Published:Updated:

`முகத்தை மட்டும்தான் மிச்சம் வைத்துள்ளது!' -ஆட்கொல்லி புலியால் அச்சத்தில் வயநாடு பழங்குடிகள்

சிவக்குமார்
சிவக்குமார்

ஆட்கொல்லி புலி -மனிதனை வேட்டையாடி உண்ணும் இந்தப் புலியைத் தேடிவருகிறோம். சிவக்குமாரின்‌ குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் முதற்கட்ட நிதியுதவியை வழங்கியுள்ளோம்.

கேரள மாநிலம் வயநாடு, புல்பள்ளி அருகில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 24 வயதான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர், ஆனாலும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

`சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி; அலட்சிய வனத்துறை!' - 17 மணி நேர கோத்தகிரி திக் திக் #SpotReport

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் ஊர் மக்களின் உதவியுடன் காவல்துறையினர் நேற்று காலை முதல் சிவக்குமாரை தேடும் பணியில் இறங்கினர்.

வனப்பகுதி ஓரத்தில் உள்ள புற்களில் ரத்தக்கறை இருப்பதைக் கண்டனர். மேலும், எதையோ இழுத்துச்சென்ற அடையாளமும் தென்பட்டுள்ளது. அதனைப் பின்தொடர்ந்து செல்கையில் எலும்புக்கூடாக ஒரு சடலம் கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிவக்குமாரை புலி தாக்கித் தின்றிருப்பதை உறுதிசெய்தனர்.

தேடுதல் பணி
தேடுதல் பணி

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் பேசுகையில், "இரையாக்குவதற்காகவே இவரைப் புலி வேட்டையாடியுள்ளது. இந்த உடலைப் பார்க்கும்போது எங்களுக்கே அச்சமாக உள்ளது. சிவக்குமாரை தாக்கிய புலி, அவரது உடலில் முகத்தை தவிர மற்ற பாகங்கள் அனைத்தையும் தின்றுவிட்டு எலும்புக்கூடாக விட்டுச்சென்றுள்ளது.

மனிதனை வேட்டையாடி உண்ணும் இந்தப் புலியைத் தேடிவருகிறோம். சிவக்குமாரின்‌ குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் முதற்கட்ட நிதியுதவியை வழங்கியுள்ளோம்" என்றார்.

இந்த சோகச் சம்பவம் குறித்து பழங்குடி மக்கள் கூறுகையில் "சிவக்குமாரின் முகத்தை மட்டும் விட்டுவிட்டு உடலைத் தின்றுள்ளது. முகத்தை வைத்துதான் அடையாளம் கண்டறிந்தோம். இந்த ஆட்கொல்லி புலி அடுத்து யாரைத் தாக்கி உண்ணுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். உடனடியாக இந்தப் புலியை‌ பிடிக்க வேண்டும்" என்கின்றனர் பயத்துடன்.

`6 கும்கி யானைகள்; 200 ஊழியர்கள்; கேமரா கண்காணிப்பு!' - 5 நாளுக்குப் பின்னர் சிக்கிய ஆட்கொல்லி புலி

கர்நாடகாவின் பந்திப்பூர் மற்றும் தமிழகத்தின் முதுமலை, கேரளாவின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் என இந்த மூன்று காப்பகங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், மனிதன்-புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு