Published:Updated:

பழங்குடியின இளைஞர் கண்முன்னே நண்பரைத் தூக்கிச் சென்ற யானை! - கூடலூர் வனத்தில் சோகம்

Vijayan
Vijayan

தலைமுறைகளாக வனங்களில் வாழும் பழங்குடிகளுக்கும் வன விலங்குகளுக்கும் எதிர்கொள்ளல்கள் என்பது அரிதான ஒன்றாகவே இருந்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கேரள எல்லையோரப் பகுதியான பாட்டவயலில் இருந்து இரண்டு பழங்குடி இளைஞர்கள் வனப்பகுதியில் இருக்கும் அவர்களின் கிராமமான பென்னைக்கு நேற்று இரவு நடந்து சென்றுள்ளனர்.

elephant attack
elephant attack

புலி மற்றும் யானை நடமாட்டம் உள்ள இந்த வனத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கையில் திடீரென எதிரே ஒரு காட்டு யானை நின்றுள்ளது. உடனே இருவரும் சுதாரித்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால், இதில் ஒரு இளைஞரை யானை தும்பிக்கையால் பிடித்து தூக்கிச் சென்றுள்ளது.

யானையிடம் தப்பி ஓடிய மற்றொரு இளைஞர், ஊர் மக்களிடம் சென்று நடந்ததை விவரித்துள்ளார். உடனே வனத்துறைக்குத் தகவல் அளித்துவிட்டு யானையிடம் சிக்கிய இளைஞரை டார்ச் லைட் மற்றும் தீப்பந்தங்களுடன் வனத்துக்குள் தேடிச்சென்றுள்ளனர். வனப்பகுதியில் புதர் அருகில் இறந்த நிலையில் அந்த இளைஞரின் உடலை கண்டெடுத்தனர்.

elephant attack
elephant attack

அரசுத் துறையினர் வரும் வரை அதே இடத்தில் தீ மூட்டி இளைஞரின் உடலை பாதுகாத்து வந்தனர். பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், ``பென்னை பகுதி மக்கள் இந்த வழியாக தங்கள் கிராமத்துக்குச் செல்வது வழக்கம்தான். பழங்குடியினத்தைச் சேர்ந்த விஜயன் மற்றும் சுரேஸ்குமார் இரண்டு பேரும் நேற்று இரவில் அப்பகுதியில் நடந்துசென்றுள்ளனர். அப்போது, 26 வயதான விஜயனை தும்பிக்கையால் தூக்கிச் சென்று சற்று தொலைவில் கீழே போட்டு யானை மிதித்து கொன்றுள்ளது" என்றனர்.

விஜயன்
விஜயன்

தலைமுறைகளாக வனங்களில் வாழும் பழங்குடிகளுக்கும் வன விலங்குகளுக்கும் எதிர்கொள்ளல்கள் என்பது அரிதான ஒன்றாகவே இருந்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு