Published:Updated:

`லிப்ட் வசதி இருக்கிறது; 1962 எண்ணுக்கு போன் பண்ணுங்கள்!' - தேனிக்கு வந்துவிட்டது கால்நடை ஆம்புலன்ஸ்

நாளை முதல் கால்நடை ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cattle Ambulance
Cattle Ambulance

கால்நடைகளுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கும் நோக்கோடு, கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 22 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேனிக்கு ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்துள்ளது. நாளை முதல் கால்நடை ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cattle Ambulance With Animal Husbandry Officals
Cattle Ambulance With Animal Husbandry Officals

தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மருத்துவர், ஒரு உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என மூவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர் நந்தினியிடம் பேசியபோது, ``நாளை முதல் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அனைத்து நாள்களும் ஆம்புலன்ஸ் செயல்படும். கால்நடைகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளே வைக்கப்பட்டுள்ளன. நடக்க முடியாத, எழ முடியாத கால்நடைகளைத் தூக்க, பெல்ட்டுடன் கூடிய ஒரு லிப்ட் வசதியும் இதில் உள்ளது. அபாய கட்டத்தில் இருக்கும் கால்நடைகளை உடனே அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு இந்த ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடியும். அதற்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் மீது உண்ணிகள், பூச்சிகள் இருப்பதைக் கண்டறிய மைக்ராஸ்கோப் உள்ளது. ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 1962 என்கிற இலவச எண்ணில் அழைக்கலாம். அழைப்பின்போது எந்த இடம், கால்நடைக்கு என்ன பிரச்னை எனக் கேட்கப்படும். அதன்பிறகு, எங்களுக்குத் தகவல் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சிகிச்சை அளிப்போம்.

Dr.Nanthini
Dr.Nanthini

GVK/EMRI என்கிற தனியார் அமைப்பு மூலமாக இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்தில், அதிவிரைவாக வந்து மருத்துவ உதவி அளிப்போம்” என்றார். தேனி மாவட்டம் முழுவதுகும் ஒரே ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் மட்டுமே இருப்பதால், அவசர கால மருத்துவ உதவிக்காக மட்டுமே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட விவசாயிகளின் பல நாள் கோரிக்கையாக இருந்த இந்தக் கால்நடை ஆம்புலன்ஸ் தேனி வந்திருப்பது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் குப்பை! - காப்பாற்றிய அரசு கால்நடை மருத்துவர்கள்