Published:Updated:

கரடிக்கு நிகழ்ந்ததே யானைக்கும் நிகழ்ந்தது... உலகை உலுக்கிய 3 புகைப்படங்கள்!

Polar Beers
News
Polar Beers ( Paul Nicklen )

உலகை உலுக்கும் எத்தனை புகைப்படங்கள் வெளியானாலும் இக்கொடுமைகளைச் செய்யும் மனிதர்களின் மனம் மாறப்போவதில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் `மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்றார் பாரதியார். காலங்கள் கடந்துபோனது. அதே நூற்றாண்டில் `மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்கிறார் ஜி. நாகராஜன். இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் அப்படி எதையெல்லாம் செய்தான் எனத் தேடுவதில்தான் எல்லாவற்றுக்குமான விடை இருக்கிறது.

polar beers
polar beers
Paul nicklen

உலகிலுள்ள ஒவ்வோர் உயிரினத்துக்கும் தனித்தனி இயல்பு இருக்கிறது. அதனதன் இயல்பில் உண்டு உறங்கி பிழைத்துக் கொள்கின்றன. அந்த இயல்பை மீறி எந்த ஓர் உயிரினமும் நடந்துகொள்வதே இல்லை. இதில் மனிதன் மட்டும் விதி விலக்கு. மற்ற உயிரினங்களின் இயல்பைக் குலைப்பதும் அவற்றை வைத்து பொருளீட்டுவதுதான் இப்போதைய மனித இனத்தின் சொல்லப்படாத வேலைத்திட்டமாக இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சம்பவம்-1

கனடாவைச் சேர்ந்த, `பால் நிக்கலன் சீ லீகஸி' என்னும் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பால் நிக்கலன், 2014-ம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஸ்வால்பார்ட் கடற்கரையில் இறந்து கிடந்த இரண்டு போலார் கரடிகளின் உடல்களைப் புகைப்படம் எடுக்கிறார். அந்தப் புகைப்படங்களையும் கரடிகள் குறித்த தகவல்களையும் துருவக்கரடிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறவர்களிடம் கொடுக்கிறார். ``கரடிகள் உணவில்லாமல் பட்டினியால் இறந்திருக்கலாம்” என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஆர்க்டிக் பனிப் பிரதேசங்களில் துருவக்கரடிகளுக்கு என்னதான் நடக்கிறது என்பதை அறிய வேண்டுமென்பதை முடிவு செய்கிற பால் நிகலன், தன்னுடைய அமைப்பினரோடு சேர்ந்து துருவக்கரடிகள் குறித்து ஆவணப்படம் எடுக்க முடிவுசெய்கிறார். பல இடங்களுக்குப் பயணித்து துருவக்கரடிகள் குறித்து காட்சிகளைப் பதிவு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ம் வருடம் பிப்ரவரி 27 தேதி, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறந்துபோன ஒரு துருவக்கரடியின் புகைப்படத்தைப் பதிவிட்டு ``இந்த நாளில் நீங்கள் துருவக்கரடியின் அழகான புகைப்படத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உண்மையில் துருவக்கரடிகள் அப்படியான சூழ்நிலையில் இல்லை.

polar beer
polar beer
Paul nicklen

`மாறிவரும் காலநிலை மாற்றத்தால் கரடிகள், பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றன. இதே நிலை நீடித்தால் 2050 ஆண்டுக்குள் துருவக்கரடி இனம் முற்றிலும் அழிந்துவிடும்’ எனக் குறிப்பிடுகிறார். அந்தப் புகைப்படங்கள் உலகையே உலுக்கியது. அவற்றைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டு ``ஐயோ பாவம்” என இணையத்தில் அப்படங்களைப் பகிர்ந்தனர். அவர் புகைப்படம் பதிவிட்ட நாள் முக்கியமான நாள் அன்றுதான் `உலக துருவக்கரடிகள் தினம்.'

2017 டிசம்பர் 5-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பால் நிக்கலன் துருவக்கரடிகள் குறித்து, ஒரு வீடியோவை வெளியிடுகிறார். `பஃபின் தீவில் இந்தத் துருவக்கரடியைப் படமெடுக்கும்போது கனத்த இதயத்தோடு எடுக்க நேர்ந்தது. எலும்பும் தோலுமாக இருக்கிற இந்தத் துருவக்கரடி வயது முதிர்ந்தது இல்லை.

கைவிடப்பட்ட இனுயிட் முகாமில், உணவு தேடி அலைந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் அது இறந்துவிடும். இதே நிலை தொடர்ந்தால் உலகத்திலுள்ள 25,000 துருவக்கரடிகளும் இந்தக் கரடியைப் போலவே இறக்கும்' எனப் பால் நிக்கலன் பதிவிட்டிருக்கிறார்.

சம்பவம்-2

தாய்லாந்தில், காஞ்சனபுரி நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது புத்தர் கோயில். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதக் கணக்கின்படி கோயிலிலிருந்த புலிகளின் எண்ணிக்கை 150. அங்கிருக்கிற புலிகள் எல்லாம் சாதுவாகவே இருக்கும். அவை இருக்கும் இடத்தில், புத்த பிட்சுகள் வாக்கிங் போவார்கள். புலிக்குப் புட்டியில் பால் புகட்டுவார்கள். புலிகளின் இயற்கை குணத்துக்கு மாறாக, இக்கோயிலிலுள்ள புலிகள் வளர்ந்தன. கூண்டிலிருக்கும் புலிகளோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், அவற்றைக் கயிற்றால் கட்டி அவற்றுடன் பயணிகள் நடக்கவும் அனுமதித்ததன் மூலம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானத்தை இந்தக் கோயில் ஈட்டிவந்தது.

Tiger
Tiger

அங்கிருக்கிற புத்தபிட்சுக்கள் புலிகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து வளர்ப்பதாகவும், அவற்றுக்குப் போதை மருந்து வழங்கி வசீகரித்து வைத்திருப்பதாகவும் பல ஆண்டுகளாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கை அதிகரித்தன. அப்படியான எந்தக் குற்ற நிகழ்வுகளும் நடக்கவில்லை எனக் கோயில் நிர்வாகம் பதிலளித்தது.

ஆனால், வனத்துறையும் நகரக் காவல்துறையும் கோயிலைக் கண்காணித்தபடியே இருந்தனர். புலி கடத்தல், துன்புறுத்தல் குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகத் தாய்லாந்து அரசு, கோயிலைச் சோதனையிட உத்தரவிட்டது. சோதனையில் புலிகளின் உடல் உறுப்புகளும், பதப்படுத்தப்பட்ட 40 புலிக் குட்டிகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கோயிலிலிருந்த 147 புலிகளும் மீட்கப்பட்டு, அருகில் இருக்கும் ரட்சபுரி இனப்பெருக்க நிலையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அதன் பிறகு, மீட்கப்பட்ட புலிகள் எப்படி இருக்கின்றன என்கிற தகவல் வெளி உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது.

கரடிக்கு நிகழ்ந்ததே யானைக்கும் நிகழ்ந்தது... உலகை உலுக்கிய 3 புகைப்படங்கள்!

இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தின் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குநர் கஞ்சனா நிதாயா, அமெரிக்காவைச் சார்ந்த ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சில புலிகள் இறந்துவிட்டதாக சொன்னார்.

கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரியல் பூங்கா ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் மீட்கப்பட்ட 147 புலிகளில் 86 புலிகள் தொற்று நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் காரணமாக இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், எத்தனை புலிகள் இறந்தன என்று கஞ்சனா நிதாயா சொல்ல மறுத்துவிட்டார். மேலும் `புலிகளை நாங்கள் சிறப்பாகக் கவனித்து வருகிறோம்' என்றும் கூறியிருந்தார். அப்போதே தாய்லாந்து அரசு, அங்கு என்ன நடக்கிறதென ஆராய்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நிகழாமல் போனது துரதிர்ஷ்டமே!

சம்பவம்-3

இலங்கை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடக்கும் பெரஹரா என்ற பௌத்த உற்சவம் அந்நாட்டின் மிக முக்கியமான உற்சவமாகக் கருதப்படுகிறது. 10 நாள்கள் நடக்கக் கூடிய இந்தத் திருவிழா, இந்த வருடம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், யானைகள் ஊர்வலம் ஒவ்வொரு நாளின் மாலையிலும் நடக்கும். அதைக் காண்பதற்காக உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர்.

Tikkiri Elephant
Tikkiri Elephant
metro.co.uk

எல்லாக் கொண்டாட்டங்களிலும் ஒரு துயரம் ஒளிந்திருக்கும். காலம் அவ்வளவு எளிதில் அந்தத் துயரங்களை வெளி உலகுக்கு அடையாளம் காட்டிவிடாது. திருவிழா கொண்டாட்டங்களும் விமரிசையாக நடந்துகொண்டிருந்தன.

இந்தத் திருவிழா குறித்த செய்திகள் அவ்வளவாக வெளி உலகத்துக்குத் தெரியவில்லை. ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியன்று, ஒரு துயரம் உலகத்துக்குத் தெரியவந்தது. அன்றுதான் `உலக யானைகள் தினம்' என்பதும் மற்றொரு காரணம்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த Saengduean Lek Chailert என்பவர் `Save Elephants foundation' என்கிற அமைப்பை நடத்திவருகிறார். இவர் யானைகள் தினத்தில், முகநூலில் வெளியிட்ட ஒரு யானை புகைப்படம் உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கியது.

அந்தப் பெண் யானையின் பெயர் டிக்கிரி. வயது 70. இலங்கையில் திருவிழா நடந்த நாள்களில் யானைக்கு அலங்காரம் செய்திருந்ததால் அதன் உடலமைப்பு வெளியே தெரியாமல் இருந்திருக்கிறது. மிகப் பெரிய திருவிழா என்பதால் கண்கவர் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மேள தாளங்கள் முழங்கிக்கொண்டே இருந்தன. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

Tikkiri Elephant
Tikkiri Elephant

யானை என்கிற உருவம் உருக்குலைந்து எலும்பும் தோலுமாக இருந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், எல்லோருக்குள்ளும் யானை என்கிற பிம்பம் மிகப் பிரமாண்டமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த யானை அதனுடைய இயல்பில் இல்லை எனத் தெரிந்ததும் புகைப்படத்தைப் பார்த்த ஒவ்வொருவரும் யானைக்கு ஆதரவாகப் பதிவிட்டார்கள்.

புகைப்படம் வெளியானதும் கோயில் நிர்வாகமும் யானை வளர்த்தவரும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினர். ஒட்டுமொத்த விலங்கு நல ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் அந்த சம்பவத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Tikkiri Elephant
Tikkiri Elephant

யானை உரிமையாளர், `கடந்த பல வருடங்களாக யானை உற்சவத்தில் கலந்துகொண்டது. 2018-ம் ஆண்டு உற்சவத்துக்குப் பிறகு, யானை உடல் ஆரோக்கியத்தை இழந்துவிட்டது, யானையின் உடல்நிலை சீராக வேண்டும் என்ற வேண்டுதல் வைத்திருந்ததால் யானையைக் கோயிலுக்கு அழைத்துவந்தோம்' என்று பதில் சொல்லியிருக்கிறார்.

`டிக்கிரி' யானை குறித்த விவாதங்களும், கருத்துகளும் உலகம் முழுக்க நடந்துகொண்டிருந்தன. ஆனால், அந்த விவாதங்களாலும், கண்ணீராலும் டிக்கிரி யானையைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை `டிக்கிரி' உயிரிழந்தது. உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் டிக்கிரி யானைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்னும் சில நாளில் `டிக்கிரி' என்கிற பெயர் செய்திகளிலிருந்து மறைந்துவிடும். மேற்கூறிய எல்லா நிகழ்வுகளும் மூன்று வருடங்களுக்குள் நிகழ்ந்தவை. உயிரினங்கள்தான் வேறுவேறு அன்றி, நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஒன்றுதான்.

உலகை உலுக்கும் எத்தனை புகைப்படங்கள் வெளியானாலும் இக்கொடுமைகளைச் செய்யும் மனிதர்களின் மனம் மாறப்போவதில்லை. அடுத்து ஓர் உயிரினத்தின் புகைப்படம் வெளியாகும்; அது வைரலாகும்.

துயரத்தில் இருக்கிற ஓர் உயிரினத்தின் புகைப்படம் மனித இனத்துக்கு வைரல் அல்ல, அடுத்து நீங்கள்தான் எனும் வார்னிங்!