Published:Updated:

கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!
பிரீமியம் ஸ்டோரி
News
கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

‘‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப் பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவர் வாக்கை நெஞ்சில் தாங்கி 90 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுவரும் நிறுவனம், ஆனந்த விகடன். அதன் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர் களுக்கு விருதுகள் தரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, மாபெரும் விழாவாகக் கொண்டாடி விருதுகளை வழங்கியது விகடன்.

திரையுலக ஆளுமைகளுக்கான விழா கடந்த ஜனவரி 13-ம் நாள் நடந்தது. இலக்கியம், இதழியல், நம்பிக்கை தரும் மனிதர்களுக்கான விருது விழா கடந்த 30-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.  இந்த விழா, தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகளை எல்லாம் ஒன்றிணைத்த விழாவாக நடந்து முடிந்தது. அரங்கம் முழுக்க அறிஞர்களாலும் எழுத்தாளர்களாலும்  ஓவியர்களாலும் பத்திரிகை யாளர்களாலும் திரைப்பட - தொலைக்காட்சிக் கலைஞர்களாலும் மரபுக் கலைஞர்களாலும் நிரம்பி வழிந்தது. நம்பிக்கை விருது, டாப் டென் மனிதர்கள் விருது, சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது, சிறந்த தொலைக்காட்சி விருது எனக் களைகட்டியது விழா. மொத்தம் 43 விருதுகள்.

கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!
கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

உதயசங்கரின் ‘மாயக்கண்ணாடி’, ஜெயந்தி சங்கரின், ‘இடி தெய்வத்தின் பரிசு’, ராமானுஜத்தின் ‘ சந்நியாசமும் தீண்டாமையும்’, க. பூரணசந்திரன் மொழிபெயர்த்த ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு’, ஏ.கே. செட்டியார் படைப்புகளைத் தொகுத்த கடற்கரய், எஸ்.சண்முகம் மொழிபெயர்த்த ‘துயிலின் இரு நிலங்கள்’, வெய்யிலின், ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃபிராய்ட்’, இமையத்தின் ‘நறுமணம்’, சோ.தர்மனின் ‘சூல்’, பிரேம் மொழிபெயர்த்த ‘ஊதா நிற செம்பருத்தி’,   செ.ஜார்ஜ் சாமுவேல் மொழிபெயர்த்த, ‘மேன்கஸ்பியஸ்’ ஆகிய புத்தகங்கள் விருது பெற்றன. தும்பி, காடு ஆகிய சிற்றிதழ்கள் விருது பெற்றன.

பிக் எஃப் எம் மிருதுளா, ஹலோ எஃப் எம் சுரேஷ், `புதிய தலைமுறை’ கார்த்திகை செல்வன், விஜய் டி.வி ஜாக்குலின் ஆகியோர் விருதுகள் பெற்றனர். சிறந்த பண்பலையாக ரேடியோ சிட்டியும், சிறந்த டி.வி சேனலாக சன் மியூசிக் குழுவும் விருதுகள் பெற்றன. சிறந்த நெடுந்தொடருக்கான விருது `தெய்வ மகள்’ தொடருக்குக் கிடைத்தது. சிறந்த டி.வி நிகழ்ச்சியாக விஜய் டி.வி-யின் `ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ தேர்வானது. 

கடந்த ஆண்டின் டாப் டென் இளைஞர்களாக மல்லிகா, சரண்யா - பூபாலன், தமிழ் ஸ்டூடியோ அருண், சரவணன் சந்திரன், செந்தமிழன், பிரதீப் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சூர்யா - லோகநாதன், வந்திதா பாண்டே ஆகியோர்  விருது பெற்றார்கள்.டாப்டென் மனிதர்களாக ரெஜி ஜார்ஜ் - லலிதா ஜார்ஜ், முகிலன், இ.மயூரநாதன், இஸ்ரோ சிவன், ஹாசிப் கான், மனுஷ்ய புத்திரன், வெற்றிமாறன், மாரியப்பன், அஸ்வின் ஆகியோர் பெற்றார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இலங்கையில் இருந்து வந்திருந்தார் மயூரநாதன். வெளிநாட்டில் இருந்ததால் மாரியப்பனுக்கான விருதையும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கான விருதையும் அவரவர் அம்மாக்கள் பெற்றுக்கொண்டனர்.

கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!
கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

தமிழகத்தின் மிக முக்கிய இலக்கிய ஆளுமைகளான பாலகுமாரன், பிரபஞ்சன்,  எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணதாசன்,  விக்கிரமாதித்யன், ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, சாரு நிவேதிதா, சுகுமாரன், பெருமாள் முருகன், அறிவுமதி, பவா செல்லத்துரை, வேல ராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி,  யவனிகா ஸ்ரீராம், சுகிர்தராணி, லீனா மணிமேகலை, ஷைலஜா, சந்திரா, கவிதா முரளிதரன் ஆகியோர் விருதுகளை  வழங்கினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பி.ஜே.பி தலைவர் தமிழிசை ஆகியோர் விருதுகளை வழங்கினர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான உதயச்சந்திரன், சகாயம், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். நீதியரசர் சந்துரு, மயில்சாமி அண்ணாதுரை,  நடிகர் சிவகுமார், நக்கீரன் கோபால், நியூஸ் 18 குணசேகரன், ஹாக்கி பாஸ்கரன், மருத்துவர் கு.சிவராமன், ஓவியர் மணியம் செல்வன், அற்புதம்மாள், இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், சுசீந்திரன், பாண்டிராஜ், ராஜூ முருகன் ஆகியோர் பங்கெடுத்தனர். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம், பூஜா தேவரையா,  ஆகியோர் பங்கெடுத்தனர். விழாவுக்கு வந்த பிரபலங்களின் பட்டியல் வெகு நீளமானது.

‘‘சினிமாவுக்கு நடக்கும் விழாக்களில் மட்டுமே இந்த பிரமாண்டத்தைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களை, படைப்பாளிகளை கௌரவிக்கும் இந்தப் பெருமை விகடனுக்கு மட்டுமே உண்டு’’ என்றார் பிரகாஷ் ராஜ். பலருடைய பேச்சிலும் இதே கருத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் பேசும்போது, ‘’ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய விழா போல விகடன் விழா எடுக்க வேண்டும். விகடனால் மட்டுமே அது முடியும்’’ என்றார். ஒரு பத்திரிகை நடத்தும் விழாவில் இத்தனை பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டது சாதாரண நிகழ்வு அல்ல. கடற்கரய் பேசும்போது, ‘’வேறு பத்திரிகையில் வேலை பார்க்கும் எனக்கு விருது அளித்து மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்’’ என்றார் மனம் திறந்து. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ராஜ்மோகன், நட்சத்திரா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். பாரம்பர்ய நடனங்களும், பாரம்பர்ய இசையும் அரங்கை அலங்கரித்தன.

கொண்டாடி மகிழ்ந்த பண்பாட்டு விழா!

‘கடன் வாங்கிவிட்டு இருக்க முடியுமா சந்தோஷத்தின் உச்சத்தில்... முடியும்... வாங்கிய கடன் விகடன் எனும் பட்சத்தில்...’ எனக் கவிஞர் வாலி எழுதிய கவிதை வரியுடன் தொடங்கியது விழா. இங்கே சந்தோஷத்தின் உச்சத்தைக் கண்கூடாகக் காண முடிந்தது.

- தமிழ்மகன்