Published:Updated:

கூடலூர்: உணவுதேடி வந்த யானை! - சேற்றில் சிக்கி எழ முடியாமல் உயிரிழந்த சோகம்

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

`இறப்புக்கான காரணத்தை விசாரித்து வருகிறோம். இது ஆக்கிரமிப்பு நிலமாக இருக்கும் பட்சத்தில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள மணல் கொள்ளி பகுதிக்கு உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று சேற்றில் புதைந்து, மேலே எழ முடியாமல் போராடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர்  வனத்துறையினர், சேற்றில் சிக்கி மேலே எழ முடியாமல் தவித்த, இந்த யானை உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில்,``இது ஒரு ஆண் காட்டு யானை. சுமார் 25 வயது இருக்கக் கூடும். வனத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல கூடலூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட செக்ஷன் 17 நிலத்தின் வழியாகச் சென்றுள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் விதிமுறைகளை மீறிப் பயிரிட்டுள்ளனர். இதனால், சிறிய குட்டையைப் போல இந்த இடம் மாறியுள்ளது. இதன் காரணமாக யானையின் கால்கள் புதைந்து, மேலே எழ முடியாமல் தவித்துள்ளது. தந்தமும் சேற்றில் புதைந்துள்ளது

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

நீண்ட நேரம் போராடியும் எழ முடியாததாதல் உயிரிழந்தது. நாளை உடற் கூறாய்வு மேற்கொள்ளப்படும். இறப்புக்கான காரணத்தை விசாரித்து வருகிறோம். இது ஆக்கிரமிப்பு நிலமாக இருக்கும் பட்சத்தில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

30 ஆபரேஷன்... உயிரைப் பணயம் வைக்கும் யானை டிரைவர் ஆறுச்சாமியின் கதை ! | Elephant

யானை இறந்த சம்பவம் குறித்து வேடன் வயல் பகுதி மக்கள் கூறுகையில், ``இந்த யானை இரவு நேரத்துல வந்து‌ போறது வழக்கம். நேத்து நைட்டும்‌ அதே மாதிரிதான் போயிருக்கு. ஆனா, எதிர்பாராம சேத்துல மாட்டியிருக்கு.யாருக்குமே தெரியல.மூணு மணிக்குத்தான் பார்த்தோம். நாங்க உயிர் இருக்கும்னு நினைச்சு உடனே தகவல் சொல்லிட்டோம். ஆனா இறந்துருச்சி" என்றனர்.

யானை
யானை

கும்கி யானைகள் உதவியுடன் ‌கோவை மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு, முதுமைலையில் விடுவிக்கப்பட்ட, விநாயகன் என்ற‌ காட்டு யானையே‌ இங்கு பயிரிட்டுள்ள பாக்கு, வாழை உள்ளிட்டவற்றை உண்ண வந்தபோது இறந்திருக்கலாம் என‌ காட்டுயிர் ஆர்வலர்கள் சந்தேகித்து வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் இதனை‌ உறுதிப்படுத்தவில்லை.

அடுத்த கட்டுரைக்கு