Published:Updated:

`50 கோழிகள்... மாதம் 20 ஆயிரம் லாபம்!'- மொட்டைமாடி கோழி வளர்ப்பில் அசத்தும் சினிமா ஒளிப்பதிவாளரின் மனைவி

Rajendran - Rajeswari
Rajendran - Rajeswari

``கோழிக் கழிவுகள் செடிகளுக்கு உரமாகுது. எங்க வீட்டுத் தேவைக்குப் போக, பெங்களூர்ல இருக்கிற என் மகள் குடும்பத்துக்கும் மாதம் 30 முட்டைகளை அனுப்பிடுவோம்."

வயல் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில், வீட்டு மொட்டைமாடிகளில் விவசாயம் நடந்து வருகிறது. அதன்மூலம், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்திசெய்வதுடன், சிலர் விற்பனையும் செய்துவருகிறார்கள். தற்போது, சிலர் மொட்டை மாடியில் கோழி வளர்ப்பையும் செய்து வருகிறார்கள்.

Rajeswari
Rajeswari

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள ராஜேந்திரன் - ராஜேஸ்வரி தம்பதியர் வீட்டு மொட்டைமாடியில் கோழிகளை வளர்த்து வருகிறார்கள். அதன் மூலமாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர், ராஜேந்திரன். 'காலம் மாறிப்போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்', 'பொறந்த வீடா புகுந்த வீடா' உட்பட, இயக்குநர் வி.சேகரின் படங்களுக்கும், தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். 'கொண்டான் கொடுத்தான்' திரைப்படத்தின் இயக்குநர். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தில் சினிமாவிலிருந்து விலகியவர். தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் பாரம்பர்ய சமையல் நிகழ்ச்சிகளை இயக்கி, தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.

Kozhi
Kozhi

வீட்டில் கோழிகளுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ''புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர்தான் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். சின்ன வயசுல இருந்தே இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் அதிகம். சினிமாவுல ஒளிப்பதிவாளராக வேலை செஞ்சப்ப, படப்பிடிப்புக்காக கிராமங்களுக்குப் போவோம். அப்ப, அங்கிருக்கிற விவசாயிகளை சந்திச்சுப் பேசுவேன். பசுமை விகடனின் ரெகுலர் வாசகர் நான். இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து, ரசாயன விவசாயத்தோட தீமைகளைத் தெரிஞ்சுகிட்டேன். அதுக்குப் பிறகு, இயற்கை விவசாயக் காய்கறிகளையே வாங்க ஆரம்பிச்சோம். ஒருகட்டத்துல இயற்கை விவசாய ஆர்வத்தால, சினிமா துறையிலிருந்து விலகினேன்.

ரசாயனம் கலக்கப்பட்ட தீவனங்களைக் கொடுத்து வளர்க்கப்படுற கோழி, முட்டை எல்லாமே உடம்புக்குக் கெடுதல்னு தெரிஞ்சது. அதை அனுபவத்துலயும் உணர்ந்தோம். பேரக் குழந்தைகளோட நலனுக்காக, நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம்னு முடிவு பண்ணினோம். சில பெட்டைக் கோழிகளை வாங்கி மொட்டைமாடியில வளர்த்தோம்.

Rajendran - Rajeswari
Rajendran - Rajeswari

அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க, முட்டைகளை விலைக்குக் கேட்டாங்க. அதுக்குப் பிறகுதான் இதைத் தொழிலா மாத்துனோம். இப்ப, அதுவே நிலையான வருமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துடுச்சு. நான் தினமும் கொஞ்ச நேரம்தான் இவற்றைப் பார்த்துப்பேன். என் மனைவிதான் கோழிகளைப் பொறுப்பா வளர்க்குறாங்க'' என்கிற ராஜேந்திரனைத் தொடர்ந்து, அவரின் மனைவி ராஜேஸ்வரி பேசினார்.

''800 சதுர அடி பரப்பளவுள்ள மொட்டைமாடியிலயே மேய்ச்சல் முறையிலதான் கோழிகளை வளர்க்கிறோம். ராத்திரி மட்டும் கூண்டுல அடைக்கிறோம். மருத்துவ குணமுள்ள கடக்நாத், சிறு விடைக் கோழிகளை வளர்க்குறோம். சராசரியாக 50 கோழிகள் எப்பவும் இருக்கும். மத்த கோழிகளைக் கழிச்சிடுவோம். இப்போ ஏழு சேவல்கள், 43 பெட்டைக் கோழிகள் இருக்குது. அதுல சில கோழிகள் முட்டையிடுது. சராசரியாக தினமும் 20 முட்டைகள் கிடைக்கும். அதுல பாதி முட்டைகளை வித்துட்டு, பாதி முட்டைகளை குஞ்சுபொரிக்க வெச்சுக்குவோம். இழப்புகள் போக, மாசத்துக்கு சராசரியாகத் தரமான 200 கோழிகள் தங்கும்.

Kozhi
Kozhi

அரிசி, கம்பு, சோளம், கோதுமை தவுடு, அசோலா மற்றும் வெங்காயத்தோல் உட்பட, வீட்டு காய்கறிக் கழிவுகள், மீதமாகும் உணவுகளையும் கோழிகளுக்குக் கொடுப்போம். பக்கத்துல இருக்கிற மளிகைக்கடைகள்ல இருந்து காய்கறிக் கழிவுகளை எடுத்துட்டு வந்தும் கொடுப்போம். 'தினமும் ரெண்டு வேளை தண்ணி வெச்சுடுவோம். வாரத்துல ரெண்டு நாள் மொட்டைமாடியை சுத்தம் செஞ்சிடுவோம்.

மொட்டைமாடியில மூன்று அடி தடுப்புச் சுவர் மேல மூன்றடி உயரத்துக்கு நிழல்வலையைக் கட்டிவிட்டிருக்கோம். இதைத் தாண்டி கோழிகள் வெளியே போகாது. மொட்டைமாடியில கழிவு நீர் தங்காம பார்த்துக்கிறோம். கோழிக்கழிவுகள் செடிகளுக்கு உரமாகுது. எங்க வீட்டு தேவைக்குப் போக, பெங்களூர்ல இருக்கிற என் மகள் குடும்பத்துக்கும் மாதம் 30 முட்டைகளை அனுப்பிடுவோம்.

Rajeswari
Rajeswari

பெரும்பாலும் மூலிகை உணவுகளைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். அதனால, தடுப்பூசி போடுற தேவையும் ஏற்படாம, கோழிகள் எதிர்ப்புச் சக்தியோட ஆரோக்கியமா வளருது. கோழிகளுக்கான பராமரிப்புச் செலவு, மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாய்தான் ஆகுது" என்றவர், தொடர்ந்து வருமான வாய்ப்புகள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

''கடக்நாத் கோழிகள், வருஷத்துக்கு 100 - 120 முட்டைகள் இடும். ஒரு முட்டை 30 ரூபாய்க்கு விற்கிறோம். வருஷத்துக்கு 80 - 100 முட்டைகளையிடும். சிறு விடைக்கோழியின் ஒரு முட்டையை 20 ரூபாய்க்கு விற்கிறோம்.

சராசரியா தினமும் 20 முட்டைகள் கிடைக்கும். அதுல பாதி முட்டைகளை வித்துட்டு, பாதி முட்டைகளை குஞ்சுபொரிக்க வெச்சுக்குவோம். இழப்புகள் போக, மாசத்துக்கு சராசரியாகத் தரமான 200 கோழிகள் தங்கும்.

கோழிகளைத் தேவைக்கு ஏத்த மாதிரி பொதுமக்கள் வாங்கிட்டுப் போறாங்க. கடக்நாத் கோழியை கிலோ 600 ரூபாய்க்கும், சிறுவிடைக் கோழியை கிலோ 450 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம்.

Kozhi
Kozhi

திலகவதி ஐபிஎஸ் உட்பட பல பிரபலங்கள் எங்ககிட்ட ரெகுலரா கோழி, முட்டைகளை வாங்குறாங்க. விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு கோழிமூலம் வருஷத்துக்கு குறைந்தபட்சம் 70 கோழிகளை உருவாக்கலாம். செலவு போக மாசம் சராசரியா 20,000 ரூபாய்க்கு அதிகமா லாபம் கிடைக்குது. கோழி வளர்ப்பு, ஓய்வுநேரத்துக்கான நல்ல பொழுதுபோக்கு. அதோட, வீட்டிலிருந்தபடியே நிலையான வருமானத்தையும் கொடுக்குது" என்றார் மகிழ்ச்சியுடன்.

மாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு!
அடுத்த கட்டுரைக்கு