Published:Updated:

மீண்டெழட்டும் கேரளா!

மீண்டெழட்டும் கேரளா!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டெழட்டும் கேரளா!

சுகுமாரன்

மீண்டெழட்டும் கேரளா!

சுகுமாரன்

Published:Updated:
மீண்டெழட்டும் கேரளா!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டெழட்டும் கேரளா!

“ஓண மழை ஓடியோடிப் பெய்யும்.’’ இது மலையாளிகள் உவகையுடன் சொல்லும் பழமொழிகளில் ஒன்று. இந்த ஆண்டு ஓணத் திருவிழாக் காலத்துக்கு முன்னதாகப் பெய்யத் தொடங்கிய மழை அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது. வீட்டையும் உடைமைகளையும் மறந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் புலம்பும் அகதிகளாக்கியிருக்கிறது. கேரளத்தின் வரலாற்றில் இதுவரை காணாத வெள்ளக் கொடுமை இது. தொண்ணூற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்திருக்கும் இந்த நீர்த் தாண்டவம் மாநிலத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 

மீண்டெழட்டும் கேரளா!

கேரளத்தின் முதல் மழைப்பருவம் இடவப்பாதிக் காலம். மே மாத இறுதியில் பெய்யத் தொடங்கும் மழை, ஜூன் மாத இறுதியில் ஓயும். அதன் பின்னர் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழைபெய்யும். ஆனி ஆடிச் சாரல் என்றே இதற்குப் பெயர். இந்த ஆண்டின் பருவமழை, எதிர்பார்த்த நாட்களுக்கு முன்பே வந்தது. வழக்கத்துக்கும் அதிகமாகவே பொழிந்து  விடைபெற்றுக்கொண்டது. ஆனி ஆடிச் சாரலுக்காகக் காத்திருந்த வேளையில் மாநிலம் முழுவதும் கனத்த மழை கொட்ட ஆரம்பித்தது. பருவ மழையின் மிச்சம் என்று பொதுவாக நம்பப்பட்டது, ஒரு பேரிடரின் தொடக்கமாக அமைந்துவிட்டது. மூன்று வாரங்களாக விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்த மழை, நதிகளில் வெள்ளப்பெருக்கை அதிகரித்தது. அதன் காரணமாக கேரளத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருந்தது.  அது எச்சரிக்கைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டு மக்கள் உஷார்படுத்தப்பட்டார்கள். நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நதியோரங்களிலும் வசிப்பவர்கள் கவனத்துடன் இருக்குமாறு சொல்லப்பட்டது. ஆரஞ்சு நிற எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டது. வலுவான மழையின் பாதிப்பு ஆற்றங்கரைகளில்தான் சேதத்தை ஏற்படுத்தும் என்ற மனிதக் கணக்குகளை, அடுத்து வந்த  பெருமழை பொய்யாக்கியது. கேரளத்திலுள்ள சிறிதும் பெரிதுமான 44 நதிகளிலும் அபரிமிதமான வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டது. வந்திருப்பது மழை அல்ல; நூற்றாண்டின் மகா பிரளயம் என்பது விளங்குவதற்குள் எல்லாம் கைமீறிப் போயின.

தொடர் மழையால் முதலில் பாதிப்புக்குள்ளானவை கேரளத்தின் வடக்கு மாவட்டங்கள்தாம். விடாது பெய்த கனமழையால் ஆறுகள் நிரம்பின. காயல்கள் கரைகடந்து ஊருக்குள் புகுந்தன. வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் உருள் பொட்டல் எனப்படும் நிலச் சரிவுகள் அடுத்ததடுத்து  ஏற்பட்டன. பாறைகளும் மண்ணும் சரிந்து பல வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலர் பலியானார்கள். ஏரிகளிலிருந்து பெருகிய வெள்ளத்தில் மூழ்கியிருந்த காவல்நிலையத்தின் மீது மண்சரிந்து, மீட்க முடியாமல் போனது.  அதில் சிக்கிய மூன்று போலீஸ்காரர்கள் அரும் பாடுபட்டு உயிருடன் வெளியி லெடுக்கப்பட்டார்கள். வலுத்து வந்த மழையால் மீட்புப் பணிகளும் முடங்கின. நதிநீர் சீறிப் பொங்கியதில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நெடுஞ்சாலைகள் துண்டுபட்டன.

மீண்டெழட்டும் கேரளா!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கிய மழை ஓயவே இல்லை. பேரிடரின் இரண்டாம் கட்டத்தில் கேரளத்தின்  மத்தியப் பகுதி தத்தளித்தது. பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை, பத்தனம் திட்டை, இடுக்கி மாவட்டங்களில் மழை ஊழிக்காலத்தைக் கொண்டு வந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் ஒருபோதும் கரை மீறாமல் ஓடிக்கொண்டிருந்த பெரியாறு, பம்பை. அச்சன்கோவிலாறு உள்ளிட்ட எல்லா நதிகளும் கொந்தளித்துப் பொங்கின. பெரியாறு கரை கடந்து,  அணைகளின் மட்டம் உயர்த்தப்பட்டு, அபாயக் கட்டத்தை எட்டியது. உபரி வெள்ளம் பெருக்கெடுத்து எர்ணாகுளம் நகரத்தை மூழ்கடித்தது. கோட்டயத்தில்  ஓடும் மீனச்சிலாறும் திருச்சூர் மாவட்டத்தில் ஓடும் பாரதப்புழையும்  பத்தனம்திட்டை மாவட்டத்தில் ஓடும் பம்பையும் பெருகி எல்லா இடங்களின் தொடர்பையும் அறுத்தது. சபரிமலை பக்தர்களின் திருப்புமுனைக் கேந்திரமான  செங்ஙன்னூர் எந்தத் தொடர்புக்கும் வழியில்லாத விதமாகத் தனித்து விடப்பட்டது. பெரும்பான்மையான கட்டடங்கள் நீருக்கு அடியில் மூழ்கின. மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தார்கள். கீழே ஆளை மூழ்கடிக்கும் வெள்ளம். உணவோ மாற்றுடையோ இல்லாமல் பலரும் குடும்பம் குடும்பமாக மொட்டை மாடியில் வசிக்க வேண்டியிருந்தது. சிறு குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என்று எல்லோரும் கைவிடப்பட்ட அவலநிலையில் அச்சத்துடன் நாள்களைக் கழித்தார்கள்.

இது இந்த நூற்றாண்டின் பிரளயம் அளித்த பொதுச் சித்திரம். கேரளத்தின் பதினான்கு மாவட்டங்களில்  எந்த மாவட்டமும் எந்தச் சிற்றூரும்  இந்தத் துயரத்திலிருந்து தப்பவில்லை என்பதே நிதர்சனம். இயற்கையின் கோபத்தாலும் மனிதர்களின் பொறுப்பின்மையாலுமே இந்தப் பேரிடர்  நிகழ்ந்திருக்கிறது. இதில் சந்தேகமில்லை. எதுவானாலும் தங்களுக்கு நேர்ந்த பேராபத்தைக் கேரள மக்கள் எதிர்கொண்டவிதம் போற்றுதலுக்குரியது. 

மீண்டெழட்டும் கேரளா!

கேரளத்தின் இதுவரையான எந்த முதல்வரும் சந்தித்திராத இக்கட்டை பினராயி விஜயன் சந்தித்திருக்கிறார். அதைக் கையாளும் விதத்தில் மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். வெள்ளக் கொடுமை கைமீறிப் போகிறது என்று தெரிந்த உடனேயே அரசு எந்திரங்களை முடுக்கி விட்டார். அனைத்துத் துறை அதிகாரிகளையும் பணியாளர்களையும் களத்தில் இறக்கினார். சில மணிநேரத்துக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்திப் பணிகளை விரைவுபடுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரையும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடன் அழைத்துச் சென்றார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை மட்டுமல்ல, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களையும் செயலில் ஈடுபடுத்தினார். ‘இது நாம் ஒன்றாக இணைந்து நின்று சமாளிக்க வேண்டிய துயரம். இதில் அரசியலுக்கோ பிற வேறுபாடுகளுக்கோ இடமில்லை’ என்று உறுதியாகச் சொன்னார். இந்த உறுதிதான் பொதுமக்களுக்கு அவர்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, தாங்கள் மட்டும் தப்பினால் போதும் என்ற முண்டியடிக்கும் மனப்பான்மையில்லாமல் தாங்களும்  மீட்கப்படும்வரை அவர்களைப் பொறுமை காக்கச் செய்தது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்ற பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ராணுவத்தை அழைப்பதுதான் ஒரே மார்க்கம். மாநில அரசு கௌரவக் குறைச்சல் என்று அதற்குத் தயங்குகிறது’ என்று குறிப்பிட்டார். பொது மக்களில் ஒருவரே தொலைக்காட்சிக்கு அழைத்து ‘இது சூழ்நிலைக்குப் பொருந்தாத முடக்குவாதம்’ என்று கண்டித்தார். அது தனிக்குரல் அல்ல; இந்தக் கட்டத்தில் எல்லா மலையாளிகளிடமிருந்தும் வெளிப்பட்ட ஆதரவு முழக்கம்.

மீண்டெழட்டும் கேரளா!

கேரளத்தில் மீட்புப் பணிகள் அவ்வளவு சுலபமானவை அல்ல. பெரிய நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் குடியிருப்புகள் விலகி விலகி இருப்பவை. விரைவில் சென்று அடைய  முடியாத அமைப்பு கொண்டவை. வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் படகுகள்  எட்டுவதும் சிரமம். பல வீடுகளின் மொட்டை மாடிகள் அலுமினியக் கூரைகளால் மூடப்  பட்டவை. செங்ஙன்னூரில் இதுபோன்று அடைக்கப்பட்ட வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட மூன்று பேர் கொண்ட குடும்பம் உதவி கிடைக்கும் முன்பே நீரில் மூழ்கி இறந்தது.

இத்தனை இடையூறுகளையும் கடந்துதான் மீட்புப் பணி நடைபெற்றது. காவல்துறை, தீயணைப்புத் துறை, விரைவுக் காவல் படை ஆகிய மாநில அமைப்புகளுடன் ராணுவத்தின்  முப்பிரிவுகளும் இணைந்து உயிர்களை மீட்டன. வெகுவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகப்பட்டிருந்த மக்கள் எண்ணிக்கை சில லட்சம்.அவர்களில் பெரும்பான்மையா னவர்களை  மீட்பது போராட்டமாகவே இருந்தது. காவல்துறையும் ராணுவமும் கரைசேர்த்தவர்களுக்கு இணையாகவே தன்னார்வலர்களும் பொது மக்களும் பலரை மீட்டனர்.  இனம், சாதி, நிறம், அந்தஸ்து பேதமின்றி மலையாளிகள் ஒன்றுபட்ட அபூர்வ தருணம் இது. படகுகளும் ரப்பர் மிதவைகளும் பற்றாக்குறையாக  இருந்தபோது மீனவச் சமூகத்தினர் தங்கள் படகுகளுடனும் வள்ளங்களுடனும் உதவிக்கு ஓடி வந்தார்கள். பொதுச் சமூகம் நிதியாகவும் அத்தியாவசியப் பொருள்களாகவும் வாரிக் கொடுத்தது. சக மனிதர்கள்மீதான மலையாளிகளின் பரிவு வெளிப்பட்ட மகத்தான வேளை அது. பீவரேஜஸ் கார்ப்பரேஷன் (கேரளத்தின் டாஸ்மாக்) முன்னால் மட்டுமே வரிசையைக் கடைப்பிடிக்கும் மலையாளிகள் தாங்கள் திரட்டிய உதவிப்பொருள்களை முகாம்களில் ஒப்படைக்க, கொட்டும் மழையில் நின்ற காட்சி சிலிர்ப்பூட்டியது. 

மீண்டெழட்டும் கேரளா!

உதவிப் பொருள்களைக் கையாளுவதில் அரசு கடைப்பிடித்த முறையும் பாராட்டுக்குரியது. உதவிப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள் மீது கட்சி, மத, சாதி அமைப்புகள் தொடர்பான  ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. அதை தாசில்தார் தண்டனைக்குரியதாகவே அறிவித்தார். சென்னைப் பெருவெள்ளத்தின்போது நடந்த  அடாவடி இதற்குக் காரணமாக இருந்தது என்பது வெளிப்படை. தவறுகள்தாம் சரியான பாடங்களைக் கற்பிக்கின்றன. பொதுச் சமூகம் இந்தத் துயரைத் தன்னுடையதாகவும் எண்ணியது. குந்த இடமில்லாமல் தடுமாறிய பலருக்கும் தங்கள் வீடுகளில் இடம் கொடுத்தது. உணவளித்து ஆறுதல் சொன்னது. இந்த நிலை தங்களுக்கும் ஏற்பட அதிக நேரமாகாது என்ற அச்சமும், ஆனால் தாங்கிக்கொள்ள ஆள் வேண்டும் என்ற தைரியமும் இதற்குப் பின்னணியில் இருந்தன. இது துயரம் கொடுத்த படிப்பினை.

இந்தப் பேரழிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை சில நூறுகள் இருக்கும். உடுத்த ஆடையும் உள்ளிருக்கும் உயிரும் தவிர சகலத்தையும் இழந்தவர்கள் தொகை சில லட்சங்கள் இருக்கலாம். இழந்தவர்களை எண்ணிப் பதறுபவர்களின்  கண்ணீர் கடல் அளவு இருக்கும். இவையெல்லாம் ஊடகங்களுக்குப் பரபரப்பைக் கிளர்த்தும் செய்திகள். அதன் மூலம் தங்களுக்கான நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆனால், ஊடகங்கள் அடக்கி வாசித்தன. பொறுப்பாகச் செய்தி அளித்தன. தொடர்புச் சாதனங்கள் பலனளிக்காத இடங்களில் இருப்பவர்களுக்குத் தொலைக்காட்சிச் சேனல்களே துணைபுரிந்தன. தனித்து விடப்பட்டவர்கள் தங்கள் சொந்தங்களுடன் பேசவும் அவர்களைப் பார்க்கவும் உதவின. நிவாரண நிதியளிக்கவும் உதவிப் பொருள்களைத் திரட்டவும் ஊடகங்கள் முன்னின்றன. ஊடக வரலாற்றில் சாதனைக்குரிய நடவடிக்கை இது. 

மீண்டெழட்டும் கேரளா!

இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில்  நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. போக்குவரத்து சரி செய்யப்பட்டிருக்கிறது. அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நிலச் சரிவில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மிக மோசமான பாதிப்புக்குள்ளா கியிருக்கும் செங்ஙன்னூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை குட்டநாடு பகுதிகளில் தனித்து விடப்பட்ட சில லட்சம் பேர்களில் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் மீட்கப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கானவர்கள் முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் இரவும் பகலும் செயலாற்றுகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் வருகைக்குப் பின்னர் மத்திய அரசின் உதவியும் வரத் தொடங்கி யிருக்கிறது. 

ஆனால், வானம் இன்னும் இருண்டே இருக்கிறது. மீண்டும் கனமழை வரக் கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை பீதியை அளித்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் மின்னுகிறது.

கேரளத்தில் நிகழ்ந்திருக்கும் துயரம் முற்றிலும் எதிர்பாராதது அல்ல. வயநாடு பகுதிகளில் முதல் மழை வலுத்தபோதே அபாயகரமான நிலை ஏற்படும் என்று அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசும் வானிலை ஆய்வு மையமும் அது எந்த அளவுக்கு அபாயகரமானது என்பதை அறிந்திருக்கவில்லை. இடவப்பாதி மழை பெரும்பாலும் சாதுவாகப் பெய்து ஓயும். இடியோ மின்னலோ இருக்காது. ஆனால் இந்த முறை பலத்த இடி மின்னலுடனேயே மழையின் ஆவேசம்  பொழிந்தது. இது பருவகால மாற்றத்தின் அடையாளம் என்று குறிப்பிடு கிறார்கள். இயற்கைக்கு எதிரான நகர்மயமாக்கலும் அபரிமிதமான வன அழிப்பும் மழைப் பருவத்தைக் குலைத்திருக்கிறது. அரக்கத்தனமான மணல் பசி, நதியின் வழிகளைப் பாழாக்கியிருக்கிறது. மலைகளை நொறுக்கித் தள்ளும் கல் குவாரிகள், உருள்பொட்டலுக்கு வழிகொடுத்திருக்கின்றன. கேரளப் பிரளயத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை இவை.

இவ்வளவுக்கும் பிற மாநிலங்களைவிடச் சூழியல் பாதுகாப்பு அதிகம் பேணப்படுவது கேரளத்தில்தான். சூழியல் சட்டங்கள் ஓரளவுக்குக் கறாராகப் பின்பற்றப்படுகின்றன. சட்ட மீறலுக்குத் தண்டனையும் அளிக்கப்படுகிறது. அப்படியான சூழலிலும் இதுபோன்ற பேரிடர் நிகழ்கிறது. எனில் பிற மாநிலங்களின் நிலை என்ன? குறிப்பாகத் தமிழகத்தில். இயற்கை கேரளத்தின் வாயிலாக எல்லோருக்கும் விடுக்கும் எச்சரிக்கை இதுதான்.

முத்தாய்ப்பாக இதையும் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருள்களைத் திரட்டும் முகாம் திருவனந்தபுரம் எஸ்.எம்.வி. பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே சென்றபோது இரண்டு வட இந்திய முகங்களைப் பார்க்க நேர்ந்தது. அன்றாடக் கூலியாட்கள். இருவரும் கையில் பிளாஸ்டிக் பைகளைப் பிடித்திருந்தார்கள். ஒரு காகிதத்தை நீட்டித் தங்கள் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதித் தரச் சொன்னார்கள். எழுதிக் கொடுத்ததும் அதைப் பைகளுக்குள் வைத்தார்கள். பைகளைப் பிரித்தபோது அடுக்கி வைக்கப்பட்ட ரொட்டிகள் தெரிந்தன. மழையில் சிக்கி எங்கோ அவதிப்படும் யாரோ ஒருவருக்கு எங்கிருந்தோ வந்த இந்த யாரோ இருவரின் உதவி அது.

துன்பப்படுபவர்களும் துயர்துடைக்கக் கரம்நீட்டுபவர்களும் யாரோதானா?

சுகுமாரன் - படங்கள்: அ.குரூஸ்தனம்

மீண்டெழட்டும் கேரளா!

கேரளாவுக்குக் கைகொடுப்போம்!

கே
ரளாவில் வெள்ளம் வடிந்தாலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இழப்புகளைச் சரிக்கட்டவும் கேரளாவைச் சீரமைக்கவும் தொடர்ந்து நிதியுதவி அளிக்கவேண்டிய அவசியமிருக்கிறது. ‘கேரளாவுக்குக் கைகொடுப்போம்’ என்னும் ஆனந்த விகடனின் வேண்டுகோளை ஏற்று, வாசகர்கள் தொடர்ச்சியாக நிதியுதவி அளித்துவருகின்றனர்.

உதவும் உள்ளம் கொண்டவர்கள் Vasan Charitable Trust என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்கள் கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரிவிலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கேரளாவுக்குக் கைகொடுப்போம்’ அல்லது ‘Lets Help Kerala’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கோ அல்லது  info@vasancharitabletrust.org என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம்.