சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் ஒரு பக்கம் இருந்தாலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையின் குடிநீர்த் தேவையைப் பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்கிறது. சென்னையில் மட்டும் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் இருக்கின்றன.

இதில் வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் வரியாக, ஒரு ஆண்டுக்கு சொத்து மதிப்பில் 7 சதவிகிதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு கட்டண விகிதம் மாறுபடும். இதன் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு 885 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் மூலமாக 505 கோடி ரூபாயும், இதர உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள் மற்றும் லாரி குடிநீர் வழியாக, 380 கோடி ரூபாயும் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டிலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டிலும் நுகர்வோரிடம் இருந்து இந்த வரியும் கட்டணமும் வசூலிக்கப்படும். குடிநீர் இணைப்பு வழங்காத விரிவாக்க பகுதிகளில், வரி மட்டும் செலுத்துகின்றனர். அந்த வகையில் 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
வணிகம் சார்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் என 3,049 பேர் குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்தவில்லை... இதன் மூலம் 125 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது.

குடிநீர், கழிவு நீர் சேவை, ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது ஆகியவற்றுக்கு வரி, கட்டணம்தான் ஆதாரமாக உள்ளது. எனவே, விரைவாக வசூல் செய்ய வேண்டிய நிலையில், முதற்கட்டமாக, பல ஆண்டுகள் வரி செலுத்தாமல் இழுத்தடிக்கும் 3,049 நிறுவனங்கள் பெயரை குடிநீர் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிட உள்ளதாகக் கூறுகின்றனர்.
அடுத்ததாக, வருவாய்த்துறை மூலமாக `ஜப்தி, சீல்' நடவடிக்கையும் தொடரும். இதற்காக, இரண்டு துணை ஆட்சியர் தலைமையில், ஆறு தாசில்தார்களை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.