ஹெல்த்
Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இதயத்துக்குத் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்ல சிறு சிறு ரத்தக்குழாய்கள் உள்ளன. இவற்றை  ‘கரோனரி ஆர்ட்ரிஸ்’ என்போம். இந்த ரத்தக்குழாய்களில் சில சமயங்களில் அடைப்பு ஏற்படும். இதையே ‘மாரடைப்பு’ என்கிறோம். மாரடைப்பு ஏற்படும்போது சிலருக்கு இடதுபக்க மார்பில் ஊசி குத்துவதுபோல வலிக்கும், சிலருக்குப் பிழிவதுபோல இருக்கும்,  சிலருக்கு மார்பில் எடையைவைத்து அமுக்குவதுபோல இருக்கும். சிலருக்கு, மாரடைப்பு ஏற்படும்போது கைக்கு, உதட்டுக்கு, பின் மண்டைக்கு வலி பரவலாம். சிலருக்கு, வியர்வை அதிகமாக வரும். சிலருக்கு,  வாந்தி வரும். நெஞ்சு வலி இருந்து வியர்த்தாலோ வாந்தி வந்தாலோ, அது மாரடைப்பாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது, வலி ஏற்படாது. உடல் சோர்வு இருக்கும்” என்கிறார், ‘செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை’ இதய நோய் சிறப்பு நிபுணர் எம்.சொக்கலிங்கம்.

மாரடைப்பு பற்றி மேலும் அவர் கூறுகையில் “மாரடைப்புக்கான காரணங்களை நம்மால் ‘தவிர்க்கக்கூடியவை’, ‘தவிர்க்க இயலாதவை’ என இரண்டாகப் பிரிக்கலாம். தவிர்க்க இயலாத காரணம் என்பது வயது, பாலினம், மரபணு போன்றவை. 40 வயதைக் கடந்தவர்களுக்கு இதய நோய் வர வாய்ப்புகள் அதிகம். பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், மரபணுக் காரணங்களாலும் மாரடைப்பு வரலாம். தவிர்க்கக்கூடிய காரணங்களில் பிரதானமானது சர்க்கரை நோய். இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மற்றவர்களைவிடவும்  20 முதல் 25 சதவிகிதம் வரை அதிக வாய்ப்பு உள்ளது. கெட்ட கொழுப்பு எனும் எல்.டி.எல் அதிகமாக உள்ளவர்களுக்கும், உடல்பருமன் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் டாக்டர்.

• மாரடைப்பு என்றால் என்ன?

• மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன?

• மாரடைப்புக்கான காரணங்கள் என்னென்ன?

• மாரடைப்புக்கான சிகிச்சைகள் என்னென்ன?

• இதய நோய்கள் என்னென்ன... அவற்றுக்கான சிகிச்சைகள் என்னென்ன?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

டிசம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை தினமும்,044- 66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், மாரடைப்பு என்றால் என்ன... மற்ற இதய நோய்கள் என்னென்ன... அவற்றுக்கான சிகிச்சைகள் என்னென்ன என விளக்கமாகப் பேசுகிறார் இதய நோய் சிறப்பு நிபுணர் எம்.சொக்கலிங்கம்

“மழைக்காலத்தில், தொற்றுநோய் அதிக அளவில் பரவும். காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் மட்டும் அல்ல, படர்தாமரை, சொரியாசிஸ், சேற்றுப்புண், கொசுக்கடியால் ஏற்படும் அலர்ஜி போன்றவையும் மழைக்காலத்தில் தொல்லை செய்யும். முகத்தின் அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, சருமப் பராமரிப்புக்குக் கொடுக்காத காரணத்தால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதிலிருந்து தற்காத்துக்கொள்ள, மழையில் நனைந்து  வீட்டுக்கு வரும்போது கைகால்களைக் குழாய் நீரில் நன்றாகக் கழுவி, எப்பொழுதும் சுத்தமாகவைத்திருக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணிந்திருப்பது பல தோல் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, மழையில் வெளியே சென்றால் ரெயின்கோட் போன்றவற்றை அணிய வேண்டும். உடைகள் நனைந்திருந்தால், வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக மாற்ற வேண்டும். ஈரமான உள்ளாடைகளை அணிவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவற்றைச் செய்தாலே பல சருமப் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்கலாம்” என்கிறார் மதுரையைச் சேர்ந்த சரும நோய் சிறப்பு மருத்துவர் ஓ.ஆர். ஜெயந்தி.

“மழைக்காலத்தில், தினமும் மிதமான வெந்நீரில்  குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும், உடலைத் துவட்டுகிறோம். ஆனால், ஈரமான கால் விரல் இடுக்குகளைத் துடைக்க மறந்துவிடுகிறோம். இதனால், விரல் இடுக்குகளில் சருமப் பிரச்னை ஏற்படலாம். எனவே, நகங்களை வெட்டி, காலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு கைகள், பாதங்களைச் சுத்தமாகப் பரமாரிக்க வேண்டும். அடிக்கடி சோப் போட்டுக் கழுவ வேண்டும்.

சொரியாசிஸ் பிரச்னை மழைக் காலங்களில்தான் அதிகம் வருகிறது. அதுபோல வைரஸ் தொற்றுகளும் இந்த சீசனில்தான் அதிகம் பரவும். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், பலவித நோய்களுக்கும் காரணியாக அமையும்.

மழைக்காலங்களில் சூடான உணவுகளைச் சாப்பிட வேண்டும். முடிந்த வரை மூன்று வேளைகளும் சமைத்துச் சாப்பிட வேண்டும். பலர், மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். ‘சளி  பிடித்துவிடும்’ என்று காரணம் சொல்வார்கள். பழங்கள் சாப்பிடுவது நல்லது. அவற்றில்தான் ஆன்டி ஆக்‌ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், பல்வேறு வகையான தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதையும் தடுக்கும்” என்கிறார் டாக்டர்.

• மழைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

• க்ரீம்களால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

• கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, மண்ணெண்ணெயை உடலில் பூசிக்கொள்வது சரியா?

• சோப்புகளை எப்படித் தேர்வுசெய்வது?

• தோல் நோய்களிலிருந்து குழந்தைகளை எப்படிக் காப்பது?

• தோல் வியாதிகள் பரம்பரை வியாதிகளா?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

டிசம்பர் 9 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044- 66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், மழைக்காலத்தில் ஏற்படும் தோல் நோய்கள் பற்றியும், பாதிப்புகள் பற்றியும், அதிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறார் சரும நோய் சிறப்பு மருத்துவர் ஓ.ஆர்.ஜெயந்தி

*அழைப்பு சாதாரணக் கட்டணம்

 - செ.சல்மான், இளங்கோ கிருஷ்ணன்

படம்: எம்.விஜயகுமார்