Published:Updated:

`சிங்கங்களைத் தொடர்ந்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை!' - வனத்துறை நடவடிக்கை

யானை
யானை

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வனத்துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் மக்கள் தவித்து வரும் வேளையில், மனிதர்களால் பராமரிக்கப்படும் விலங்களுக்கும் தொற்று பரவி வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 7 வயதுள்ள `நீலா' என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில், பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சிங்கம்/ வண்டலூர் பூங்கா
சிங்கம்/ வண்டலூர் பூங்கா
Padmanabhan07
வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா, ஒரு சிங்கம் உயிரிழப்பு... உறுதி செய்த அதிகாரிகள்!

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கும் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வண்டலூர் உயிரியியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு SARS -COV 2 தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவற்றைப் பாதுகாத்து சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வன உயிரின பூங்காக்களில் உள்ள வளர்ப்பு விலங்குகள் மற்றும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், டாப் சிலிப்பில் உள்ள யானைகள் முகாம்களிலும் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தொற்று உறுதி செய்யப்பட்டால், விலங்குகளுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

யானை
யானை

வளர்ப்பு யானைகள் பாதுகாப்பு குறித்து முதுமலை அதிகாரிகள் பேசுகையில், ``முதுமலை தெப்பக்காடு, அபயரண்யம் முகாமில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு வனத்துறை சார்பில், தினமும் காலை, மாலை வேளையில், அருகருகே நிறுத்தி வைத்து உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளர்ப்பு யானைகளுக்கு தனித்தனியாக உணவு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு