Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு...

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
உதவலாம் வாருங்கள்

திருவாரூர் தியாகவிடங்கர் மகிமையை விரிவாகச் சொல்லும் பழைய நூல்களைச் சேகரித்து வருகிறேன். தியாகவிடங்கர் குறித்த நூல் தொகுப்பு எவரிடமேனும் இருந்தால், பகிர்ந்து உதவுங்களேன்.

-பா.பரசுராமன், திருநெல்வேலி-2

இறைவனுக்கான பணிவிடைகளை 16 என்று வகைப்படுத்திச் சொல்வார்கள். அவற்றில் தூப ஆராதனையும் ஒன்று. குங்கிலியக்கலய நாயனார் தூப வழிபாட்டால் பேறு பெற்றவர். தூப வழிபாட்டின் நியதிகள் குறித்து விளக்கும் புத்தகம் ஏதேனும் உண்டா? விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- சோ.லட்சுமி, வி.கே.புரம்

ஆற்றின் நடுவே கோயில் இடம்பெற்றுள்ள தலங்கள் குறித்து படித்து வருகிறேன். அவ்வகையில் நட்டாற்றீஸ்வரர் எனும் சிவாலயம் குறித்த தலபுராணத் தகவல் தேவை. அத்துடன் கோயில் இருப்பிடம், செல்லும் வழி குறித்த விவரம் அறிந்த அன்பர்கள், தகவல் பகிர்ந்து உதவுங்களேன்.

- எம்.பழனிவேல், கோவை-2

தசாவதாரங்களில் ஸ்ரீவாமனருக்கான கோயில்கள் தமிழகத்தில் எங்கெங்கு உள்ளன. விவரம் அறிந்தவர்கள், தகவல் கொடுத்து உதவலாமே.

- கே.ராஜசேகரன், குறிச்சி

நான் சுவாமி மலை அருள்மிகு ஸ்வாமிநாத ஸ்வாமியின் தீவிர பக்தன். கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையை தட்சிண சுவாமி மலை என்று போற்றுவார்கள்.

அதேபோல், வட நாட்டில் உத்தர சுவாமிமலை தலம் ஒன்று உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காஞ்சி மகா ஸ்வாமிகளின் வழிகாட்டலுடன் அந்த ஆலயம் அமைந்ததாகவும் சொல்வார்கள்.

அது எந்த ஊர், எந்த மாநிலத்தில் உள்ளது. விவரம் அறிந்தவர்கள் உரிய தகவலைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

- கோ.ராமநாதன், பொள்ளாச்சி

பக்த ராமதாஸரின் சரிதத்தை விரிவாகச் சொல்லும் புத்தகம் தேவை. அது எங்கே கிடைக்கும். எவரிடமேனும் ராமதாஸர் சரிதம் இருந்தால் நகல் எடுத்து அனுப்பி வையுங்களேன்.

- கே.வேலுமணி, வள்ளியூர்

சங்கரன்கோவில் புற்றுமண் பிரசாதம் வல்லமை மிக்கது. அதேபோல், புற்றுமண்ணுடன் தொடர்பு உடைய அம்மன் கோயில்கள் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் உள்ளன. இயற்கை வழிபாடு குறித்த ஆய்வு நூல்களைப் படித்து வருகிறேன். அதுகுறித்த நூல்கள், தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

-எம்.விஷ்ணுபிரசாத், மதுரை-5

வில்லுப் பாட்டு, தோல்பாவைக்கூத்துகளில் தெய்வக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்களில் மகாபாரதம்... இவை குறித்த தகவல்கள், நூல்கள் தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட கலைகளைச் சேர்ந்த கலைஞர்களின் தொலைபேசி எண் கிடைத்தாலும் பயனுள்ளதாக இருக்கும். உதவி செய்யுங்களேன்.

- எஸ். வேல்முருகன், சென்னை-45

ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம் என்று ஸ்தோத்திரப் பாடல் உண்டு. இந்தப் பாடலின் தமிழாக்கம் - கருத்து விளக்கத்துடன் தேவை. எவரிடமேனும் இருந்தால் நகல் பிரதியைப் பகிருங்களேன்.

-பவித்ரா முருகன், களக்காடு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவிக் கரம் நீட்டியோர்...

`முக லிங்கங்கள் குறித்து விளக்கமான தகவல்கள் வேண்டும்' என்று காரைக்குடி வாசகர் கோ.லட்சுமணன் கேட்டிருந்தார். அவருக்காக சென்னை வாசகர் கிருஷ்ணன் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்.

முக லிங்கம் என்பது ஒன்று முதல் ஐந்து முகங்கள் வரை கொண்டது. கிழக்கு முகம் - தத்புருஷம் - பொன்னிறம் கொண்டது; தெற்கு முகம் - அகோரம் - கறுப்பு நிறம்; மேற்குமுகம் - சத்யோஜாதம் - வெண்மை; வடக்கு முகம் வாமதேவம் - சிவப்பு நிறம்; வடகிழக்கு - ஈசானம் - பளிங்கு நிறம் கொண்டது. முகலிங்கத்தை வழிபட்டால் இம்மையில் சகல செளபாக்கியங்களும் மறுமையில் சிவலோக பிராப்தியும் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலஸ்தானம் அருகிலுள்ள நிருதி மூலையில் ஒருமுக லிங்கம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சபையிலும் ஒருமுக லிங்கம் உள்ளது.

இருமுக லிங்கங்களுக்கு இருவாட்சி மலர்களை அணிவிப்பது விசேஷம் என்பார்கள்.

திண்டிவனம் அருகில் திருவக்கரை சந்திர மெளலீஸ்வரர் மும்முகம் கொண்டவர். ஜோதிர் லிங்கமான த்ரியம்பகேஸ்வரரும் மும்முகம் கொண்டவர்.

திருவண்ணாமலை, ஆனைக்கா தலங்களில் சதுர்முக லிங்கங்கள் உள்ளன. அதேபோல், ஐந்து முகங்களுடன் காட்சிதருவது பஞ்சமுக லிங்கமாகும். விரிஞ்சிபுரம் மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்தில் வெளிப் பிராகாரத்தில் பஞ்சமுக லிங்கம் உள்ளது. திருச்சி திருவானைக்கா அருகில் பஞ்சமுகேஸ்வரர் கோயில் என்றே தனியாக உள்ளது. கயிலை மலையில் பஞ்சமுக லிங்கம் உள்ளதாக, சிவ ரகசியம் என்ற நூல் குறிப்பிடுகிறது!

கேள்விகள், தகவல் பகிர்வுகளை

அனுப்ப வேண்டிய முகவரி:`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்ன-600 002

Email: sakthi@vikatan.com