Published:Updated:

``மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்!”- 2022-ல் செயல்படுத்த நடவடிக்கை

``மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், வரும் 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன” என மகேந்திரகிரி உந்தும வளாக மைய இயக்குநர் மூக்கையா தெரிவித்துள்ளார்

விஞ்ஞானி மூக்கையா
விஞ்ஞானி மூக்கையா

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில், இந்திய விண்வெளி மையத்தின் மஹேந்திரகிரி உந்தும வளாக மையத்தின் சார்பில் விண்வெளி விளக்கக் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தொடங்கிவைத்தார். இதில், மகேந்திரகிரி உந்தும வளாக மையத்தின் இயக்குநர் விஞ்ஞானி மூக்கையா தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ``விண்வெளி வார விழாவை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

விழாவில் பேசும் மூக்கையா
விழாவில் பேசும் மூக்கையா

``Gate way of the star” என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சியின்படி, விண்ணில் நிலவைத் தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதற்கேற்றபடி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நான்கு இடங்களுக்குச் செல்வதற்கு நிலவிலிருந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் வரும் காலங்களில் உலக அளவில் பல நாடுகளின் செயற்கைகோள்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வருங்காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெயில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைப்புகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழாவில் மாணவர்கள்
விழாவில் மாணவர்கள்

அடுத்தகட்டமாக இந்திய விண்வெளி மையத்தில் பிரதமர் அறிவித்துள்ள மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன” என்றார். கண்காட்சியில் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்களின் மாதிரிகள், ராக்கெட்டுகள் செலுத்தப்படும் கிரையோஜினிக் இயந்திரங்களின் மாதிரிகள் மற்றும் விண்வெளி ஆய்வுகளின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.