Published:Updated:

15 யானைகளைக் கொன்றவர்கள் சிக்கியது எப்படி? திடுக் கதை

முதலில் சிங்கத்தையும், குபேந்திரனையும் தனது சொந்த வாகனத்தில் பாதுகாப்பாக கொண்டுசென்று வனத்துக்குள் விட்டு விடுவார் பாபு. அங்கிருந்து சிங்கமும், குபேந்திரனும் துப்பாக்கியுடன் வனத்துக்குள் சென்றுவிடுவார்கள்.

Babu Josh
Babu Josh

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மூன்று யானைகள், சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு யானை, இதுதவிர நீலகிரி, தேனி, கேரளா எனப் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 15-க்கும் மேற்பட்ட யானைகளை தந்தத்துக்காக வேட்டையாடி சிதைத்திருக்கிறது அந்த மனித மிருகக் கும்பல். அதில், வேட்டையர்கள் இரண்டு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட, தற்போது அந்தக் கும்பலின் மூளையாக இயங்கியவரை பொறி வைத்து பிடித்திருக்கிறது வனத்துறை.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செட்டியார் பாபு என்கிற பாபு ஜோஸ். தேனி, வருஷநாடு பகுதியைச் சேர்ந்த சிங்கம் மற்றும் குபேந்திரன் என்ற இருவர்தான் ஜோஸின் டீம். இவர்கள் காட்டு யானைகளை வேட்டையாடி, அதன் தந்தத்தை எடுத்து விற்பதை தொழிலாகச் செய்து வந்துள்ளனர்.

Elephant
Elephant

2011-ம் ஆண்டு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மூன்று ஆண் யானைகள், சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு காட்டு யானையைச் சுட்டுக் கொன்று தந்தங்களை வெட்டி எடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் சிங்கம், குபேந்திரன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், பாபுஜோஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக வனத்துறையிடம் சிக்காமல் சுற்றிக் கொண்டிருந்தார்.

யானை வேட்டை (கோப்புப்படம்)
யானை வேட்டை (கோப்புப்படம்)

இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி, பாபுஜோஸைப் பிடித்திருக்கிறது மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறை சிறப்புப் படை.

இந்த வழக்கு குறித்து வனத்துறை வட்டாரங்களில் பேசியபோது, ``பாபுஜோஸின் தந்தை அஜோஸ் யானை வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தையின் தொழிலையே பாபுவும் தொடர்ந்துள்ளார். சிங்கமும் குபேந்திரனும் இவருக்கு பக்க பலமாக இருந்தனர். வேட்டையாட வேண்டிய பகுதியை பாபு ஜோஸ் கை காட்டிவிடுவார்.

Babu Josh
Babu Josh

சிங்கமும், குபேந்திரனும்தான் யானையை வேட்டையாடுவார்கள். பாபு வனத்துக்குள் செல்ல மாட்டார். வெளியே இருந்து, அவர்களை வழிநடத்தி, வேட்டையை வெற்றிகரமாக முடிப்பதுதான் பாபுவின் வேலை.

முதலில் சிங்கத்தையும், குபேந்திரனையும் தனது சொந்த வாகனத்தில் பாதுகாப்பாக கொண்டுசென்று வனத்துக்குள் விட்டு விடுவார் பாபு. அங்கிருந்து சிங்கமும், குபேந்திரனும் துப்பாக்கியுடன் வனத்துக்குள் சென்றுவிடுவார்கள். அங்கு, ஓர் இடத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்துவிட்டு, யானைக் கூட்டத்தைத் தேடிச் செல்வார்கள்.

சிங்கம்
சிங்கம்

பிறகு யானையை வேட்டையாடுவார்கள். மாட்டிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து ஒரே இடத்தில் வேட்டையாடாமல், பகுதியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நீலகிரி, மதுரை, தேனி, கேரளா என்று பல்வேறு இடங்களில் வேட்டையாடி இருக்கின்றனர். சிங்கம், குபேந்திரனின் பணி வேட்டையாடுவதுடன் நின்றுவிடும். அதன்பிறகு பாபு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜி ப்ரைட் என்பவரிடம் தந்தத்தை விற்றுவிடுவான்.

Babu josh
Babu josh

அஜி ப்ரைட் யானைத் தந்தம் விற்பனையில் பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பில் இருக்கிறார். 2016-ம் ஆண்டு இந்தக் கும்பலைச் சேர்ந்த சிங்கம், குபேந்திரன் இருவரும் சிக்கினார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், பாபு ஜோஸ் குறித்து தெரியவந்தது. இதையே இவர்கள் முழுநேரப் பணியாகச் செய்து வந்துள்ளனர். 2011 முதல் 2015 வரை மட்டுமே, 15 யானைகளை இவர்கள் வேட்டையாடியிருக்கிறார்கள். மேட்டுப்பாளையம், சிறுமுகை என்று இரண்டு வனப்பகுதிகளில் வேட்டையாடியது தொடர்பாக தனித்தனியாக வழக்கு பதியப்பட்டது.

Babu Josh
Babu Josh

ஆனால், சிறுமுகை வழக்குக்கு, பாபு ஜோஸ் முன் ஜாமீன் வாங்கிவிட்டார். மேட்டுப்பாளையம் வழக்குக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

பாபு ஜோஸ் இருந்ததோ தமிழக - கேரள எல்லையில். இதனால், அவரைக் கஷ்டப்பட்டு தேடிச் சென்றாலும், நாம் செல்லும் தகவலை அவர் முன்பே தெரிந்து அலர்டாகிவிடுவார். எனவே, இந்த வழக்கில் ஆர்வம் காட்டாததைப் போல சற்று அமைதியாக இருந்தோம். அதே நேரத்தில், பாபு ஜோஸை இன்னும் தீவிரமாக கண்காணித்தோம். மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வேறொரு வழக்குக்கு ஆஜராக பாபு ஜோஸ் வந்தார்.

Elephant hunter
Elephant hunter

அவரின் நடவடிக்கையை, ஸ்பை வைத்து தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்தோம். சரியாக, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வரும் நேரத்தில், நாங்கள் அங்கு விரைந்து கைது செய்துவிட்டோம்.

பாபு ஜோஸ் மீது, வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாடு மாநில வனச்சட்டம் உள்ளிட்ட வலுவான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சிறையில் இருக்கும் பாபு ஜோஸை, அடுத்த கட்டமாக கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

சூழலைக் காக்கும் பணியை பிரதானமாகச் செய்துவரும் யானையை வேட்டையாடும் மனித மிருகங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருசநாட்டில் மர்மமான முறையில் காட்டுமாடு இறப்பு! – வேட்டை காரணமா?