தனி மனிதன் சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலக அளவில் உலா வந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையில்லை. அதாவது, சின்னச் சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் செயலி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டது. டிக்டாக் செயலிக்குப் பதிலாக பல மாற்று செயலிகள் இந்தியாவில் தோன்றினாலும் டிக்டாக் அளவுக்கு இன்னும் எந்த செயலியும் பிரபலமாகவில்லை.

இந்த நிலையில் வேறு பெயரில் வேறு நிறுவனத்தின் கூட்டணியில் டிக்டாக் மீண்டும் இந்தியாவுக்குள் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி இந்தியாவின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டது. இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியா மட்டுமன்றி பல நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் தற்போது மீண்டும் ஒரு சில நாடுகளில் டிக்டாக் நுழைந்துவிட்டது. அதேபோல் இந்தியாவிலும் நுழைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் ஒன்றிய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் தனது சேவைகளைத் தொடங்க டிக்டாக் திட்டமிட்டு உள்ளதாகவும், முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் என்ற நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழைய விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் நேரடியாக இந்தியாவில் நுழையாமல் உள்நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்தியாவில் தனது சேவைகளைத் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில் ஹீராநந்தினி மற்றும் பைட் டான்ஸ் நிறுவனமும் இணைந்து மீண்டும் டிக்டாக் செயலியைக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் இரு நிறுவனங்களும் எந்த ஒரு தகவலையும் தற்போது வெளியிடவில்லை. ஆனால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், இதுபற்றி இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்பது குறித்த தகவல்களும் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட, இன்னொரு பக்கம் உலகெங்கும் பாய்ச்சல் எடுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் சார்ட், மற்றும் இந்திய சமூகவலைதள செயலிகளான ஷேர் சாட், ஜோஷ் ஆகியவை நம் நாட்டில் தற்போது ஓரளவுக்கு பிரபலமாக இருந்தாலும், டிக் டாக் மீண்டும் வந்தால் மேற்கண்ட செயலிகளுக்கு இந்தியாவில் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனத்துடன் இணைந்து டிக்டாக் செயலி களம் அமைப்பதால் மத்திய அரசு நிபந்தனைகளுடன்கூடிய அனுமதியைக் கொடுக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.