Published:Updated:

“இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்" - சௌகத் பாயோடு ஒருநாள்! #VikatanExclusive #GoodRead

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்" - சௌகத் பாயோடு ஒருநாள்! #VikatanExclusive #GoodRead
“இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்" - சௌகத் பாயோடு ஒருநாள்! #VikatanExclusive #GoodRead

“இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்" - சௌகத் பாயோடு ஒருநாள்! #VikatanExclusive #GoodRead

அதிகாலை 3.30 மணி. திருவாலங்காடு ரயில்வே ஸ்டேஷனின் உறக்கம் கலையவில்லை. ஆழ்ந்தஅமைதி சூழ்ந்திருக்கிறது. தூரத் தண்டவாளத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி மெள்ள ஊர்ந்துவருகிறது.  "ஹமீத் பாய்... நடந்துக்கிட்டே  தூங்காதீங்கோ... ஓடிவாங்கோ... டிரேன் உள்ளே வந்திடுச்சு..." கத்திக்கொண்டே வேகமாக வருகிறார் சௌகத் அலி. தோளில், குழந்தையைப் போல கவ்விப் பிடித்திருக்கிறது சாணை பிடிக்கும் மெஷின். அமைதியைக் கிழித்துக்கொண்டு ரயில் வந்து நிற்க, வெண்டர்ஸ் பெட்டியில் ஏறுகிறார்கள் இருவரும். ஒரு ஓரத்தில் மெஷினை வைத்துவிட்டு, சற்றுநேரம் சாய்ந்திருந்தவர்கள், கால்நீட்டிப் படுக்கிறார்கள். அவசர, அவசரமாக அரவணைத்துக் கொள்கிறது தூக்கம். 

5.15 மணி

இருட்டு விலகி, மெள்ள வெளிச்சம் ஊடுருவுகிறது. ரயில், வியாசர்பாடியைக் கடந்து, வண்ணாரப்பேட்டைக்குள் நுழைகிறது. தன்னியல்பாக உறக்கம் கலைந்து எழுகிறார்கள் சௌகத் அலியும், ஹமீத் பாயும். முகம் நிறைந்த தாடி... வெண்ணிற ஜிப்பா, அழுக்கு பிடித்த ஷூ என வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் சௌகத் அலி, சோம்பல் முறித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, தனது மெஷினைத் தூக்கிநிறுத்தி, துணியால் தூசு துடைக்கிறார். தனியாக துணியில் சுற்றிவைத்திருக்கும் கத்திகளைப் பத்திரப்படுத்துகிறார். ரயில், ராயபுரம் கடந்து, கடற்கரை ரயில் நிலையத்துக்குள் நுழைய, தங்கள் உடைமைகளோடு இறங்குகிறார்கள் இருவரும். 

வேகவேகமாக நடந்து, முதல் நடைமேடையை ஒட்டியிருக்கும் டீக்கடையில் ஒதுங்குகிறார்கள். முகம் கழுவி, விடியலுக்கு ஆயத்தமாகிறார் சௌகத் அலி.  

சௌகத் அலிக்கு சொந்த ஊர் திருவாலங்காட்டை அடுத்துள்ள அரிச்சந்திரபுரம். ஒருகாலத்தில் இக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு சாணைபிடிப்பதுதான் தொழிலாக இருந்தது. காலப்போக்கில், பலர் பல்வேறு தொழில்களுக்கு சிதறிவிட்டார்கள். இளைஞர்கள் `சீனரி' Scenerey படங்கள் விற்கிறார்கள். மூத்த தலைமுறையினர் மட்டும் இப்போது சாணைபிடிக்கும் தொழில் செய்கிறார்கள். நவீன உலகம், வாரிச்சுருட்டி வீசியெறிந்த கிராமியத் தொழில்களில் இன்னும் கொஞ்சமாக மிஞ்சியிருக்கிறது இந்தத் தொழில். அதிகாலை எழுந்து ரயிலேறுபவர்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வீதிகள் எங்கும் சுற்றித் தொழில் செய்கிறார்கள். சௌகத் அலியின் தொழில் தளம் தி.நகர், கோடம்பாக்கம் பகுதிகள். வெள்ளிக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் அவரை அங்கு பார்க்கலாம். 

