலி போன்ற‌ வன விலங்குகள், இருவாச்சி போன்ற அரியவகை பறைவகள் அதிகமாகத் தென்படும் இந்தக் காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து செல்வது வழக்கம்.

காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்
காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்

இந்த முறை ரோந்து சென்ற வனத்துறையினரை ரகசியமாகச் சந்தித்த மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், ``எங்கள் கிராமத்தின் அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று இறந்தது. இறந்த யானையை சிலர் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்து, மறைத்துவிட்டனர்" என அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்ததோடு, சிலரின் பெயர்களையும் தெரிவித்துள்ளனர்.

பிரமாண்ட தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதா யானை? குற்றவாளியை நெருங்கும் வனத்துறை!

இதைக் கேட்டுப் பதறிப்போன வனத்துறையினர், தங்களின் உயர்திகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். உடனடியாக விசாரணையைத் தொடகினர். விசாரணையின்‌ அடிப்படையில் இதே கிராமத்தைச்‌ சேர்ந்த ஈஸ்வரன் (40), காட்டுராஜா (27) இருவரையும் கைதுசெய்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர்.

காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்
காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு யானை புதைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்துக்கு நீலகிரி கோட்ட உதவி வனப் பாதுகாவலர், வனச்சரகர்கள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் விரைந்தனர். குறிப்பிட்ட‌ இடத்தில் தோண்டியபோது யானையின் எலும்புகள், உடல் பாகங்கள் மட்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. யானையின் உடல் பாகங்களை ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட வனத்துறை அதிகாரி ஒருவர், ``காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தப் பகுதிகளில் விவசாயம் செய்துவரும் சில விவசாயிகள் சட்டவிரோதமாக அவ்வப்போது மின்வேலிகளை அமைத்துவருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மெட்டுக்கல் பகுதியில் சில விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். அந்தப் பகுதிக்கு வந்த காட்டுயானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் அந்த யானையின் சடலத்தைக் கோடாரியால் துண்டு துண்டாகவெட்டிய ஈஸ்வரன் (40), காட்டுராஜா (27), நிதிஷ்குமார் (24) மூன்று பேரும் சேர்ந்து மண்ணில் புதைத்துள்ளனர்.

காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்
காட்டுயானை புதைக்கப்பட்ட விவகாரம்

நிதிஷ் குமார்‌ உயிரிழந்துவிட்ட நிலையில், மற்ற‌ இருவரையும் கைதுசெய்திருக்கிறோம். உரிய‌ ஆய்வுக்குப் பின்னரே இறந்த யானையின் வயது, பாலினம், இறந்த வருடம் போன்ற விவரங்கள் தெரியவரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு