Published:Updated:

மூடநம்பிக்கைகளால் அழியும் அரிய கருமந்திகள்... நீலகிரி வனத்துறையின் கவனத்துக்கு!

Nilgiri Langur
Nilgiri Langur

விளை நிலத்தில் அமர்ந்து கேரட் தின்றுகொண்டிருக்கிறது கருமந்தி. இது ரசிக்கக்கூடிய விஷயம் அல்ல. மனிதர்களைக் கண்டாலே தெரித்து ஓடும் குணம் கொண்ட மந்திகள் இன்றைக்குக் காடுகளை இழந்து, உணவு தேடி அலைவது அவலத்தின் உச்சம்.

`காட்டுயிர்களின் சொர்க்கம்' என அழைக்கக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை தன்னுள் பல அதிசயங்களைக் கொண்டுள்ளது. பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான இந்தக் காடுகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிலையில் காடழிப்பு, அதிகரிக்கும் பணப்பயிர்கள் பரப்பளவு, கட்டட மயம், வளர்ச்சிப் பணிகள் எனப் பல்வேறு காரணங்களால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மழைக் காடுகள் பெருமளவு சூறையாடப்படுகின்றன. அதனால் காட்டுயிர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

Western ghats
Western ghats

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 132 வகையான பூக்கும் தாவரங்கள், 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகையான நீர் மற்றும் நில வாழ்வன, 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 39 வகை மீன் இனங்கள், 60 வகையான ஊர்வன ஆகியவற்றில் பெரும்பாலானவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஓரிட வாழ்விகள் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறப்பம்சங்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஓரிட வாழ்விகள் அதிகம் காணப்படுகின்றன. நீலகிரி வரையாடு, நீலகிரி பாடும் பறவை, நீலகிரி கருமந்தி போன்றவை உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்கள். `சூழலியல் மாற்றத்தால் காட்டுயிர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டு வருகின்றன’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக, குரங்குகளின் நடத்தைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Nilgiri Langur
Nilgiri Langur

தேவாங்கு, மந்தி, குரங்கு, வாலில்லா குரங்கு என இந்தியாவில் நான்கு வகையான குரங்கு இனங்கள் உள்ளன. அவற்றுள் ஒரு வகையான வாலில்லா குரங்கு, 2 வகையான தேவாங்கு, 8 வகையான குரங்கு, 5 வகையான மந்திகள் இந்தியாவில் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் தேவாங்கு, சாம்பல் நிற மந்தி, கருமந்தி, நாட்டுக் குரங்கு, சிங்கவால் குரங்குகள் வசிக்கின்றன.

நீலகிரி கருமந்தி (Nilgiri langur) எனப்படும் சோலை மந்திகள், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் உள்ள மழைக்காடுகளில் காணப்படுகின்றன. அடர் கருமை நிறத்தில் உடலும், தலையில் குல்லா வைத்தது போலச் சாம்பல் நிறத்தில் ரோமங்கள் காணப்படும்.

nilgiri langur
nilgiri langur

மற்ற மந்தி இனங்களைப் போல பகலாடியாகவும் கூட்டமாகவும் வாழும் இயல்பைக் கொண்டிருந்தாலும் மர உச்சிகளில் மட்டுமே வாழும்‌. மனிதர்களைக்கண்டாலே தவிர்த்து ஓடும் சுபாவம் கொண்ட இந்த கருமந்திகள் காடுபரவலுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. வேட்டையாடல், காடழிப்பு, களைத்தாவர பெருக்கம் போன்றவற்றால் நீலகிரி கருமந்திகள் வாழிடத்தை இழந்து அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கருமந்திகள் குறித்து நம்மிடம் பேசிய, உதகை அரசுக் கலைக் கல்லூரி வன உயிர் பேராசிரியர் ராமகிருஷ்ணன், ``முதலில் அனைவரும் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மந்தி இறைச்சியில் எந்த மருத்துவ குணமும் கிடையாது. பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது என்ற மூடநம்பிக்கையில் மந்திகள் வேட்டையாடப்படுகின்றன. இதுவே கருமந்தி இனம் அழியக் காரணமாக இருக்கிறது. கருமந்திகள் குறித்த கணக்கெடுப்பு இதுவரையிலும் முறையாக நடத்தப்படவில்லை.

Ramakirishanan
Ramakirishanan

எனவே, இவற்றின் வாழிடங்களைக் கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கருமந்திகளுக்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அவற்றின் எண்ணிக்கை, பாலின விகிதம் போன்றவற்றையும் கணக்கெடுப்பு செய்வது அவசியம்" என்றார்.

கருமந்திகள் குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் ராமமூர்த்தி, ``நீலகிரி உயிர்கோளத்தில் மட்டுமே வாழும் அரிய வகை கருமந்திகள், உயரமான மரங்கள் நிறைந்த நீலகிரி மலைப்பகுதியில் அடர்ந்த காடுகளில் வசிப்பவை. வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உணவு தேடி நுழைகின்றன. தொடர்ச்சியாக காடுகள் துண்டாடப்பட்டு தீவுகளாக்கப்படுகின்றன. மனித தவறுகளால் காடுகள் சிதைக்கப்படுகின்றன. இதனால் ஒரே கூட்டத்தில் உள்ள உடன் பிறப்புகளுடன் உடலுறவுகொண்டு இனப் பெருக்கம் செய்கின்றன. இதனால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.

Ramamurthy
Ramamurthy

இந்த வகை மந்திகள் மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளியும் சுபாவம் கொண்டவை. வனங்கள் அழிக்கப்படுவதால், உணவுக்காக மனிதர்களின் வசிப்பிடங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் அதிகம் நடமாடாத இந்த கருமந்திகள், சமீபகாலமாக உணவு தேடி குடியிருப்பை ஒட்டிய பகுதிகளிலும் விளை நிலங்களிலும் சுற்றித் திரிகின்றன. ரசாயனம் தெளிக்கப்பட்ட பயிர்களை உண்பதன் மூலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, இவற்றைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கருமந்திகளைப் பாதுகாப்பதன் மூலம் சோலைக்காடுகள் பாதுகாக்கப்படும். அதன் மூலம் நீராதாரங்கள் பாதுகாக்கப்படும். இதனால் ஆண்டு முழுவதும் மனிதர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கவும் கருமந்திகள் மறைமுகமாக வழி செய்கின்றன.

காட்டுயிர் ஆர்வலரும் கூடுகள் அமைப்பின் நிறுவனருமான சிவதாஸ், ``நீலகிரி சோலைக்காடுகளின் சொத்தாகக் கருதப்படும் பல உயிரினங்களில் நீலகிரி கருமந்தியும் ஒன்று. சமூகமாக வாழும் இந்த கருமந்திகள் வன வளத்தின் குறியீடு. ஈரப்பதம் நிறைந்த, மரங்களடர்ந்த மழைக்காடுகளில் வாழும் கருமந்திகள், நீலகிரியில் அவலாஞ்சி, அப்பர்பவானி, பைகாரா, போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. கருமந்திகளை பாதுகாப்பதன் மூலம் சோலைக்காடுகள் பாதுகாக்கப்படும். அதன் மூலம் நீராதாரங்கள் பாதுகாக்கப்படும். இதனால் ஆண்டு முழுவதும் மனிதர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கவும் கருமந்திகள் மறைமுகமாக வழி செய்கின்றன. எனவே, இவற்றை இதன் வாழ்விடங்களில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்" என்றார்.

Sivadhas
Sivadhas

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நீலகிரி கருமந்திகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் வாழிடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கருமந்திகளை தனியாக கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

வன வளத்தின் குறியீடாகவே கருதப்படும் கருமந்திகள் காக்கப்படுவதும் கைவிடப்படுவதும் வனத்துறையின் வசம் உள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு