தட்டையான முகம் மற்றும் மூக்கு, உருளையான கண்கள், நீளவாக்கில் குட்டி உடல் என விளம்பரங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படும் 'பக் (Pug)' இன நாய்களை கண்டிருப்போம். 'பார்த்தாலே அழகாக இருக்கு. குட்டியாக, குழந்தை போலவே கூடவே வருது’ என பலரும் அதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். அப்படி பக், அமெரிக்க புல்டாக், பிரெஞ்சு புல்டாக் போன்ற இனங்களை வாங்கி வளர்க்க விரும்பும் மக்களுக்கு, கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நாய் இனங்களில், அழகை மட்டும் பார்க்கும் மக்கள், இவற்றின் உடல் அமைப்பால் நாய்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய பிரச்னைகளை கவனிக்க மறந்து விடுகின்றனர். மற்ற நாய் இனங்களை ஒப்பிடுகையில், இவை இருமடங்கு உடல்நலக் கோளாறுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கின்றன என, நாய் மருத்துவம் மற்றும் மரபியல் (Canine Medicine and Genetics) இதழில் வெளியான தகவல் கூறுகிறது.
இந்த ஆராய்ச்சிக்காக, மற்ற நாய் இனங்களோடு, வீட்டில் வளர்க்கப்படும் 1000 அமெரிக்க புல்டாக் இனங்களின் ஆரோக்கியம் குறித்து, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மற்ற நாய் இனங்களை ஒப்பிடுகையில் ஒரு வருடத்திலேயே, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் இவை தாக்கப்படுகின்றன. பொதுவாகவே மற்ற நாய்களை விட இவற்றின் தோல் மடிப்புகளால் 38 மடங்கு தொற்றுகளாலும், 26 மடங்கு ’செர்ரி கண்’ என அழைக்கப்படும் கண் பிரச்னைகளாலும், கீழ் தாடை நீளுவதால் 24 மடங்கும், சுவாச பிரச்னையால் 19 மடங்கும் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்திருக்கிறது.

"எனவே, இவ்வகை இனங்களில் உடலமைப்பு மறுசீரமைப்பு செய்யும் வரை, இவற்றை வாங்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ வேண்டாம்; அதோடு இவற்றை வாங்கத் தூண்டும் படியான விளம்பரங்களையோ, சமூக வலைதளப் பதிவுகளையோ இட வேண்டாம்" என, ராயல் கால்நடை மருத்துவக் கல்லூரி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.