Published:Updated:

ஓ.பி.எஸ் - வி.கே.எஸ் மோதல் - முன்பே கணித்த விகடன்!

ஓ.பி.எஸ் - வி.கே.எஸ் மோதல் - முன்பே கணித்த விகடன்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ் - வி.கே.எஸ் மோதல் - முன்பே கணித்த விகடன்!

ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும் - பார்ட்-2

துணை கமிஷனர் மயில்வாகனனுக்குப் பாராட்டு, எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டை புதிதாகக் கட்ட நிதி, மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ், விசாரணை கமிஷன், தீ வைத்த போலீஸ் மீது நடவடிக்கை என ‘ரத்த வெறியாட்டத்தின் நேரடி வாக்குமூலங்கள்’ என்ற தலைப்பில் ஜூ.வி. இதழ் முழுவதும் வெளியான கட்டுரைகளுக்கு பன்னீர்செல்வம் ஆக்‌ஷன் காட்டியிருந்தார். அதை வைத்து ‘ஜூ.வி சொன்னதும்  ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும்!’ என கட்டுரை வெளியிட்டிருந்தோம். சசிகலா - பன்னீர் இடையே நடந்துவந்த மோதலை, கடந்த ஒரு மாதமாக ஜூ.வி. பதிவுசெய்து வந்தது. அந்த ரேஞ்சில் இது, ‘ஜூ.வி சொன்னதும் ஓ.பி.எஸ் வழிமொழிந்ததும் - பார்ட் 2’.  

ஓ.பி.எஸ் - வி.கே.எஸ் மோதல் - முன்பே கணித்த விகடன்!

• ‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! பாவம் பன்னீர்’ என்ற தலைப்பில் 12.2.17 தேதியிட்ட இதழில் பன்னீர்செல்வம் பந்தாடப்பட்டதை எழுதியிருந்தோம். ‘பன்னீரின் உற்சாக பலூனை முதலில் உடைத்தவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று பன்னீர்செல்வத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டே குண்டைத் தூக்கிப் போட்டார். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தன் அலுவலக லெட்டர் பேடைப் பயன்படுத்தி ‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இவை பன்னீரை அடுத்தடுத்துக் காயப்படுத்தின. அவமானங்களைச் சந்தித்தார். ஆனால், அவற்றையெல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை’ என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• வர்தா புயல் நடவடிக்கை, சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வந்தது, ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் என ஆக்‌ஷனில் இறங்கி, ‘சபாஷ் பன்னீர்’ என மக்கள் பேசிக்கொண்டதையும்... ‘இந்தியா டுடே’ ஊடக மாநாட்டில் முதல்வர் பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்தபோதே, சசிகலா அரங்கை விட்டு வெளியேறியதையும்... எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முதல்வர் பன்னீருக்கு உரிய மரியாதை தரப்படாமல்  பார்வையாளர் வரிசையில் அமர வைக்கப்பட்டதையும்... அதில் எழுதியிருந்தோம். இந்த விஷயங்களைத்தான் ஜெயலலிதா சமாதியில் செய்தியாளர்களிடம் சொன்னார் பன்னீர்செல்வம். ‘‘நீங்கள் நல்ல பெயரை வாங்கிவிடக் கூடாது பன்னீர்செல்வம்’ என்று அரசியல் சூழ்ச்சிகள் அவரைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தன. அதுதான் இப்போது மூன்றாவது முறையாக அவரது பதவியைப் பறித்திருக்கிறது’’ எனச் சொன்னதும் நடந்தேறியது.

• ‘ஜெ மரண விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா’ என்ற தலைப்பில் 15.1.17 தேதியிட்ட ஜூவி-யில் சொன்ன விஷயத்துக்குப் பிறகுதான் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதியும் விசாரணை கமிஷன் அமைப்பேன் என்ற பன்னீரின் வாக்குறுதியும் அரங்கேறியிருக்கிறது.

• ‘பாய்சன் பாயசம் பன்னீர்... முதல்வரின் கதைக்குப் பின்னால் கண்ணீர்’ என்ற தலைப்பில் 22.1.17 தேதியிட்ட ஜூவி-யில் எழுதப்பட்ட கவர் ஸ்டோரியில் பன்னீரின் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தோம். திருவள்ளுவர் தினத்தில் நடந்த விழாவில், ‘‘அரசியல் நெறி தவறாமல், குற்றமேதும் இழைக்காமல், வீரத்திலும் மானத்திலும் குறைவில்லாது ஆட்சி நடத்துபவரே சிறந்த ஆட்சியாளர் என்கிறார் திருவள்ளுவர்’’ எனப் பேசிய பன்னீர், “ஒருவரைக் கொல்ல பாய்சன் தேவை அல்ல. பாயசத்திலும் கொல்ல முடியும்’’ எனச் சொல்லி அதற்கான கதையைச் சொன்னார். அதோடு விடவில்லை, ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி... வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ என அந்த விழாவில் பன்னீர் பாடிய பாடலும் அர்த்தம் பொதிந்தது. ‘‘அரசு விழாவில் பன்னீர்செல்வம் சொன்ன, ‘பாய்சன்... பாயசம்...’ கதைக்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் சசிகலா - பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் கதைகள்தான்’’ என முத்தாய்ப்பாக அதில் குறிப்பிட்டிருந்தோம். அதுதான் தற்போது நடந்திருக்கிறது.

• ஓ.பி.எஸ் - தம்பிதுரை மோதல் பற்றி 25.1.17 தேதியிட கழுகார் பகுதியில் பிரதான பெட்டிச் செய்தி ஒன்று இடம்பெற்றிருந்தது.

• 29.1.17 தேதியிட்ட இதழில், ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்க மதுரை போன பன்னீர் பற்றி எழுதியிருந்தோம். அதில் முதல்வர் பெயர் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும் ஆர்.பி. உதயகுமாரும் சசிகலா விசுவாசத்தைக் காட்டியதையும் ‘‘நீங்கல்லாம் மதுரையில நல்லா செல்வாக்கா இருக்கீங்க’’ என அவர்களிடம் பன்னீர் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தோம். அந்த இரண்டு அமைச்சர்களைதான் ஜெ சமாதியில் பன்னீர் குறிப்பிட்டார்.

• ‘சசிகலா முதல்வர் ஆகலாமா? ஜூ.வி. சர்வே திடுக் ரிசல்ட்’ என்ற தலைப்பில் வெளியான கவர் ஸ்டோரியில், ‘ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும்’ என்ற கேள்விக்கு, சசிகலாவுக்கு கிடைத்தது 4.58 சதவிகித ஆதரவு; ஓ.பி.எஸ்-க்கு கிடைத்தது 15.56 சதவிகித ஆதரவு.

அரசியல் நாடித்துடிப்பை அறிந்து சொல்வதே நம் லட்சியம்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, கே.பாலசுப்பிரமணி