Published:Updated:

வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!

வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!

வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!
##~##

ஜூலை மாதம்... புதிய மாணவர்களின் வருகையால் விகடன் களைகட்டும். இதோ... இந்த வருடமும் விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14-க்காக தேர்வான 57 மாணவர்களுக்கு கடந்த 27, 28-ம் தேதிகளில் சென்னை மீனாட்சி திருமண மண்டபத்தில் பயிற்சி முகாம். 

விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனின் அறிமுக உரையுடன் முகாம் தொடங்கியது. 'நேற்று... இன்று... நாளை!’ என்ற தலைப்பில் நான்கு பிரபலங்கள் பேசினர். ''ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயத்தை ஒரு புகைப்படம் சொல்ல வேண்டும்'' என்று புகைப்படக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்தார் ஒளிப்பதிவாளர் செழியன். எழுத்தாளர் - வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, விகடனில் தான் பணியாற்றியபோது செய்தி சேகரிக்க சென்றபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லி, மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். பிக் எஃப்.எம். பண்பலைத் தொகுப்பாளர் பாலாஜி, இன்றைய பத்திரிகையாளர்கள் பன்முகத் தன்மையுடன் இயங்க வேண்டியதன் அவசியத்தை தனது கலகலப்பான பேச்சால் புரியவைத்தார். தமிழகத்தில் ஈழப் பிரச்னைக்காக மாணவர் போராட்டம் கிளர்ந்தெழுந்தபோது, அதில் தீவிரப் பங்காற்றிய தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் திவ்யா, பத்திரிகையாளர்களுக்குத் தேவையான பொறுப்பு உணர்ச்சி பற்றி பேசினார்.

வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!
வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!

'சமூகம் என்பது நான்கு பேர்!’ என்ற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். ''காண்கிற காட்சிகளை அப்படியே நாம் நம்பிவிடக் கூடாது. ஒவ்வொரு செய்திக்கும் பின்னால் நான்கைந்து பார்வைகள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஏற்கெனவே நாம் பெற்ற அனுபவங்களில் இருந்து மதிப்பீடு செய்ய வேண்டும்'' என்றார்.

'நில்... கவனி... சொல்!’ என்ற தலைப்பில் பேசினார் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்ற கே.சந்துரு. பத்திரிகை, தொலைக்காட்சி, நாடகம், சினிமா, சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் சொல்லும் விஷயங்களில் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் குறித்து உதாரணங்களுடன் விளக்கினார். ''ஒரு சாதாரணக் குடிமக்களுக்கு உள்ள உரிமைகள் மட்டுமே பத்திரிகைகளுக்கு உள்ளது. தனிப்பட்ட சலுகைகள் இல்லை'' என்றார். மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்துக்களுக்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் இரண்டு இளம்பெண்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டியவர், ''மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கிறது'' என்றார்.  

பயிலரங்கம் முடிந்த பிறகு, மாலையில் மாணவர்களுக்காக நடைபெற்ற புத்தர் கலைக் குழுவின் நிகழ்ச்சியில் உற்சாக ஆட்டம் போட்டனர் மாணவர்கள்.

பேட்டி எடுக்கும் கலையை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, முகாமின் இரண்டாவது நாளில், ஒரு சினிமா பிரபலத்தை வரவழைத்து இருந்தோம். அவர் யார் என்று தெரிந்துகொள்வதில் முதல் நாளில் இருந்தே மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர். யதார்த்த சினிமாக்களின் நாயகனான விஜய் சேதுபதிதான் அந்த நாயகன் என்று தெரிய, மாணவர்களிடம் செமஉற்சாகம். அவரைக் கேள்விக் கணைகளால் மாணவர்கள் திணறடிக்க, யதார்த்தமான நகைச்சுவையான பதில்களால் சிரிப்பு சிக்ஸர் அள்ளினார் விஜய் சேதுபதி.

வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!

கடந்த ஆண்டுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்களில் ரா.மூகாம்பிகை, தே.தீட்ஷித், ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ், பி.விவேக் ஆனந்த், செ.திலீபன், உ.கு.சங்கவி, க.பிரபாகரன், க.அபிநயா, ச.பா.முத்துகுமார் ஆகியோர் தலைசிறந்த மாணவர்களாகத் தேர்வுபெற்றனர். இதுதவிர, ஐந்து பேர் மிகச்சிறந்த மாணவர்களாகவும், சிறப்புத் தகுதியுடன் 15 மாணவர்களும் தேர்வுபெற்றனர். வருடந்தோறும் சிறப்பாக பணிபுரியும் மாணவர்களுக்கு பேனா பரிசளிக்கும் விகடன் வாசகர் சத்தியநாராயணனுக்கு, இந்த வருடம் மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி தந்தனர். செய்தி சேகரிக்கச் சென்றபோது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை புதிய மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர் கடந்த வருட மாணவர்கள்.  

இதோ, புதிய உத்வேகத்துடன் களப்பணியாற்ற புறப்பட்டுவிட்டனர் புதிய மாணவ பத்திரிகையாளர்கள். வாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே!

- ஆர்.லோகநாதன், படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்பிரமணியன், ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு