Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“பற்களை உடல்நலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பார்வை நீங்கி, இன்று அழகுக்காக பற்களை என்ன செய்யலாம் என்ற கருத்து மேலோங்கி உள்ளது. ‘பளிச்’ புன்னகைக்குப் பலதரப்பட்ட பற்பசைகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. ‘ஒரே வாரத்தில் பளிச் பற்கள்... அழகான புன்னகை’ என மாயஜால வார்த்தைகளால் கவரும் பற்பசைகள் உண்மையில் பற்களை வெண்மைப்படுத்துகின்றனவா என்றால் இல்லை. இயல்பான விஷயங்கள்கூட இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகின்றன.  ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பின் தோன்றும் பற்கூச்சத்தைக்கூட பிரச்னையாகக் கருதி, பற்கூச்சத்துக்கான பிரத்யேகப் பற்பசைகளைப் பயன்படுத்துகின்றனர். எது உண்மையான பற்கூச்சம் என்பது பற்றிய புரிதல் இன்மைதான் இதற்குக் காரணம்” என்கிறார் பல் மருத்துவர் செந்தில்குமரன்.

“எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், பல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளைத் தவிர்த்துவிட முடியும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வாய் கொப்பளிப்பதால் பல் இடுக்குகளில் உணவுத்துகள்கள் மாட்டாமல், பற்கள் சுத்தமாக இருக்கும். இதனால், பற்சிதைவு வராமல் தடுக்க முடியும். அதுபோல, தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும். காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அருந்தலாம். டூத் பிக்ஸ் பயன்படுத்துவது, ஹேர் பின், சேஃப்ட்டி பின் போன்றவற்றால் பல்லில் மாட்டிக்கொண்ட உணவுத்துகள்களை எடுப்பதுபோன்ற தவறான செயல்கள் நிச்சயம் பற்களைப் பாதிக்கும். பலரும் பிரஷ்ஷை மாற்றவே யோசிக்கின்றனர். குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். அழகுக்கு என பற்களை வெண்மைப்படுத்துதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இதுபோன்ற சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்” என்கிறார் டாக்டர்.

• பற்கூச்சம் என்றால் என்ன? ஏன் வருகிறது?

• பற்சிதைவுக்கான காரணங்கள் என்னென்ன?

• வேர் சிகிச்சை எதற்குத் தேவைப்படும்? யார் செய்யலாம்?

• ஞானப்பல்லை (விஸ்டம் டீத்) அகற்றலாமா? கூடாதா?

• பற்களுக்கான சிகிச்சைகள் என்னென்ன?

• டீத் வொயிட்டனிங்கை யார் செய்துகொள்ளலாம்?

• ஈறுகளில் ரத்தம் வருவது ஏன்?

• பற்கள் பராமரிப்புக்குச் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

நவம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை தினமும், 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால்...பற்கூச்சம், பல் வலி, ஈறு பிரச்னைகள் தவிர்க்கும் வழிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பல் மருத்துவர் செந்தில்குமரன்

“இன்றைக்கு முக்கிய உடல்நலக் குறைபாடாக மாறிக்கொண்டிருப்பது முதுகு வலி. 85 சதவிகிதம் பேர் தங்களது வாழ்வில் ஒருமுறையேனும் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டிருப்பார்கள். இவர்களில் 20 சதவிகிதம் பேர் அன்றாட வேலை பாதிக்கும் அளவுக்கு நிரந்தர முதுகு வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

90 சதவிகித முதுகு வலிக்கு ஜவ்வு நழுவுவதுதான் காரணமாக உள்ளது. ஜவ்வு நழுவி, முதுகுத்தண்டையும் நரம்பையும் அழுத்தும்போதுதான் வலி ஏற்படுகிறது. முதலில், முதுகு வலியும், பின்னர் நரம்பை அழுத்தும்போது கால் வலியும் ஏற்பட்டு, கால் பலவீனமாகும்.

90 சதவிகித முதுகு வலிக்கு நமது வாழ்க்கைமுறைதான் காரணமாக உள்ளது. ‘முதுகுக்கு வலிமை கொடுப்பவை முதுகெலும்புகள்’ என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், முதுகுக்கு 65 சதவிகிதம் வலு கொடுப்பவை தசைகளே. 35 சதவிகிதம்தான் எலும்பும் ஜவ்வும் வலிமை கொடுக்கின்றன.

முதுகெலும்பு வலிமை இழக்க முக்கியக் காரணமாக இருப்பது உடற்பயிற்சி இன்மை. முன்பு, உடல் உழைப்பு நிறைந்த விளையாட்டு உள்ளிட்ட செயல்பாடுகள் அதிக அளவில் இருந்தன. இப்போது, விளையாட்டுக்கூட செல்போனில், வீடியோவில் என்றாகிப்போனது. எப்போதும் குனிந்தபடி செல்போனிலோ, அமர்ந்தபடி கம்ப்யூட்டரிலோ  வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வெளிச் செயல்பாடுகள் குறைந்துவிட்டன.

அதேபோல், அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பதும் முதுகு வலிக்குக் காரணம். அதுவும் சரியான பொசிஷனில் அமராமல், தன் இஷ்டத்துக்கு அமர்வதால் தசைகள் வலுவிழக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக முதுகு வலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது உடல் பருமன்.  இப்போது இளம் வயதினரும் அதிக எடையுடன் உள்ளனர். 25 சதவிகித பள்ளி மாணவர்கள் கூடுதல் எடையுடன் உள்ளனர். இதற்கு அவர்கள் உண்ணும் ஃபாஸ்ட் புட், ஜங்க் ஃபுட் உணவு வகைகள்தான் காரணம். எனவே, தினசரி உடற்பயிற்சி செய்து, உடலைக் கட்டுக்கோப்பில் வைத்திருந்தாலே போதும், முதுகு வலி, மூட்டு வலி போன்ற நோய்களைத் தடுக்க முடியும்” என்கிறார் டாக்டர்.

• முதுகு வலிக்கான காரணமும், அதைத் தவிர்க்க செய்ய வேண்டியவையும் என்னென்ன?

• மூட்டு வலி வருவது ஏன்... தவிர்க்க என்ன செய்யலாம்?

• மூட்டு வலிக்கு மூட்டுமாற்று அறுவைசிகிச்சை தீர்வாகுமா?

• விபத்து நடந்தால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்?

• எலும்பு முறிவு சிகிச்சையில் நவீன சிகிச்சைமுறைகள் என்னென்ன?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

நவம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை தினமும்,044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், முதுகு வலிக்கான காரணங்கள், தவிர்க்கும் வழிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் எலும்பு மூட்டு மற்றும் முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.ராஜசேகரன்

*அழைப்பு சாதாரணக் கட்டணம்

- ச.ஜெ.ரவி, மினு படங்கள்: தி.விஜய், க.சர்வின்