Published:Updated:

“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”
“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”

“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”

பிரீமியம் ஸ்டோரி
“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”

மிழக ஊடகத்துறையின் விருட்சமாகத் திகழும் விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தின் 2018-19 ஆண்டுக்கான புதிய படை தயார். இந்த ஆண்டு 75 மாணவப் பத்திரிகையாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஜூலை 27, 28, 29 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் இவர்கள் பட்டைதீட்டப்பட்டனர். சென்னை, தி.நகர், செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. 

விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடன் ஆசிரியருமான பா.சீனிவாசனின் அறிமுக உரையுடன் முகாம் தொடங்கியது. ‘வரவேற்பும் வழிகாட்டுதலும்’ என்ற தலைப்பில் இனிய ஆசானாக வகுப்பெடுத்தார் பா.சீனிவாசன். செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது, விகடனுக்கான இலக்கணம் என அவர் எடுத்தது பாலபாடம். ‘ஊடகம் இன்று’ என்ற அடுத்த அமர்வில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, ‘ஃப்ரன்ட்லைன்’ இதழின் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், ‘டைம்ஸ் நவ்’ சேனலின் டெபுடி நியூஸ் எடிட்டர் ஷபீர் அஹமது ஆகியோர் தங்களின் பத்திரிகை, ஊடக உலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஆர்.மணி: “குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டுமே தெரிந்துவைத்திருப்பேன் என்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. பல துறைகளைப் பற்றியும் உங்களுக்கு அறிமுகம் வேண்டும். நீங்கள் காந்தியை அதிகம் படிக்க வேண்டும். அவரைப் படிக்காமல் நீங்கள் இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது. சமூகவலைதளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி எனச் சென்றுகொண்டிருக்கும் இந்தக் காலத்தில், உங்களது பங்களிப்பு இன்னும் மேம்பட வேண்டும். எளிய மக்களுக்காக பேனாவைப் பிடியுங்கள்.” 

விஜயசங்கர்: “விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர முயற்சி செய்து, தோற்ற மாணவன் நான். அதன் கஷ்டம் எனக்குத் தெரியும். இன்று உங்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் வாய்ப்பு. பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு வளர்ந்துநிற்கும் தொழில்நுட்பம், நம் அனைவரையும் சோம்பேறி ஆக்கியிருக்கிறது. அதிலிருந்து சற்றே விலகி, புதிய பாதையில் செல்லுங்கள்.”

ஷபீர் அஹமது: ‘‘செய்திக்காக அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினருடன் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். அப்போது, அவர்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, உங்களை அவர்கள் பயன்படுத்த இடம் தந்துவிடக்கூடாது.”

“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”

அடுத்து, ‘கலக்கப்போவது யாரு’ டீம் நகைச்சுவைப் பட்டாசுகளை தெறிக்கவிட்டது. ‘வாங்க க்ளிக்கலாம்’ என்ற தலைப்பில் புகைப்பட இலக்கணங்களையும், அதன் மொழியையும் சுவாரஸ்யமாக விவரித்தார் நியூஸ் போட்டோகிராபர் செல்வப்பிரகாஷ். ‘புதுகை பூபாளம் கலைக்குழு’வின் பிரகதீஸ்வரனும், செந்திலும் நிகழ்த்திய ‘இங்கு அரசியல் பேசப்படும்’, கலக்கலின் உச்சம்.

இரண்டாம் நாள் முதல் அமர்வில், ‘உன்னை உணர்’ என்ற தலைப்பிலான ‘நீயா நானா’ கோபிநாத்தின் பேச்சு எனர்ஜி டானிக். அடுத்த அமர்வில் அரசியல் களைக்கட்டியது. அமைச்சர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருடன் ‘அரசியல் எனும் ஆயுதம்’ என்ற தலைப்பில் நம் மாணவர்கள் நடத்திய கேள்வி - பதில் அமர்வு காரசாரமாக அமைந்தது.

மதிய அமர்வில் இயக்குநர் வெற்றிமாறன், சூழல் செயற்பாட்டாளர் பேரா.ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் ஆகியோர் ‘தமிழகம் இனி’ என்ற தலைப்பில் பேசினர். “எதை எழுத வேண்டும், யாருக்காக எழுத வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, பசுமைவழிச் சாலை என இங்கு சுற்றுச்சூழலுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை வெளிப்படுத்த பேனா பிடிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது” என்றார் பேராசிரியர் ஜெயராமன். ஊழலுக்கெதிரான போராட்டங்கள், அரசுத் திட்டங்களில் ஒளிந்திருக்கும் முறைகேடுகள் மற்றும் ஆர்.டி.ஐ தொடர்பாகப் பயனுள்ள கருத்துகளை முன்வைத்தார் ஜெயராம் வெங்கடேசன். ஜி.டி.பி., ஜி.எஸ்.டி., ரெசஷன் போன்ற சிக்கல் நிறைந்த பொருளாதார முடிச்சுகளை புரியும் விதத்தில் எளிமையாகவும் விரிவாகவும் வ.நாகப்பன் எடுத்துரைத்தார்.

“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்!”

மூன்றாம் நாள் அமர்வில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து, மாணவப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார், நடிகர் விஜயசேதுபதி. 

2017-18 மாணவப் பத்திரிகையாளர்களில் மா.அருந்ததி, ப.தினேஷ்குமார், இரா.வாஞ்சிநாதன், சி.ரவிக்குமார் ஆகிய நான்கு பேர் ‘தலைசிறந்த’ தகுதியுடன் தேர்ச்சி பெற்றனர். இவர்களைத் தவிர ‘மிகச் சிறப்பு’, ‘சிறப்புத் தகுதி’, ‘முதல் வகுப்பு’ ஆகிய தகுதிகள் பெற்ற 23 பேருக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கான பேனா பரிசை, விகடன் வாசகர் பா.சத்தியநாராயணன் வழங்கினார்.

சீனியர் மாணவர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையின் அனுபவங்களை இவ்வருட மாணவப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.  அடுத்த ஓராண்டுக்குத் தங்கள் எழுத்துகளால், புதிய அனுபவங்களை இவர்கள் உங்களுக்குத் தருவார்கள்.

- எஸ்.மீனாட்சிசுந்தரம்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,  பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு