Published:Updated:

`பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை!'- கோவையில் யானை மோதியதால் வெடித்த டிரான்ஸ்ஃபார்மர் #Video

கோவையில் காட்டு யானை மோதியதில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது.

டிரான்ஸ்பார்மர்
டிரான்ஸ்பார்மர்

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி, மாங்கரை, பாலமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் வரும்.

யானை கூட்டம்
யானை கூட்டம்

இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் ஐந்து யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் உணவு தேடி வந்துள்ளது. இதைக்கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

`நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லை!'- வால்பாறை குட்டி யானை மரணம் குறித்து வனத்துறை

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதே பகுதியில் சுற்றிச் சுற்றி வரும் யானைக் கூட்டம் அருகில் இருக்கும் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து பதுங்கிக்கொண்டது. இதனிடையே, பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும்போது, அப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது யானை ஒன்று மோதியது. அப்போது டிரான்ஸ்பார்மரிலிருந்து தீப்பொறி பறந்தது.

அதிர்ஷ்டவசமாக யானைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு நாள்களுக்கு முன்பு இதே காட்டு யானைக் கூட்டம், துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் பகுதியில் நாய்களை துரத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன.

யானை மோதிய டிரான்ஸ்பார்மர்
யானை மோதிய டிரான்ஸ்பார்மர்

தற்போது, அதே யானைக் கூட்டம் நாய்க்கன்பாளையம் பகுதியில் சுற்றித்திரிகிறது.