Published:Updated:

தங்கத்தை விட மதிப்புமிக்க அம்பர்கிரிஸ்; `திமிங்கிலத்தின் வாந்தி' கோடிகளில் வர்த்தகமாவது ஏன்?

Sperm Whales ( Image by Decokon from Pixabay )

அம்பர்கிரிஸ்ஸை தவறுதலாகக் கண்டு கையில் எடுத்த ஏழைகள் பலர், ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர். அதே சமயம், தெரிந்தே பேராசை கொண்டு, திமிங்கிலங்களை வேட்டையாடி அம்பர்கிரிஸ்ஸை கையிலெடுத்த, கோடீஸ்வரர்கள் பலர் குற்றவாளிகளாகவும் மாறியுள்ளனர்.

தங்கத்தை விட மதிப்புமிக்க அம்பர்கிரிஸ்; `திமிங்கிலத்தின் வாந்தி' கோடிகளில் வர்த்தகமாவது ஏன்?

அம்பர்கிரிஸ்ஸை தவறுதலாகக் கண்டு கையில் எடுத்த ஏழைகள் பலர், ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர். அதே சமயம், தெரிந்தே பேராசை கொண்டு, திமிங்கிலங்களை வேட்டையாடி அம்பர்கிரிஸ்ஸை கையிலெடுத்த, கோடீஸ்வரர்கள் பலர் குற்றவாளிகளாகவும் மாறியுள்ளனர்.

Published:Updated:
Sperm Whales ( Image by Decokon from Pixabay )

சில வாரங்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில், தமிழக காவல்துறையினர் எப்போதும் போல வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி, கார் ஒன்று வேகமாகச் செல்ல முற்படவே, அந்த காரை தடுத்து நிறுத்தினர். `காருக்குள் என்ன?' என்று காவல்துறையினர் கேட்க, சந்தேகத்தை உறுதிப்படுத்தும்படியாக இருந்தது, காருக்குள் இருந்த 6 பேரின் பதற்றமும், முன்னுக்கு முரணான பதிலும். உடனடியாக காரை முழு பரிசோதனை செய்த போலீஸார், கறுப்பு நிறத்தில் மெழுகு போன்ற ஒரு பொருளை கைப்பற்றுகின்றனர்!

`என்ன இது?' என்று போலீஸார் கேட்க, `ஒன்றுமில்லை சார், சாதாரண கல்தான்' என்று பதில் வரவும், விசாரணை சற்று மாறுகிறது.

``இப்போது சொல், என்ன இது?"

``அது... அது வந்து... அம்பர்கிரிஸ் சார்!"

`` எத்தனை கிலோ?"

``2 கிலோ இருக்கும் சார்..."

``எங்கிருந்து உங்களுக்கு கிடைச்சது?"

``தஞ்சாவூரிலிருந்து... விற்குறதுக்காக எடுத்துட்டு வந்தோம் சார்" என்று சொல்லி முடிக்கவும்... அந்த ஆறுபேரின் கைகளிலும் விலங்குகள் பூட்டப்படுகின்றன. கடல் வாழ் உயிரினம் மற்றும் வனவிலங்கு சட்டப்படி, அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறு பேரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Sperm Whale
Sperm Whale
Image by Viktor Bernhard from Pixabay

அப்படி என்ன குற்றம்? சாதாரண மெழுகு கல்லுக்கும் கடல் உயிரின சட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? முதலில் அம்பர்கிரிஸ் என்றால் என்ன, எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது, அதை விற்றால் தண்டணையா?

இப்படி பல்வேறு கேள்விகள் நிச்சயம் எழும். எழ வேண்டும்! அதற்கான விடைகளைத்தான் இந்தக் கட்டுரைத் தொகுப்பு உங்களுக்கு விளக்க இருக்கிறது.

அம்பர்கிரிஸ் என்றால் என்ன?

ஸ்பெர்ம் வகை திமிங்கிலத்தின் உமிழ் நீர் அல்லது வாந்தி என்று சொல்லப்படும் ஒரு கழிவுப்பொருள்தான் `அம்பர்கிரிஸ்.'

அம்பர்கிரிஸ் எப்படி உருவாகிறது?

அம்பர்கிரிஸ், ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, திமிங்கிலம் தனது இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகுபோன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, திமிங்கிலம் தனக்கு பிடித்த Cuttlefish எனப்படும் கணவாய் மீன்கள், ஆக்டோபஸ்களை வேட்டையாடி விழுங்கும்போது, அந்த மீன்களின் கூறிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமான பிரச்சனையும் ஏற்படவும் மிக அதிக அளவு வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக இயற்கையிலேயே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் அம்பர்கிரிஸ் எனப்படும் மெழுகுபோன்ற திரவம்.

Sperm Whale
Sperm Whale
Image by Christian Neßlinger from Pixabay

உணவு உட்கொண்ட பின்னர், ஜீரணமாகாத உணவு மற்றும் தேவையற்ற கழிவுகளை வாந்தி எடுப்பதன் மூலம் வெளியேற்றுகின்றன. அப்படி வெளியேற்றப்படும் வாந்திக் கழிவுகள்தான் அம்பர்கிரிஸ்சாக கடலில் மிதக்கின்றன.

பின்னர் அவை, சூரிய ஒளி மற்றும் கடலின் உப்பு நீரால் கறுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற அம்பர்கிரிஸ்சாக உருப்பெருகின்றன. இறுதியாக அவை கடற்கரையோரங்களிலும், மீன்பிடி வலைகளிலும் `புதையல் பொக்கிஷமாக' மீட்டெடுக்கப்படுகின்றன.

அம்பர்கிரிஸ் எதற்கெல்லாம் பயன்படுகிறது?

அம்பர்கிரிஸ் உலக அளவில் `உயர்ரக வாசனைத் திரவியங்கள்' தயாரிக்கும் மூலப்பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும் உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

மருத்துவத்துறையில், அம்பர்கிரிஸ் பால்வினை சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தரும் மருந்தாக விளங்குகிறது. மேலும், யுனானி மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகளுடன் சேர்க்கப்பட்டு மூளை, நரம்பு, பாலுறவு போன்ற உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வாக விளங்குகிறது. மேலும், சீனாவில் பாலியல் டானிக் தயாரிக்கவும் அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது.

Perfume (Representational Image)
Perfume (Representational Image)
Image by S. Hermann & F. Richter from Pixabay

அம்பர்கிரிஸ் முக்கியமாக வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதில்தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகளிலும், வாசனைப் பொருள்களை அதிகம் விரும்பும் மக்கள் வசிக்கக்கூடிய அரபு நாடுகளிலும் மிக அதிக அளவு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அரபு நாடுகளில் அம்பர்கிரிஸ்க்கு என தனி மதிப்பும் மவுசும் உள்ளது.

சர்வதேச அளவில் இதன் மதிப்பு என்ன?

சர்வதேச அளவில் 1 கிலோ அம்பர்கிரிஸின் விலை 1 கோடியிலிருந்து ஒன்றரை கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்புக்காகவே திமிங்கிலங்கள் அதிக அளவு வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டன. இதனால், இந்தியா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அம்பர்கிரிஸ் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், செயற்கையான அம்பர்கிரிஸ் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தாலும், இயற்கையில் திமிங்கிலத்தின் கழிவாகக் கிடைக்கும் அம்பர்கிரிஸின் மதிப்பு மட்டும் சர்வதேச சந்தையில் குறையவே இல்லை.

அம்பர்கிரிஸ்ஸை தவறுதலாகக் கண்டு கையில் எடுத்த ஏழைகள் பலர், ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர். அதே சமயம், தெரிந்தே பேராசை கொண்டு, திமிங்கிலங்களை வேட்டையாடி அம்பர்கிரிஸ்ஸை கையிலெடுத்த, கோடீஸ்வரர்கள் பலர் குற்றவாளிகளாகவும் மாறியுள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் அம்பர்கிரிஸ்ஸின் மதிப்பு. தங்கத்தைவிடவும் அதன் மதிப்பு கூடுதல். அதனால்தான் அம்பர்கிரிஸ் `கடல் தங்கம்' எனவும் `மிதக்கும் தங்கம்' எனவும் வர்ணிக்கப்படுகிறது.

Ambergris
Ambergris
Photo: Peter Kaminski / Wikimedia Commons

இந்தியாவின், வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கிலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆகவே, திமிங்கிலங்களை வேட்டையாடுவது அல்லது வர்த்தகம் செய்வது குற்றமாகும். இருப்பினும், குஜராத், மும்பை, தமிழகம் உள்ளிட்ட இடங்களில் அம்பர்கிரிஸ் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.