கேரளா: ரேஞ்சரைத் தொடர்ந்து வனக்காவலர் மீது பாய்ந்த புலி! - தேடுதல் பணியில் 3 மாநில வனத்துறையினர்

வயநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வனத்துறைப் பணியாளர்களை அடுத்தடுத்து புலி தாக்கியதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் ஆகிய பகுதிகள் இணைந்த முச்சந்திப்பு பகுதியே, உலகில் வங்கப்புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதியாக இருக்கிறது.

வனத்தை ஒட்டிய இடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
இந்தநிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில், புல்பள்ளி குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக புலி ஒன்று நடமாடிவருகிறது. அவ்வப்போது அது, கால்நடைகளையும் வேட்டையாடிவந்தது.

கேரள வனத்துறை, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்தப் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த,11-ம் தேதி குடியிருப்புப் பகுதி அருகிலுள்ள ஒரு புதரில் அந்தப் புலி பதுங்கியிருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதைக் காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.

அப்பபோது பயங்கர ஆக்ரோஷத்துடன் வனச்சரகர் சசிக்குமார் மீது புலி பாய்ந்தது. முதுகுப் பகுதியில் பலத்த காயம்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கேரள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலியைப் பிடிக்கும் பணியில் மீண்டும் களமிறங்கினர். நேற்று முன்தினம், பாறக்காவலா என்ற இடத்தில் குறிப்பிட்ட அந்தப் புலி இருப்பதை உறுதி செய்த வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் மீண்டும் பயங்கர உறுமலுடன் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது. அருகிலிருந்த வனத்துறையினர் மீது பாய்ந்த புலி, வனக்காவலர் பினீஷ் (38) என்பவரைத் தாக்கியது.
அருகிலிருந்தவர்கள் சத்தமிட்டுப் புலியை விரட்டியதால் அங்கிருந்து தப்பிய புலி, கண்ணாரம்புழா ஆற்றைக் கடந்து, கர்நாடக மாநிலம், பந்திப்பூர் சரணாலயத்துக்குள் சென்றது. கையில் பலத்த காயம்பட்ட வனக்காவலர் பினீஷை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மூன்று மாநில வனத்துறையினர் ஒருங்கிணைந்து எல்லையில் புலியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.