ஜூலை 26-ம் தேதி... உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிலிபித் புலிகள் காப்பகத்தில், காட்டுக்குள்ளேயே ஒரு பெண் புலி முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களால் அடித்தே கொல்லப்பட்டது. அவரவர் கையில் கிடைத்த கட்டைகளைவைத்து அதன் கால்களை உடைத்து, தாடையை முறித்து, காப்பாற்ற வந்த வனத்துறையினரை அண்டவிடாமல் தடுத்து நிறுத்தி, மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்!

அந்தப் பெண் புலிக்கு ஆறு வயதிருக்கும். கையில் கிடைத்த கட்டைகளை வைத்து துடிக்கத் துடிக்க அது அடித்துக் கொல்லப்பட்ட காணொலியைப் பார்க்கும் யாராலும் அதன் நிலையைக் கண்டு கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. அடி தாங்க முடியாமல் முன்னங்கால்களால் முகத்தை மறைத்து, ‘தயவுசெய்து விட்டுவிடுங்கள்!’ என்று கெஞ்சுவதுபோலிருந்த அதன் நிலையைப் பார்த்த எவருக்கும் இதயம் நொறுங்கிவிடும். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காடுகளைக் காத்த காவலரான புலியைக் கெஞ்ச வைத்த இந்தச் செயல், சூழலியல் வரலாற்றில் கறுப்புப்புள்ளியாக என்றென்றும் நிலைத்திருக்கும்.

இது நடந்த மூன்றாவது நாள்... ஜூலை 29, உலகப் புலிகள் தினம். அன்றைய தினம், 2018-ம் ஆண்டின் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 2006 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துவரும் இந்தக் கணக்கெடுப்பில், 2014-ம் ஆண்டு 2,226 புலிகள் இந்தியாவில் இருப்பதாகப் பதிவானது. 2018-ல் நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில், 2,967 புலிகள் வாழ்வதாகத் தெரியவந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் புலிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 308 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, இப்போது 526 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்ததாக, 524 புலிகளோடு கர்நாடகமும், 442 புலிகளோடு உத்தரகாண்ட் மாநிலமும் இருக்கின்றன. மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் முறையே 312 மற்றும் 264 புலிகள் இருக்கின்றன. கடந்த கணக்கெடுப்பில் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 68 புலிகள் இருந்தன. இப்போது ஆந்திரத்தில் 48 புலிகளும், தெலங்கானாவில் 26 புலிகளும் என 74 புலிகள் இருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கையில் நிச்சயமாக பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம்.

அதேசமயத்தில் மரணச் செய்திகளும் வந்தபடியே இருக்கின்றன. உத்தரப்பிரதேச மரணச் செய்திக்கு மறுநாளே (ஜூலை 27) பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், நுழைவுவாயில் அருகே ஒரு புலி இறந்து கிடந்துள்ளது. அது விபத்தில் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து இத்துடன் சேர்த்து இயற்கையாக அல்லாமல் மற்ற காரணங்களால் பந்திப்பூரில் மொத்தம் ஐந்து புலிகள் இறந்துவிட்டன.

கடந்த 2018 டிசம்பர் 15-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் கவால் சரணாலயத்தில் ஓர் ஆண் புலி வேட்டையாடப்பட்டது. தொடர்ந்து ஜனவரி மாதமே மீண்டும் ஒரு புலி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. அந்த மாதத்தின் இறுதியில் இறந்த புலியின் தோலுடன் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்தப் பகுதியில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க வைத்த கண்ணி, புலி ஒன்றின் கழுத்தில் சிக்கியுள்ளது. கண்ணியுடன் ஒரு மாத காலம் சுற்றிய புலி, கண்ணி ஏற்படுத்திய காயத்தாலேயே ஜனவரி மாதம் உயிரையும்விட்டது.

கடந்தாண்டு அரசே அரங்கேற்றிய வேட்டைக்கு பலியான அவ்னி புலி பற்றியும் நாம் அறிவோம். இந்த மாதத் தொடக்கத்தில் அவ்னி கொல்லப்பட்ட அதே சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தடோபா - அந்தாரி புலிகள் காப்பகத்தில் ஒரு பெண் புலி தன்னுடைய இரண்டு குட்டிகளோடு இறந்து கிடந்தது. விசாரணையில் அவை, நஞ்சு கலக்கப்பட்ட மாட்டு மாமிசத்தைச் சாப்பிட்டதால் இறந்ததாகத் தெரியவந்தது. அதற்காகக் குற்றம்சாட்டப்பட்டு ஒரு விவசாயியும் கைதுசெய்யப்பட்டார்.

2018-ம் ஆண்டின் புலிகள் கணக்கெடுப்பு முடிவுகளை முன்வைத்து, உலகிலேயே புலிகள் வாழ பாதுகாப்பான நாடாக நாம் உலக நாடுகளின் முன் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் மேற்கூறிய கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாகும் அளவுக்கு அடித்துவிட்ட பிறகும் மீட்க வந்த வனத்துறையைக் காப்பாற்றவிடாமல் தடுத்து நிறுத்தி, அது இறந்த பிறகே எடுத்துச் செல்ல அனுமதிக்கும் அளவுக்கு புலியின்மீது கிராம மக்களுக்கு வன்மம் வளர்ந்துள்ளதெனில், அந்த மக்கள் மத்தியில் போதிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தாத வனத்துறைதான் அதற்குக் காரணம்.

‘2018-ம் ஆண்டில் மட்டுமே இந்தியாவில் 100 புலிகள் இறந்துள்ளன. அதில் 49 மரணங்கள், காப்பகத்துக்கு வெளியே உள்ள காப்புக்காடுகளில் நிகழ்ந்துள்ளன. 2012 முதல் 2018-ம் ஆண்டுக்குள் 657 புலிகள் இந்தியாவில் இறந்துள்ளன’ என்கின்றன தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் தரவுகள். அதில், 138 புலிகள் வேட்டையில் கொல்லப்பட்டுள்ளன. ஒடிசாவில் 24 சதவிகிதம் புலிகளின் மரணத்துக்கு வேட்டையே பிரதான காரணம். சத்தீஸ்கரில் 2014-ம் ஆண்டு 46 புலிகள் இருந்தன. இப்போது 19 புலிகளே இருக்கின்றன. அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் இடம்பெற்றுள்ளன.

இந்திய அளவில் மிகச்சிறந்த புலிகள் காப்பகமாக தமிழகத்தின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முதன்முறையல்ல. சத்தியமங்கலம், ஏற்கெனவே இப்படி பல நற்பெயர்களைப் பெற்றுள்ளது. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், இப்போது காப்பகத்துக்கும் வெளியே பல இடங்களில் புலிகள் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடம் மற்றும் நடமாடுமிடம் அதிகமாகிவிட்டன. அதை உணர்ந்து மேலும் அதிக பகுதிகளைப் பாதுகாப்பதில் சத்தியமங்கலம் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

ஆனால், இதே நிலை இந்தியா முழுவதும் நீடிக்கிறதா என்றால், `இல்லை’ என்று வேதனையளிக்கும் பதிலே கிடைக்கிறது. மிகச் சமீபத்தில் நிகழ்ந்த மரணங்களே அதற்கான ஆதாரங்கள். மனித - புலிகள் எதிர்கொள்ளல் அதிகமாகிவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்போது புலிகள் பாதுகாப்பில் மிக முக்கியமானது மக்களின் பங்களிப்புதான். அதைக் கொண்டுவருவதில் நாம் வெற்றியடைய வேண்டும். அப்போதுதான் இத்தகைய மரணங்களும் கொலைகளும் நடந்தேறாமல் தடுக்க முடியும். மக்கள் பங்களிப்பைச் சாத்தியமாக்கியதே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இந்த வெற்றிக்குக் காரணம்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் உருவாக்கத்திலும் அதன் தற்போதைய வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்குவகித்தவர், புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு. அவரிடம் பேசினோம். ‘‘புலிகள் மட்டுமல்ல... எந்த விலங்காக இருந்தாலும் சரி, அதன் பாதுகாப்பில் மிக முக்கியமானது விழிப்பு உணர்வு. அது எந்த அளவுக்குப் பொய்யாக இருக்கிறது என்பதைத்தான் சமீபத்தில் பெண் புலி ஒன்று மக்களால் அடித்தே கொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது. இதைச் சரிசெய்ய வேண்டுமெனில், புலிகள் பாதுகாப்பில் மக்களையும் பங்கெடுக்கவைக்கவேண்டும். அதற்கு முதலில் சூழலியல் சமநிலையில் அந்த உயிரினத்தின் முக்கியத்துவத்தைப் புரியவைக்கவேண்டும். அடுத்து, அவர்களுடைய நிலத்தைப் பாதுகாக்க, அந்தப் புலியைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும், அது அவர்களுடைய கடமை என்பதையும் உணர்த்த வேண்டும்.

எந்த ஒரு காடு சார்ந்த பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முயற்சியாக இருந்தாலும், அந்த மண் சார்ந்த மக்களை முன்னிறுத்தியே அதைச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களின் முழுப் பங்களிப்பும் அதில் கிடைக்கும். அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் அங்கிருக்கிறது. ஆகவே, மண்ணின் மைந்தர்களிடத்தில் பொறுப்பைக் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்தால், மக்கள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். அந்த நிலையை உருவாக்கியதால்தான் சத்தியமங்கலம் இன்று இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளது. இதே நிலை இந்தியா முழுவதும் வரவேண்டும்” என்றார்.

18 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்களைக் கொண்டுள்ள இந்தியாவில்தான், உலக புலிகளின் எண்ணிக்கையில் 80 சதவிகிதத்துக்கும்மேல் வாழ்கின்றன.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. நாடு முழுவதும் வனத்துறை மற்றும் காட்டுயிர் ஆய்வாளர்களின் உழைப்புக்குக் கிடைத்துள்ள பலன் இது. இந்தப் பலன் நீடிக்க வேண்டுமெனில், நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. புலிகள் பாதுகாப்பின் அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டும். அதில் மக்களையும் ஈடுபடுத்தவில்லையெனில், அடுத்தகட்டத்திலும் இதேபோல் வெற்றியடைவது சாத்தியமில்லாமல்போய்விடும் அபாயம் இருக்கிறது.