“பெரும்பாலும் இந்தத் தொழில் செய்யிறவங்க இஸ்லாமியர்கள்தான். வெள்ளிக்கிழமை மட்டும் தொழிலுக்குப் போக மாட்டோம். தொழுகை, பள்ளின்னு ஊருக்குள்ளதான் இருப்போம். இது, ஆதி காலத்துல இருந்து எங்க ஊர்ல கடைபிடிக்கிற நடைமுறை..." என சௌகத் அலி பேசிக்கொண்டிருக்கும்போதே அறிவிப்பு ஒலிக்கிறது.

`தாம்பரம் செல்லும் அடுத்த ரயில்வண்டி இன்னும் சில நிமிடங்களில் முதல் நடைமேடையில் இருந்து புறப்படும்' 
 
மீதமிருந்த டீயைக் கவிழ்த்துக்கொண்டு, கையில் இருந்த காசை டீ கடைக்காரரிடம் திணித்துவிட்டு. மெஷினைத் தூக்கிக்கொண்டு அவசரமாக ஓடி ரயிலில் ஏறுகிறார்கள் சௌகத் அலியும், ஹமீத் பாயும். 

“அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஊரு விழிச்சிடும். மூன்றரை மணி ரயிலைப் பிடிச்சாதான் விடியக்காத்தால வீதிகளுக்குப் போக முடியும். காலையிலதான் நல்லா வியாபாரம் ஆகும். முன்னல்லாம் ஆம்பிளைங்க மட்டும்தான் வேலைக்குப் போவாங்க. இப்போ, நிலைமை மாறிப்போச்சில்லையா..? பொம்பளைங்களும் போறாங்க. 9 மணிக்கு மேல குடியிருப்புகள்ல தொழில் நடக்காது. கடந்த 25 வருஷமா பாதித்தூக்கம் ரயில்லதான். சிலபேரு, அந்தந்தப் பகுதிகள்ல இருக்கிற சைக்கிள் ஸ்டாண்டுகள்ல மெஷினை வெச்சிட்டு வந்திடுவாங்க. எங்களை மாதிரி சிலபேர் கையிலயே வெச்சுக்குவோம். மெஷின் கையில இல்லைன்னா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும்." என தன் மெஷினைத் தொட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறார், சௌகத் அலி.  

மணி 6.30.

மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தை நெருங்குகிறது ரயில். 

“ஹமீத் பாய் வழக்கமா சைதாப்பேட்டையில தொழில் செய்வார். நமக்கு கஸ்டமரெல்லாம் தி.நகர்லதான். இன்னைக்கு நேத்தில்ல... 25 வருஷமா அந்தத் தெருக்கள்லதான் சுத்துறேன். மாமா, மச்சான், அண்ணன், தம்பின்னு கூப்பிடுற அளவுக்கு நமக்கு இங்கே பழக்கமிருக்கு..." எனச் சொல்லியபடியே சாணை மிஷினைச் சுமந்துகொண்டு ஹமீத் பாயிடம் சொல்லிவிட்டு, ரயிலில் இருந்து இறங்குகிறார், சௌகத் அலி. 

ரங்கநாதன் தெருவின் முகப்பில் இருக்கும் டீக்கடைக்குள் நுழையும்போதே, "நம்ம பாய்க்கு ஒரு டீ..." என்று ஆர்டர் பறக்கிறது. சாணை மிஷினை ஒரு குழந்தையைப்போல இதமாக இறக்கிவைக்கிறார். அதோடு இணைக்கப்பட்ட பையைத் திறந்து, ஒரு துணியை எடுத்து மீண்டும் மெஷினைத் துடைக்கிறார். தனிப்பையில் வைத்திருந்த கத்திகளை எடுத்துத் துடைத்து, மெஷினில் சொருகி, அழகுபடுத்துகிறார். 

“என்னா பாக்குறீங்க... இதுதான் நம்ம ஷோகேஸ். இதோ இருக்குல்ல... இதுக்குப் பேரு சாணைக்கல்லு. மங்களூர்ல இருந்து வருது. மாசத்துக்கு ஒருக்கா, யாவாரிங்க கொண்டுவந்து எங்க ஊர்ல விப்பாங்க. அதை ஒரு கப்புல சேத்து, கீழே இருக்கிற சைக்கிள் வீலோட இணைக்கணும். கீழே இருக்கிற இந்தப் பெடலை மிதிச்சா கல்லு சுத்தும். எவ்வளவு வேகமா மிதிக்கிறமோ, அவ்வளவு வேகத்துக்கு சுத்தும். அப்போ கல்லுல கத்தியை வெச்சா தீட்டிக் குடுத்திடும். வருஷத்துக்கு ஒருதடவை கல்லு மாத்துவேன். ஆயிரம் ரூவா வரும். மொத்தமா இந்த மெஷின் செய்ய அஞ்சாயிரம் ஆகும். இதோ இந்தப் பக்கம் இருக்கு பாருங்க, சின்னதா ஒரு டப்பா. அதுதான் கல்லாப்பெட்டி. எல்லாம் சேத்து பதினெட்டு கிலோ. உங்களால தூக்கிட்டு பத்தடி நடக்கமுடியாது. நமக்கெல்லாம் சின்ன வயசுல இருந்து பழகிருச்சு. தூக்கி தோள்ல போட்டு, இறுக்கிப் பிடிச்சா குழந்தை மாதிரி கவ்விக்கிட்டுக் கிடக்கும்..."- எனப் பேசிக்கொண்டே டீயைக் குடிக்கிறார்.

நாமும் அந்த சாணை மெஷினைத் தூக்கிப்பார்க்க முயற்சி செய்தோம். பதினேட்டு கிலோ பட்டென தோளில் அமர்ந்ததும் நடப்பதற்கே சிரமமாக இருந்தது. எடுத்து வைத்த 10 அடியிலேயே தோளில் வலி எடுத்தது. இதைப் பார்த்த சௌகத் அலி, விடாமல் சிரிக்கிறார். "சாரே... உங்களால ஒரு அடி கூட நடக்க முடியாது. எங்களுக்குப் பழகிடுச்சு..."   

அடுத்த பத்தாவது நிமிடம் தொழில் ஆரம்பமாகிறது. தி.நகர் காய்கறி மார்க்கெட்தான் முதல் தொழில் தளம். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறார்.
 
"இன்னா முதலாளி... கத்தி வேணுமா...", "சிவாமியக்கா... போனவாரம் கத்தி கொண்டுவரச் சொன்னே... வாங்கலையா..", "இன்னா மாமு... உனக்கு சாணை பிடிப்பமா..?"
உறவும், நட்புமாக கடையேறி இறங்குகிறார். மணி ஏழரையாகி விட்டது. பேரங்கள் நடக்கிதே ஒழிய இன்னும் போணியாகவில்லை.

துக்காராம் முதல் தெருவின் முகப்பில் "ஏய்... சாணை கொஞ்சம் நில்லு"- ஒரு அதிகாரக் குரல் ஒலிக்கிறது.
"கைபிடிக் கத்தி கொண்டுவந்தியா.." கேட்டவரின் கையில் கத்தியைத் தருகிறார் சௌகத் அலி. 
பாதிக்குப் பாதியில் தொடங்குகிறது பேரம். 
“கடைசியா சொல்றேன்... 40 ரூவா கொடு... இல்லேன்னா கத்தியைக் கொடு..."
35 ரூபாய்க்கு முடிகிறது முதல் வியாபாரம். 

“இப்படித்தாம்பா நம்ப பொழப்பு... அஞ்சுக்கும், பத்துக்கும் அநியாயமா பேரம் பேசுவாங்க. வழக்கமா நான் கத்தி யாவாரம் பண்றதில்லை. இதுல பெரிய லாபமும் இல்லை. ஆனா, சில கஸ்டமருங்க கேக்குறாங்க. அதுக்காக எப்பவாது வாங்கிட்டு வர்றதுண்டு. இதோ இது பிரியாணி கத்தி, 20 ரூபா. கைபிடிக் கத்தி 40 ரூபா. இந்த கத்திக்குப் பேரு பாஸ்ட்புட் கத்தி. 40-க்கு குறைஞ்சு கொடுக்க மாட்டேன். இதுக்குப் பேரு பண்டாரி... இது 40 ரூபா. ஒரு கத்தி வித்தா 10 ரூபா கிடைக்கும்." 

"முன்னாடி எல்லாம் மலிவு விலையில கத்திக் கிடைக்காது. அதனால, அடிக்கடி கத்தியைச் சாணைப்பிடிக்க கூப்பிடுவாங்க. இப்பதான் 10 ரூபா, 5 ரூபாவாய்க்கு எல்லாம் சின்னச் சின்னக் கத்தி மார்க்கெட்ல வந்துடுச்சு. அதுனால, பழைய கத்தி மொன்னை ஆகிடுச்சுன்னா... கத்தியை சாணைப்பிடிப்பதற்கு பதிலா புது கத்தி வாங்கிடறாங்க. இதுனால எங்க வருமானமும் குறைஞ்சுடுச்சு. சில கத்தி சாணைபிடிக்க 15 ரூவா, 20 ரூவா ஆகும். 'என்னப்பா, எவ்வளவு ரேட் சொல்லுற... நான் இதுக்கு புது கத்தியே வாங்கிடுவேன்'னு அனுப்பிடுவாங்க. மார்கெட்ல வாங்குற கத்திக்கு எல்லாம் லைப் இருக்காது சார்.  மெஷின்ல செய்யிறது. நான் விக்கிற கத்தி எங்க ஊர்ல ஆட்கள் கையிலேயே செய்வாங்க. இதுக்குதான் லைப் அதிகம். இப்பல்லாம் சூப்பர் மார்க்கெட் போனா, பிளாஸ்டிக் பிடிபோட்ட கத்தி 25 ரூபாய்க்குக் கிடைக்குது. ஒரு மாதம் பயன்படுத்திட்டு தூக்கிப்போட்டுட்டு புதுசு வாங்கிடுறாங்க. நமக்கிட்டல்லாம் யாரு வாங்குறா..." என வருத்தப்பட்டுக்கொண்டு மெஷினைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு பயணத்தைத் தொடங்குகிறார், சௌகத் அலி. 

“சாணே... சாணே... கத்தி.... சாணே... சாணே... கத்தி..." - சுதி குலையாமல் கணீரென வெளிப்படுகிறது குரல்.
 
ஒரு வீட்டுக்குள் இருந்து ஹிந்தியில் வருகிறது ஒரு அழைப்பு. ஒரு கத்தரிக்கோலுக்கு சாணை பிடிக்க வேண்டும். 30 ரூபாய் கேட்க, 20 ரூபாய் கிடைக்கிறது.
கொஞ்ச தொலைவில், ஸ்னேகமான மற்றொரு குரல்.

"ஏய்... கொஞ்சம் நில்லுப்பா வாரேன்.."
ஒரு அரிவாள்மனையும், ஒரு கத்தியும் தீட்டத் தருகிறார் ஒரு குடும்பத்தலைவி. 

“25  வருஷமா இந்த அருவாமனையைச் சாணைபிடிக்கிறேன். தேய்ஞ்சு தம்மாத்துண்டா போயிடுச்சு. புதுசா ஒன்னு வாங்கினாத்தான் என்ன...?" கிண்டலாக பேசியபடியே, கீழிருக்கும் பெடலை மிதித்து, அதிவேகத்தில் சுற்றும் சாணைக்கல்லில் அரிவாள்மனையைத் தேய்க்கிறார், சௌகத் அலி. நெருப்புத்துளிகள் தெரித்துவிழுகின்றன. கேட்காமலேயே 40 ரூபாயை சௌகத் அலியின் கையில் திணித்துவிட்டுச் செல்கிறார். அடுத்த தெருவை நோக்கி நகர்ந்துகொண்டே நம்மிடம் பேசுகிறார். 

“எங்க தலைமுறை வரைக்கும் யாரும் ஸ்கூலுக்குப் போனதில்லை. எங்க அப்பா, அம்மி, ஆட்டுக்கல் கொத்துற தொழில் செஞ்சார். இதைவிட அது கஷ்டமான தொழிலு. நான் எட்டாப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல நம்ம மண்டைக்குள்ள படிப்பு ஏறலே. "வந்து தொழிலைக் கத்துக்கோ"ன்னு அப்பா கூட்டிக்கிட்டுப் போனார். அந்தத் தொழிலைக் கத்துக்கிட்டேன். எனக்கு பதினைஞ்சு வயசாகுற நேரத்தில அப்பா தவறிட்டார். கிரைண்டர், மிஷின்னு வந்தபிறகு, ஆட்டுக்கல்லு, அம்மிக்கல்லெல்லாம் இருக்கிற இடம் தெரியாம போய்டுச்சு. இனிமே, இந்தத் தொழில் வேணாண்ணு முடிவு பண்ணிட்டு சாணைமிஷினை எடுத்திட்டேன். அப்பதான் என் கூட பிறந்த அண்ணா இந்த தொழில்ல இருந்தார். அவர்தான் இந்த தி.நகர் பக்கம் வந்து  சாணைபிடிச்சுட்டு இருந்தாரு. அவர்கூட ஒத்தாசைக்கு வருவேன். எனக்கு இந்த தொழிலை அவர்தான் கத்துக்கொடுத்தாரு. அப்புறம் நானும் இந்த தி.நகர் பக்கமே வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அவர் சில வருஷத்துக்கு முன்னாடியே செத்துபோய்ட்டார்." என்றவர் குரலில் வருத்தம் கம்முகிறது.

"தொடக்கத்துல, கேரளா, அந்தமானுன்னு வெளி தேசங்களுக்குக் கிளம்பிருவேன். ஒருமாதம், ரெண்டு மாதம்ன்னு தங்கி தொழில் செய்வேன். அப்படிச் சுத்தித்தான் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடமெல்லாம் கத்திக்கிட்டேன். கலியாணம், புள்ளை, குட்டின்னு ஆனபிறகு, வெளியூர் போக விருப்பமில்லை. எது கிடைக்குதோ அதை வெச்சுக்கிட்டு ஊர்லயே இருப்போமுன்னு தான் இந்தப் பிழைப்பு.
  
சாணைபிடிக்கிறதைப் பாக்கும்போது சாதாரணமா இருக்கும். ஆனா, உயிரைப் புடுங்குற தொழில் இது. இந்தக் கட்டையை தூக்கித் தூக்கியே மாருவலி வந்திடும். ஒருநாளைக்கு குறைஞ்சது ஏழு கிலோ மீட்டராவது நடப்பேன். பெடல சுத்தி காலு மரத்துப் போகும். உடம்பெல்லாம் குடையும். சிலநாள், ரத்த வாந்தியெடுத்து மயங்கி விழுந்திருக்கேன். தெருத் தெருவா போய் கத்துறதால தொண்டையில் வலி எடுக்கும். தொண்டையும் நல்லா இருக்கணும், காலும், உடம்பும் நல்லா இருந்தாதான் தொழில் செய்ய முடியும். தொண்டை சரியில்லைனா அன்னைய வியாபாரம் போச்சு. கத்தினாதானே வீட்டுல இருந்து சாணைப்பிடிக்க வருவாங்க? சில சமயம், கத்தியைப் பிடிக்கும்போது சாணைக்கல்லு கழண்டு விழுந்து காலு, கையை அறுத்துப்புடும். கண்ணு கத்தியிலயும், கவனம் சாணைக்கல்லுலயும் தான் இருக்கணும். ஆரம்பத்துல, காலையில வந்தா ராத்திரிக்குத்தான் தொழில் முடிச்சு வீட்டுக்குப் போவேன். இப்போ, உடம்பு ஒத்துக்க மாட்டேங்குது. முன்னே மாதிரி நடந்து கத்த முடியல. மத்தியானமே தொழிலை முடிச்சிக்கிட்டு ரயிலேறிருவேன்..."

மேட்லி ரோடு ஏறி, "கத்தி, சாணே... கத்தி... சாணே..." என்று சத்தமிட்டபடியே ஜவுளிக்கடைகள், உணவகங்களில் நின்று நிதானித்து நடக்கிறார் சௌகத் அலி.
“நமக்கு வீடுகளைவிட, கடைகள்ல தான் கஸ்டமருங்க அதிகம். போத்தீஸ்ல இருக்கிற டைலருங்கல்லாம் நம்ம கஸ்டமர் தான். வாரம் ஒருமுறை கத்தரி சாணைபிடிப்பாங்க. பிரியாணிக்கடை, ஹோட்டல்கள்லயும் நம்மளை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பாங்க. அதனால, தினமும் ஒருமுறை இந்தப் பகுதிக்கு வந்து தலையைக் காமிச்சிடுவேன்.." 

மணி 9.30. மோதிலால் தெருவுக்குள் நுழைகிறார் சௌகத் அலி.

"கத்தி... சாணே... கத்தி... சாணே" - பிசிறில்லாமல் ஒலிக்கிறது குரல்.  
“கத்தி வியாபாரம் பண்றதுல பெரிசா லாபமில்லை. சாணைபிடிச்சாத்தான் நாலு காசு கிடைக்கும். சின்னக் கத்திக்கு சாணைபிடிக்க, 10 ரூபா. அருவாள்மனைக்கு 30 ரூபா. இளநீர் கத்தி, கறிக்கத்திக்கு 50 ரூபா. இந்தத் தொழில்ல சில நுணுக்கங்கள் இருக்கு. சிலபேர்கிட்ட பேரம் பேசணும். சிலபேர்கிட்ட கொடுக்கிறதை வாங்கிக்கணும். பொதுவா வீடுகள்ல மாசம் ஒரு தடவைதான் வேலை வரும். அதனால, பேரம் பேசுவேன். ஹோட்டல்கள்ல வாராவாரம் வேலை இருக்கும். அதனால, குடுக்கிறதை வாங்கிப்பேன். சில வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்க்கிறதைவிட அதிகம் தருவாங்க. சிலபேர் அநியாயத்துக்கு பேரம் பேசுவாங்க. 25 வருஷத்தில பலமாதிரி மனுஷங்களைப் பாத்திருக்கேன்..."

"அருவாமணை வித்தா கொஞ்சம் லாபம் கிடைக்கும். இப்ப அருவாமணை பயன்படுத்தறவங்களும் குறைஞ்சுட்டேவறாங்களே. காய்கறி வெட்டதான் ஸ்பெஷல் கத்தி, பாக்ஸ வைச்சு அமுக்கினா காய்கறி வெட்டனு எது ஏதோ புது மிஷின் வந்திருக்காமுல. அதை எல்லாம் நான் பார்த்ததுகூட இல்ல. ஆனா, இப்ப அருவாமணையும் குறைஞ்சுடுச்சு. இன்னமும் கொஞ்ச வருஷம் ஆச்சுனா.... நான் பயன்படுத்துற இந்த சாணைமிஷனையும், அருவாமணையும் அருங்காட்சியகத்துலதான் பார்க்க முடியும் போல...." சிரித்துப் பேசியபடியே குரல் எழுப்பி, தண்டபாணி தெரு கடந்து, பரபரப்பான வெங்கட்நாராயணா சாலைக்குள் நுழைகிறார். திருப்பதி தேவஸ்தான அலுவலகத்துக்கு எதிரில் அவரின் வருகைக்காக சிலர் காத்திருக்கிறார்கள்.

காலை 10 மணி 

வெங்கடேசன் தெருவுக்குள் நுழைகிறார் சௌகத் அலி. அங்கே ஒரு அரிவாள்மனை விற்கிறது. அதோடு வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்தை நோக்கி நடக்கிறார். “பத்து வருஷமா இங்கே தான் காலை டிபன். எத்தனை மணியானாலும் நமக்குன்னு கொஞ்சம் எடுத்து வெச்சிடுவாங்க. வருமானம் இல்லேன்னா, "கணக்குல வச்சுக்காங்க'னு சொல்லிட்டுப் போயிருவேன். வாரத்துல ஒருநாள் சாணைபிடிச்சு கழிச்சுக்குவாங்க.." என்றபடி நிதானமாக சாப்பிடுகிறார். சாப்பிட்டு முடித்து, மீண்டும் சௌகத் அலியின் குரல் தி.நகர் தெருக்களில் எதிரொலிக்கிறது. 

“தெருவில போறப்போ நிறையப் பிரச்னைகள் வரும். முதல்ல நாய்த் தொல்லைங்க. நாய்களைச் சமாளிக்க ஒரே வழி, அசைவே காமிக்காம நம் போக்குல நடக்கிறதுதான். ஒரு சில நாயிங்க, மேல பாஞ்சிடும். சிலநேரம் குடிகாரனுங்க போதையில சண்டைக்கு வருவானுங்க. காசு பறிக்கப்பாப்பாங்க. தாடி எல்லாம் வெச்சு இருக்கிறதால, 'எங்கடா இருந்து வரேன்'னு பேசுவாங்க. கஷ்டமா இருக்கும். ஆனா, இந்தப் பகுதிகள்ல எல்லாரும் நமக்குப் பழங்கங்கிறதால யாராவது வந்து அவனுங்களை விரட்டிடுவாங்க. சிலநேரம், பெரிய அரிவாளைக் கொடுத்து சாணைபிடிச்சுக் கொடுன்னு வம்பு பண்ணுவானுங்க. "கல்லு உடைஞ்சு போச்சு... வீலு கழண்டு போச்சுன்னு ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி தப்பிச்சுடுவேன். அபார்ட்மென்ட்களுக்குள்ள நிறைய வேலை கிடைக்கும். ஆனா, அவ்வளவு சுலபமா நுழைய முடியாது. செக்யூரிட்டிங்க மனசு வைக்கணும். இப்பல்லாம் நிறைய திருட்டுங்க நடக்கிறதால நம்மைக் கொஞ்சம் சந்தேகமாப் பாப்பாங்க. அதனால, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டெல்லாம் எப்பவும் கையில வெச்சிருப்பேன்..." 

உஸ்மான் ரோட்டில் ஒரு கத்தி விற்கிறது. அங்கிருந்து ராமேஸ்வரம் சாலையில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் நோக்கி நடக்கிறார் சௌகத் அலி.

“மத்தியானத்துக்குள்ள குறைஞ்சது அஞ்சு டீயாவது ஆயிடும். பெரும்பாலும் மத்தியானம் சாப்பிடுறதில்லை. பசியும், களைப்பும் தெரியக்கூடாதுங்கிறதுக்காக அப்பப்ப டீயைக் குடிச்சுக்குவேன். முன்னல்லாம் தண்ணி அடிக்கிற பழக்கம் இருந்துச்சு. இப்போ அதையும் விட்டுட்டேன். எப்பவாது பாக்கு போடுவேன். மத்தபடி, எந்தப் பழக்கமும் இல்லை. நான்  மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி எல்லாம் சூப்பரா செய்வேன். அதனால, சில சமயம் பிரியாணி சமைக்கற வேலைக்கு கூப்பிடுவாங்க. செஞ்சு கொடுப்பேன். நான் சமைச்ச பிரியாணியை சாப்பிட்டாங்க. நாக்கு செம ருசி கண்டுறும். அப்புறம், நேரம் கிடைக்கிறபோதெல்லாம் ஜமாத்துக்கு போயிருவேன். மவுத் ஆனவங்களுக்கு (செத்தவங்களுக்கு) குழி வெட்ட என்னைத்தான் கூப்பிடுவாங்க. ஊர்ல மவுத் நடந்தா தொழிலுக்கே வரமாட்டேன். அது இறைவன் எனக்குக் கொடுத்த வேலை. சேவையா செஞ்சிக்கிட்டிருக்கேன். பணம் கொடுத்தா கூட வாங்க மாட்டேன்."


மணி 12. கோடம்பாக்கம் நோக்கி நீள்கிறது பயணம். தெருக்களில் அழைப்பார் இல்லை. ஓரிரு கத்திகள் மட்டும் விற்கின்றன.
  
“நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது, எங்க சமூகத்தில, நல்லா சாணைத் தொழில் செய்யிற ஆண்களுக்கு பெண் கொடுக்க போட்டி போடுவாங்க. இப்பல்லாம் இந்தத் தொழில் செய்யிறவங்க பொண்ணு கேட்டா நிறைய யோசிக்கிறாங்க. காலம் எவ்வளவோ மாறிடுச்சு. என்னென்னவோ நவீனமெல்லாம் வந்திடுச்சு. இன்னமும் சாணைமெஷினைத் தூக்கிக்கிட்டு திரியிறதுக்கு எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. பிள்ளைகளை இநந்த் தொழிலுக்கு விடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன்." - விரக்தியாக சொல்லிக்கொண்டே கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்குள் நுழைகிறார். 

“முறையா தொழில் நடந்தா ஒரு நாளைக்கு 700 ரூபாய்க்கு மேல கிடைக்கும். இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்தான். இதுக்கு மேல சுத்தி பயனில்லை.
இன்னைக்கு சம்பாதிச்ச காசுல 10 ரூபா மட்டும் டீ குடிக்க எடுத்துகிட்டு. மீதி காசை எல்லாம் என் பொண்ணாடிக்கிட்ட கொடுத்துடுவேன். அவங்க குடும்பத்து செலவுகளைப்  பக்குவமா பார்த்துப்பாங்க. எங்களுக்கு மூணு குழந்தைங்க. எல்லாரும் ஸ்கூல் போறாங்க. இப்ப எனக்கு 41 வயசு உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் இந்த வேலை செய்யணும். இறைவன்தான் காப்பாத்தணும். பத்து வருஷத்துல சிறுகச் சிறுக சேத்து, சின்னதா ஒரு வீடு கட்டியிருக்கேன். இன்னும் பூச்சு வேலை முடியலே. அதுபோக, கொஞ்சம் வைத்தியச் செலவும் இருக்கு. இறைவன் எல்லா நாளையும் ஒரேமாதிரி எழுத மாட்டான். நிச்சயம் நாளைக்குத் தொழில் நல்லா நடக்கும்..."

"கடைசியா ஒண்ணு சொல்லணும் சார். தப்பா நினைக்க கூடாது. இத்தனை வருஷமா இதுதான் எனக்கு சோறு போட்டுச்சு. என் தலைமுறைக்கு அப்புறம் இந்த சாணைத்தொழிலே இருக்கக்கூடாதுனு சில சமயம் இறைவன்கிட்ட வேண்டிப்பேன். நம்ம பொழப்புதான் இப்படி ஆகிடுச்சு. இனியும் யாரும் தெருத்தெருவா அலைஞ்சு கஷ்டப்பக்கூடாது. வீதி வீதியா மழை வெயில்ல அலைஞ்சு தெரிஞ்சு என்னத்த சம்பாதிச்சுபுட்டேன்... வர்ற காசு எனக்கும் என் குடும்ப வயித்தை கழுவறத்துக்கே சரியா இருக்கு... இந்த தொழில் அழிஞ்சு போகட்டும் சார்." என்றவர் நீண்ட அமைதியாகிறார். 

சென்னை கடற்கரை மார்க்கமாகச் செல்லும் ரயில் உள்வந்து நிற்கிறது.
முகத்தில் வடியும் களைப்பைத்  துண்டால் துடைத்தபடி ரயிலேறுகிறார் சௌகத் அலி. தோளில் பவ்யமாக ஒண்டிக்கிடக்கிறது சாணை மிஷின். 

- வெ.நீலகண்டன், நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள் : கிரண் குமார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு