Published:Updated:

குமரி வனப்பகுதியில் அடுத்தடுத்து இறந்த இரண்டு யானைகள்; என்ன காரணம்?

குமரி காட்டுக்குள் இறந்துகிடந்த ஆண் யானை
குமரி காட்டுக்குள் இறந்துகிடந்த ஆண் யானை

``கன்னியாகுமரி மாவட்ட காட்டுக்குள் யானைகள் அதிகமாக உள்ளன. காட்டுக்குள்ளே அதற்குத் தேவையான உணவுகள் இருப்பதால் அவை ஊருக்குள் வருவது இல்லை" என்கின்றனர் வனத்துறையினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீண்ட அடர்ந்த காடுகள் உள்ளன. இதில் சிறுத்தைப்புலிகள், யானைகள், கரடிகள், நரிகள், கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன. கன்னியாகுமரி வனப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்குள் இரண்டு யானைகள் இறந்துள்ளது வன உயிர் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி, பூதப்பாண்டி அருகே உள்ள உடையார் கோணம் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் பெண் யானை வனத்தின் எல்லை ஓரத்தில் சுற்றிவந்தது. சில நாள்களாக மெல்ல நடந்து திரிந்த யானைக்கு வனத்துறையினரும் மருத்துவக் குழுவினரும் இணைந்து காட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மருத்துவ உதவிகள் செய்தும் சிகிச்சைப் பலனின்றி பெண் யானை உயிரிழந்தது.

இந்நிலையில் பூதப்பாண்டி வனச்சரகத்தில் அசம்பு காடு என்ற மலைகாட்டுப் பகுதியில் தனியார் கிராம்பு எஸ்டேட்டில் ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இறந்த யானையின் தந்தங்கள்
இறந்த யானையின் தந்தங்கள்

இதையடுத்து அழகியபாண்டியபுரம் சரக வனத்துறையினர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வந்த கால்நடை மருத்துவர்கள் அங்கு சென்று பார்த்தனர். இறந்துகிடந்த ஆண் யானைக்கு ஆறு வயதிலிருந்து எட்டு வயது இருக்கலாம் என கண்டறியப்பட்டது. மேலும் யானை சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. வன விலங்குகள் தாக்கி யானை இறந்திருக்குமோ என்ற சந்தேகம் முதலில் ஏற்பட்டது. உடனே கால்நடை மருத்துவக் குழுவினர் யானையை உடற்கூறு ஆய்வு செய்து பார்த்தனர். காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் இந்த ஆண் யானை படுகாயம் அடைந்து இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

வனத்துறையினர் ஆண் யானையிடம் இருந்து இரண்டு தந்தங்களையும் எடுத்துக்கொண்டு யானையை காட்டுப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து அங்கேயே அடக்கம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட காட்டுப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து பலியாகி வருவது வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த மாதம் இறந்த பெண் யானை வயது முதிர்வு காரணமாக உணவுகளைத் துழாவி எடுக்க முடியாத நிலையில் இறந்துள்ளது.

யானையின் உடல் பிரேதபரிசோதனை
யானையின் உடல் பிரேதபரிசோதனை
இரண்டு ஆண்டுகளாக காயத்துடன் சுற்றிவந்த காட்டு யானை; முதுமலையில் சிகிச்சைப் பலனின்றி பலி!

இரண்டு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆண் யானை இறந்துள்ளது. இந்த மோதல் காட்டுக்கு உள் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் நடந்துள்ளது. சண்டையில் உள்காயம் ஏற்பட்டதால் ஆண் யானை இறந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட காட்டுக்குள் யானைகள் அதிகமாக உள்ளன. காட்டுக்குள்ளே அதற்குத் தேவையான உணவுகள் இருப்பதால் அவை ஊருக்குள் வருவது இல்லை. உடையார்ப்பள்ளம் பகுதியில் யானைகள் சில நேரம் இரவு நேரத்தில் ஊரையொட்டி வந்து செல்லும். மற்றபடி யானை மனிதர்கள் எதிர்கொள்ளல் குமரி மாவட்டத்தில் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு