Published:Updated:

இறைச்சிக்காக ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட கழுதைகள்; விரட்டி பிடித்த வேலூர் போலீஸ்; நடந்தது என்ன?

கடத்தி செல்லப்பட்ட கழுதைகள்
News
கடத்தி செல்லப்பட்ட கழுதைகள்

`கழுதை இறைச்சியை சாப்பிட்டால் கொரோனா குணமாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் கழுதையின் இறைச்சி விற்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இவ்வாறு கழுதைகள் கடத்தப்படுவதாகவும்' சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவியது.

வேலூர் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் எழில் தலைமையிலான காவலர்கள், கடந்த 7-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் வேலூர் - ஆரணி சாலை சந்திப்பில் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்று போலீசார் நிற்பதைக் கண்டவுடன் வேகம் எடுத்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அந்த வேனை பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்துள்ளனர். வேனில் இருந்த ஒரு சிலர் தப்பியோடிய நிலையில், சீனிவாச ராவ் (67) என்பவர் மட்டும் பிடிபட்டுள்ளார்.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், வேனில் சோதனை செய்தபோது 6 கழுதைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளன. இதனைக் கண்டு அந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில், தமிழக பகுதியில் இருந்து கழுதைகளை திருடிச்சென்று ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இந்த 6 கழுதைகளும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள பகுதிகளில் இருந்து திருடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. உடனே வேன் மற்றும் கழுதைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருடி செல்லப்பட்ட கழுதைகள், பிடிபட்டது தொடர்பாக கழுதைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூருக்கு சென்ற கழுதையின் உரிமையாளர்கள் மேகநாதன், தனசேகரன், தேவராஜ், பாண்டியன் என்ற நான்கு பேரும் கொடுத்த புகாரின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருட்டு நடைபெற்ற இடம் ஆரணி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப்பகுதி என்பதினால் குற்றவாளியை அந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் வேலூர் போலீசார்.

மேலும், பிடிபட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ``நான் ஆந்திர மாநிலம் பெராலா கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் உள்ள சிலர் கழுதை இறைச்சியை சாப்பிடுவார்கள். நாங்கள் கழுதைகளை வாங்கி சென்று சந்தையில் விற்பனை செய்வோம். அதன்படி, கழுதைகளுக்காக நாங்க ரெண்டு பேர் இங்கு வந்தோம். ஆரணி அருகே உள்ள கொசப்பாளையம், பையூர் போன்ற பகுதிகளில் கழுதைகள் சுற்றித் திரிந்ததை கண்டோம். அதனால் 6-ம் தேதி இங்கேயே சுற்றிக் கொண்டிருந்து அன்று நள்ளிரவில் கழுதைகளை பிடித்துக்கொண்டு, ஆந்திர மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது வழி தெரியாமல் திகைத்துவிட்டோம். அப்போதுதான் போலீஸ் எங்களை பிடித்தது. உடன் வந்த ஒருவர் தப்பித்து சென்றுவிட்டார்" என்று கூறியுள்ளார்.

கழுதைகள்
கழுதைகள்

இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் மீது 379-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ஆரணி நகர காவல் துறையினர், தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் பிடிபட்ட கழுதைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. `கழுதை இறைச்சியை சாப்பிட்டால் கொரோனா குணமாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் கழுதையின் இறைச்சி விற்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இவ்வாறு கழுதைகள் கடத்தப்படுவதாகவும்' சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவிய நிலையில். `அது தவறான கருத்து' என காவல்துறையினர் மறுத்துள்ளனர்.