Published:Updated:

`தாமதமாகத் தொடங்கிய சீஸன்; முதல் நாளிலேயே 452 முட்டைகள்!' - தனுஷ்கோடியில் ஆமை இனப்பெருக்கம்

ஆமை முட்டைகள் சேகரிப்பு
ஆமை முட்டைகள் சேகரிப்பு ( உ.பாண்டி )

தனுஷ்கோடியின் வட கடல் பகுதியான பாறடி முதல் அரிச்சல்முனை வரை ஆமைகள் முட்டையிடும் பகுதியாகும். தமிழகக் கடலோரப் பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த தொடர்மழை மற்றும் அதிக அளவு நீரோட்ட தாக்கத்தால் ஆமைகள் முட்டை இட வருவது தாமதமானது.

தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் முட்டையிடுவது காலதாமதமாகத் தொடங்கிய நிலையயில் நேற்று ஒரே நாளில் 452 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன.

தனுஷ்கோடி ஆமைமுட்டை பொரிப்பகம்
தனுஷ்கோடி ஆமைமுட்டை பொரிப்பகம்
உ.பாண்டி

பரந்து விரிந்து கிடக்கும் கடல்பரப்பின் தூய்மை காவலனாக விளங்குவன ஆமைகள். இந்திய கடல் பரப்புகளில் 5 வகையான ஆமைகள் உள்ளன. சமீப காலங்களாக மாறிவரும் தட்ப வெட்ப சூழலாலும், சுற்றுச்சூழல் மாசினாலும் சில மனிதர்களின் இரக்கமற்ற செயலாலும், இந்த ஆமை இனங்கள் அருகி வருகின்றன. ஆமை இனங்கள் கடலில் வாழ்ந்தாலும் அவை முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதற்கு கடற்கரையோர மணல் பரப்புகளையே நாடி வருகின்றன. ஆமைகள் உருவாகும் கடலோரப் பகுதிகள் சமீப காலமாகக் கட்டுமானம், சாலைகள், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள் போன்றவையாக மாறி வருகின்றன. இதனால் தங்களின் வாழ்விட சூழலை இழந்து தவிக்கின்றன ஆமைகள்.

தனுஷ்கோடி பகுதியில் கிடைத்த ஆமை முட்டைகள்
தனுஷ்கோடி பகுதியில் கிடைத்த ஆமை முட்டைகள்
உ.பாண்டி

பொதுவாக ஆமைகள் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை முட்டையிடத் தொடங்குகின்றன. தனுஷ்கோடியின் வட கடல் பகுதியான பாறடி முதல் அரிச்சல்முனை வரை ஆமைகள் முட்டையிடும் பகுதியாகும். தமிழகக் கடலோரப் பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த தொடர்மழை மற்றும் அதிக அளவு நீரோட்ட தாக்கத்தால் ஆமைகள் முட்டை இட வருவது தாமதமானது. இதனால் ஆமை முட்டை சேகரிக்கும் பணியும் தாமதமானது.

இந்நிலையில் இந்த சீஸனில், முதன்முதலாக நேற்று தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று காலை அரிச்சல் முனை பகுதியில் மண்டபம் வன உயிரின காப்பகத்தின் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வன ஊழியர்கள் சித்தாமை முட்டைகளைச் சேகரித்தனர். இந்தச் சேகரிப்பின்போது 452 முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த ஆமை முட்டை சேகரிப்பின் முதல் நாளில் 105 முட்டைகளைக் கிடைத்தன. இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கினாலும் முதல் நாளில் 452 முட்டைகள் கிடைத்துள்ளன.

ஆமை முட்டை சேகரிக்கும் வனத்துறையினர்
ஆமை முட்டை சேகரிக்கும் வனத்துறையினர்
உ.பாண்டி

இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள குஞ்சு பொரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அடுத்து வரும் 60 நாள்களில் குஞ்சு பொரிக்கப்பட்டு அவை கடலில் விடப்படும்.

அடுத்த கட்டுரைக்கு