Published:Updated:

மக்காச்சோள காட்டில் சிறுத்தை நடமாட்டமா? அச்சத்தில் விருதுநகர் கிராம மக்கள்

விருதுநகரில் மக்காச்சோள காட்டில் சிறுத்தையைப் பார்த்ததாக விவசாயி கூறியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டம் ஏதுமில்லை என விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

விருதுநகர் - சிவகாசி செல்லும் சாலையில் உள்ளது வீரச்செல்லையாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற விவசாயி 3 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். மக்காச்சோளம் வளர்ந்து வரும் நிலையில் காட்டுப்பன்றிகள் நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. காட்டுப்பன்றிகளின் இந்த அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த கம்பி வலைகள் கட்டியும், வெடி வெடித்தும், ஓசை எழுப்பியும் விரட்டி வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம்
பள்ளத்தில் விழுந்து விபத்து; பலனளிக்காத சிகிச்சை; பரிதாபமாக உயிரிழந்த குட்டி யானை!

இந்த நிலையில், விவசாயி நாகராஜ் தனது நிலத்தில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்திட, பயிரிடப்பட்டுள்ள நிலத்தைச் சுற்றி கம்பி வலைகள் கட்டுவதற்காக தனது மனைவி சீதாலட்சுமியுடன் மக்காசோளக் காட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் 4 அடி நீளமுள்ள சிறுத்தை ஒன்று ஓடியதை கணவன், மனைவி இருவருமே பார்த்துள்ளனர். இதையடுத்து உடனே ஊருக்குள் வந்த விவசாயி நாகராஜ், மக்காசோளக் காட்டில் சிறுத்தை ஓடிச் சென்றதைச் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து ஊர் மக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து புகார் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலைச் சொல்லி ஆய்வு செய்யச் சொன்னார். அதிகாரிகளும் விவசாயி நாகராஜ் அடையாளம் காட்டிய பகுதியில் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால்தடம் ஏதும் தென்படவில்லை எனக் கூறினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்,

ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம்
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைத் தூக்கிச் சென்ற சிறுத்தை! - துரத்திச் சென்று மீட்ட வாலிபர்

``விவசாயி நாகராஜ் அடையாளம் காட்டிய இடத்தில் ஆய்வு செய்தில் மான், காட்டுப்பன்றிகளின் கால் தடங்களே அதிகம் தென்படுகின்றன. அது முட்புதராகவும் இருப்பதால் பிற தடங்கள் எதுவும் தெரியவில்லை. இங்கு சிறுத்தை நடமாட்டத்திற்கான வாய்ப்பு இல்லை” என்றனர்.

இந்த நிலையில், அருகில் உள்ள ஆமத்தூர் ஊராட்சியில், ``சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், காட்டுப்பக்கம் மக்கள் யாரும் செல்லவோ, கால்நடைகளை மேய்க்கவோ செல்ல வேண்டாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் விளக்கம் அளித்திருந்தாலும் கிராமங்களில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு