Election bannerElection banner
Published:Updated:

``அமெரிக்க அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது’’ - எழுத்தாளர் சல்மா

``அமெரிக்க அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது’’ - எழுத்தாளர் சல்மா
``அமெரிக்க அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது’’ - எழுத்தாளர் சல்மா

``அமெரிக்க அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது’’ - எழுத்தாளர் சல்மா

சல்மா - கவிஞர், எழுத்தாளர், தி.மு.க மகளிர் அணி மாநில துணைப் பொதுச் செயலாளர்... என பன்முகங்கள்கொண்டவர். இவரின் முதல் நாவல் `இரண்டாம் ஜாமங்களின் கதை’. இதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு அமெரிக்காவின் ஸ்வீட் அண்ட் கிளார்க் கல்லூரியின் பாலினக் கல்வி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகம் தமிழில் வெளிவந்தபோது பரவலான விவாதத்தைக் கிளப்பியது. மலையாளம், மராட்டி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் இலக்கியச் சூழல், பெண்களின் எழுத்து, இலக்கியச் சூழல் குறித்து எழுத்தாளர் சல்மாவிடம் பேசினேன்...

‘``இரண்டாம் ஜாமங்களின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பை அமெரிக்கக் கல்லூரி ஒன்று அங்கீகரித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``இஸ்லாமிய சமூகப் பின்புலத்திலிருந்து வந்த ஒரு பெண் எழுதிய முதல் நாவல் இது. புதுமைப்பித்தன் காலத்தில் ஜெகனராபேகம் என்கிற பெண் எழுத்தாளர் `காதலா கடமையா’ என்ற ஒரு நாவல் எழுதினார் என்பார்கள். ஆனால், `அது நேரடி நாவல் அல்ல. ஓர் ஆங்கில நாவலின் தழுவல்’ என்று புதுமைப்பித்தனே விமர்சனம் செய்தார். `இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலுக்கு முன்பு இஸ்லாமிய சமூகப் பெண்களின் வாழ்க்கை, குடும்பத்துக்குள் அவர்களுக்கு நேரும் எல்லாவிதமான அவலங்களையும் யாருமே எழுதிக் காட்டவில்லை. அதை நான் எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதிக தயக்கத்தோடும் பயத்தோடும்தான் எழுதினேன். எழுதியவற்றை வீட்டில், சமூகத்தில் எவர் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்று ஒளித்துக்கூட வைத்தேன். இந்த ஒரு நாவல் எழுதினால் போதும். இனி வேறு நாவல் எழுதப்போவதில்லை என்ற எண்ணம் இருந்தது. அதனால் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று பெரிய நாவலாக எழுதினேன். பொதுவாக பெண்களின் வாழ்க்கை எவ்வளவு அடக்குமுறைகளோடு இருக்கிறது என்பதை வெளிகொண்டுவந்த அந்த நாவல், அமெரிக்கக் கல்லூரி ஒன்றால் அங்கரிக்கப்படுவதில் மகிழ்ச்சிதான்.’’

``1990-களுக்குப் பிறகு தமிழில் பெண்ணெழுத்து ஒருவித புத்தெழுச்சியோடு எழுந்துவந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கு இலக்கியத்தில் அதுதான் விவாதப்பொருளாக இருந்து வந்தது. அதுபோன்ற ஒரு புத்தெழுச்சி அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லையே... ஏனென்று யோசித்திருக்கிறீர்களா?’’

``நீங்கள் சொல்வது உண்மைதான். 90-களில் எழுதவந்து தங்கள் எழுத்தாற்றலால் கவனம் ஈர்த்தவர்கள். சகல விதமான அங்கிகாரங்களை அடைந்தவர்கள்தான் இப்போதும் எழுதிவருகிறார். அவர்களுக்குப் பிறகு அந்த எழுச்சி தமிழ் பெண்ணெழுத்தில் நிகழவில்லை என்பது உண்மைதான். சந்திரா, ஜெயராணி, தி.பரமேஸ்வரி போன்றவர்கள் எழுதுகிறார்கள். எனினும், 90-களில் எழுந்துவந்த அந்த எழுச்சி இப்போது ஏனில்லை என்பது எனக்கு விடை தெரியாத கேள்வியாகத்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு, படிப்பு, விளையாட்டு போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இலக்கியத்தில் ஒருவித சுணக்கம் இருக்கவே செய்கிறது. சமீபத்தில் நிகழ இருக்கும் தி.மு.க-வின் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசப் புதிய பெண்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. இது தமிழில் பெண்ணெழுத்தில் ஒருவிதமான தேக்க நிலைதான்.’’

`` `மலையாளத்தில் சாரா ஜோசப் போன்ற வலிமையான பெண் எழுத்தாளர் இருப்பதுபோல தமிழகத்தில் ஒரு பெண் எழுத்தாளரும் இல்லை’ என்று முன்பொரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லியிருந்தாரே... இது பற்றி உங்கள் எண்ணம் என்ன?’’

`` ஒரு படைப்பு `நல்லா இருக்கு... நல்லா இல்லை’ என்று ஒரு தனிநபர் தீர்மானிக்க வேண்டியதில்லை. அதைக் காலம்தான் தீர்மானிக்கும். புதுமைப்பித்தனும், தி.ஜானகிராமனும் அவர்கள் வாழ்ந்த காலத்தில்விட அவர்களின் இறப்புக்குப் பிறகுதான் அதிகம் வாசிக்கப்பட்டனர். இதுவரை தமிழில் எழுதிய பெண்களில் ஒருவர்கூட சரிவர எழுதவில்லை என்று அவர் சொல்வது எவ்வளவு அபத்தம். ஒருவித முன்முடிவோடு தமிழில் எழுதும் பெண்களின் எழுத்தை ஜெயமோகன் அணுகுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான், அவரால் அப்படிச் சொல்ல முடிகிறது. என்னுடைய `இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவல் மலையாளத்தில் மராட்டியிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக விவாதிக்கப்பட்டது; பாரட்டப்பட்டது. இதெல்லாம் அவர் வசதியாக மறந்துவிடுகிறார். அல்லது தவிர்த்துவிடுகிறார். அவரது எழுத்துக்கள் எல்லாமே ஆபத்தான இந்துத்வாவின் அடிநாதம் என்ற விமர்சனம் இருக்கிறதே.’’

``உங்களைப் பற்றி எடுக்கப்பட்ட `சல்மா’ ஆவணப்படம் சர்வதே அளவில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ்ச் சூழலில் சரிவர கவனம் பெறவில்லையே?’’

`` தமிழ்ச் சூழலில் நிலவும் குழு அரசியல்தான் இதற்குக் காரணம். இவரை முன்னிறுத்த வேண்டும். இவரைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முன்முடிவுகளோடு சில குழுக்கள் இயங்குகின்றன. அந்த மாதிரியானவர்கள் என்னை அங்கீகரிக்க மாட்டார்கள்தான். ஆனால், உலக நாடுகள் முழுக்க பல கல்லூரிகளிலும் பெண் கல்வி சம்பந்தமான திட்டங்களில் `சல்மா’ ஆவணப்படத்தைச் சேர்த்திருக்கிறார்கள். இதன் பரவலான விற்பனை காரணமாகவே இந்தப் படத்தை எடுத்த சேனல-4, இன்னும் ஒளிபரப்பாமலே வைத்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் எப்போதுமே ஒரு கள்ளமௌனம் நிலவும். இந்த ஆவணப்பட விஷயத்திலும் அதுதான் நடக்கிறது. ஆனால், இந்தப் படத்துக்காக, எனக்கு நெதர்லாந்து மனித உரிமை ஆணையம் மனித உரிமை டிஃபண்டர் விருது கொடுத்தது. `குழந்தைத் திருமணம் ஏன் அதிகமாக நடக்கின்றன? என கனடா நாடாளுமன்றத்தில் பேசினேன். இவையெல்லாம் இந்த ஆவணப்படத்தால் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்தானே.’’

`` தி.மு.க ஆட்சியில் நீங்கள் சமூகநலத் துறையின் சேர் பெர்சனாகவும் இருந்திருக்கிறீர்கள். அந்தவகையில் இன்றைய இந்திய - தமிழகச் சமூகத்தில் இருக்கும் முக்கியமான நெருக்கடி என்று எதைச் சொல்வீர்கள்?’’

``சமூக நல்லிணக்கம் குலைந்துபோகும் அளவுக்கு மதவாத சக்திகள் பலம்பெற்று வருவதைத்தான் சொல்வேன். இதை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது. வட இந்தியாவில் காவிக் கொடிகளையும் பிரமாண்ட கோயில்களையும் காணலாம். ஒருவித மதவாத நெடி எப்போதுமே இருக்கும். என் பயணங்களில் நான் அதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், அசாம் போன்ற வட கிழக்கு மாநிலத்தில்கூட, இறைச்சிக்காக மாட்டைப் பிடித்துச்சென்ற இரண்டு இஸ்லாமியர்களை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவெங்கும் இருந்த சமூக இணக்கத்தைக் குலைத்துவருகின்றன. ஒரு இஸ்லாமியராக இனி தனியாக எங்கும் பயணம் போய்விட்டு வர முடியுமா என்ற அச்சவுணர்வு எனக்குள் தோன்றியிருக்கிறது. ரம்ஜான் தினத்தன்று பக்கத்தில் வசிக்கும் ஒரு இந்து குடும்பத்துக்கு என்னால் பிரியாணியை வழங்க முடியாதோ என்ற பயத்தை, ஏக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. இப்போதுள்ள சமூக நல்லிணக்கக் கண்ணி அறுந்துபோகும் அபாயம்தான் மிக முக்கியமான நெருக்கடி.’’

``ஆரம்பத்தில் நீங்கள் அரசியலுக்கு வந்தபோது, `நான் கட்டாயமாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டேன்’ என்றீர்கள். இப்போதும் அதே கட்டாயத்தோடுதான் அரசியலில் தொடர்கிறீர்களா?’’

``அரசியலுக்கு வர வேண்டும் என்ற திட்டம் எனக்கு ஆரம்பத்தில் இருந்ததே இல்லை. எனது குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில்தான் நான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால், இலக்கியவாதியாக இருந்ததைவிட அரசியல்வாதியாக மிகுந்த சுதந்திரமாக இருக்கிறேன். இலக்கியவாதியாக என்னால் எங்கும் தனியாகச் செல்ல முடிந்ததில்லை. சென்னைக்கு போவதாக இருந்தாலும் துணைக்கு ஆள் வருவார்கள். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு நான் மாறிவிட்டேன். எனக்கான முடிவை நான் எடுக்கிறேன். ஓர் அரசியலவாதியாக ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் சமூகத்தோடு நேரடித் தொடர்பில் இருக்கிறேன். அதனால் என் விருப்பத்தோடே அரசியலில் இருக்கிறேன்... தொடர்கிறேன் என்று சொல்லவேண்டும்.’’

``அரசியலுக்கு வர ஆர்வம் காட்டும் பெண்கள் எந்த வகையில் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்?’’

``பொதுவாக அரசியலில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு தாங்கள் `ஆண்’ என்பதே பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது அரசியலுக்கு வரும் பெண்கள் அரசியல் சம்பந்தமான நாலெட்ஜை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது அவர்களை ஓர் இயக்கத்தில் நிலைநிறுத்த மிகுந்த உதவியாக இருக்கும். முன்பைவிட அரசியலுக்கு வர பெண்கள் இப்போது அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறார்கள். சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் ஆகிவிட்டாலும், ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளராக ஒரு பெண்ணால் வந்துவிட முடிவதில்லை என்பதுதான் யதார்த்தமான அரசியல் சூழல். இதையெல்லாம் கருத்தில்கொண்டு போராடி வெல்லும் சக்தியோடு பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்.’’

``உலக நாடுகள் முழுக்க இலக்கியப் பயணம் போகிறீர்கள். அந்தப் பயணம் கற்றுத் தந்தது என்ன?’’

``தமிழகத்தில் பத்து புத்தகங்கள் எழுதிவிட்டு, நான்தான் பெரிய இலக்கியவாதி என்று பீடத்தை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் எண்பது, நூறு புத்தகங்களை எழுதியவர்கள்கூட அத்துணை ஹம்பிளாக இருக்கிறார்கள். இரண்டே இரண்டு நாவல்கள் எழுதிய என்னை அவர்களுக்குச் சமமாக மதிக்கிறார்கள். மனிதத்தன்மை மேலோங்கவும் சமூகத்தில் அன்பு தழைக்கவும்தான் இலக்கியமே. அப்படியா இருக்கிறது தமிழ்ச் சூழல்? கலாசார, பண்பாட்டுரீதியாக இன்னும் நாம் பண்படவேண்டி இருக்கிறது. குறிப்பாக குடும்ப வன்முறையில் இருந்து நம் பெண்களைக் காட்டிலும் வெளிநாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.’’

``நீங்கள் அடிப்படையில் கவிஞர். ஆனால், சமீபமாக கவிதைகள் எழுதுவதில்லையே?’’

``உரைநடையில் அதிக கவனம் செலுத்தியதால் நேர்ந்த சுணக்கம் இது. ஆனால், இந்த ஆண்டு கவிதைத் தொகுப்பு கொண்டுவந்துவிடும் முனைப்பில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். வந்துவிடும்.’’

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு