Published:Updated:

“முன்பு யானைகள்... இப்போது புலிகள்!”

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அடுத்தடுத்து மரணங்கள்

பிரீமியம் ஸ்டோரி
‘கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, மனிதர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், வனத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் நிம்மதியாக உலா வருகின்றன’ என்றெல்லாம் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ``இவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம்’’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

ஆனைமலை புலிகள் காப்பகம், 968 சதுர கி.மீ பரப்பளவைக்கொண்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இதில், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் என ஆறு வனச்சரகங்கள் உள்ளன. யானை, கரடி, புலி, சிறுத்தை, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.

“முன்பு யானைகள்... இப்போது புலிகள்!”

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட போத்தமடை அருகே, 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து கிடந்தது. அதை வனத்துறை யினர் பார்வையிடச் சென்றபோது, புங்கன்ஓடை அருகே 10 வயது மதிக்கத் தக்க பெண் புலி ஒன்றும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் வனத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், என்.ஜி.ஓ-க்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். புலிகளை பிரேத பரிசோதனை செய்து எரியூட்டினர்.

முதல்கட்ட விசாரணை முடிவில், ‘‘புலிகளின் உடலில் இருந்து எந்தப் பாகமும் எடுக்கப் படவில்லை. எனவே, இது வேட்டைக்காக நடத்தப்பட வில்லை. இரண்டு புலிகளின் வயிற்றிலிருந்தும், காட்டுப் பன்றியின் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, ‘விஷம் வைத்து இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் மாமிசத்தை உண்டு புலிகள் உயிரிழந்திருக் கலாம்’ என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம்’’ என வனத்துறை கூறியுள்ளது.

“முன்பு யானைகள்... இப்போது புலிகள்!”

வனத்துறையின் நடவடிக்கைகள் குறித்த விவரமறிந்த சிலர் நம்மிடம், ‘‘ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மனித - விலங்கு எதிர்கொள்ளல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனத்தைப் பராமரிக்க வேண்டியது தான் வனத்துறையின் பணி. ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பல இடங்களில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. வனத்திலும் வனத்தையொட்டிய பகுதிகளிலும் புதிது புதிதாக ரிசார்ட்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இவைதவிர, எஸ்டேட்களும் இருக்கின்றன. ஆக்கிரமிப் பாளர்களுக்குச் சாதகமாகத்தான் வனத்துறை செயல்படுகிறது.

இந்தச் சம்பவம் யதேச்சையாக நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவிக் கின்றனர். அதாவது, அங்கு காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகம் இருப்பதாகவும், அதற்கு யாராவது விஷம் வைத்து, அந்தப் பன்றியை புலி சாப்பிட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இரண்டு புலிகள் இறந்ததால், இது யதேச்சையாக நடந்த சம்பவம்போல் தெரியவில்லை. புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அதன் உணவில் விஷம் தடவி வைத்திருக்கத்தான் வாய்ப்பு அதிகம். புலிகள் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகுதான் வனத்துறையினர் அதைப் பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புலிகள் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்தன. அந்தத் தகவலையும் வனத்துறை மிகவும் தாமதமாகத்தான் வெளியில் சொன்னது. இதிலிருந்தே வனத்துறை களத்துக்கு சரியாகச் செல்வதில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மொத்தமாகவே சுமார் 25 புலிகள்தான் இருக்கின்றன. அதில், இரண்டு புலிகள் இறப்பு என்பது, புலிகளின் இனப்பெருக்கதை பாதிப்பதுடன் வனத்தின் வளத்தையும் பாதிக்கும். இனியாவது வனவிலங்குகளை காக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.

மோகன்ராஜ் - தெபாஷிஸ் ஜானா
மோகன்ராஜ் - தெபாஷிஸ் ஜானா

சூழலியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ், ‘‘அந்தப் பகுதியில் கால்நடைகளை புலிகள் வேட்டையாடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டியிருக்கிறது. அதற்கு முறையான நிவாரணம் வழங்கப்படுவதில்லை. அதற்கான விதிமுறையும் கடுமையாக இருக்கிறது. இதனால், மக்களுக்கான இழப்பீடு உரிய நேரத்தில் சென்று சேருவதில்லை. அது முறையாகச் சென்றாலே, இதுபோன்ற எதிர்வினைகள் இருக்காது. புலிகள் வனத்திலிருந்து வெளியில் வருகிறதென்றால், வனத்தில் அதற்கான இரையின் எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்புள்ளது. இரை விலங்குகள் குறைந்துள்ள காரணம் குறித்து வனத்துறை ஆய்வுசெய்ய வேண்டும். வனத்தில் ரோந்துப் பணிகள் முறையாக நடப்பதில்லை. வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந் தாலே, இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம்’’ என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் தெபாஷிஸ் ஜானாவிடம் பேசினோம். ‘‘இந்தச் சம்பவம், வேட்டைக்காக நடத்தப்பட வில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். விசாரணை நடந்து கொண்டிருப்பதால், வேறு எதையும் சொல்ல முடியாது. வெளியிலிருந்து எங்களை விமர்சிப்பது சுலபம். வனத்தில் வந்து பார்த்தால்தான் எங்களின் கஷ்டம் தெரியும். கொரோனா காரணமாக வனத்துறையின் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டது உண்மைதான். அதே சமயம், வனத்துறை தங்கள் பணியை மிகச் சரியாகத்தான் செய்துகொண்டிருக் கிறது. கால்நடைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம்” என்றார்.

புலிகள் மரணத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு