Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

பிரீமியம் ஸ்டோரி

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்...

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஸ்ரீபத்ரி நாராயணரது திருவுருவத்தை வீட்டிலேயே வைத்து வணங்கும் வகையில் பகவானின் திருவுருவப் படங்கள், துதி பாடல்கள் கொண்ட புத்தகம் எங்கு கிடைக்கும். அதேபோல், 'மீனாட்சி சதகம்' எனும் மதுரை மீனாட்சியம்மனைப் பற்றி பாடப்பட்ட நூறு பாடல்கள் அடங்கிய நூல் உண்டு. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் குறித்தும் விவரம் அறிந்த வாசக அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

-கே.குமாரவேல், கோவை

நான் விநாயகர் உபாசகன். ஜாதகப்படி செங்கழுநீர்ப் பிள்ளை யாரை தரிசித்து வழிபடுவது விசேஷம் என்று ஜோதிடர் வழிகாட்டினார். நான் வசிப்பது திருநெல்வேலி தச்சநல்லூரில். எங்கள் ஊர்ப் பகுதியில் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் எங்குள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்தால், பயனுள்ளதாக இருக்கும்.

- ஆர்.சுரேஷ்குமார், தச்சநல்லூர்

குமரகுருபரரது, `குமார கலம்பகம்' எனும் நூல் காசி விஸ்வேஸ்வரர்- விசாலாட்சி ஸ்தோத்திரத்துடன் கூடிய புத்தகம், `சேடீபவன் நிகில...' எனத் தொடங்கும் காளிதேவி துதிப்பாடல் அடங்கிய புத்தகம் தேவை. எவரிடமேனும் இந்தப் புத்தகங்கள் இருந்தால், நகலெடுத்து அனுப்புங்களேன்.

- ஆர்.சடகோபன், மதுரை-3

எனக்குக் கீழ்க்காணும் புத்தகங்கள் தேவை. எவரிடமேனும் இருந்தால் நகலெடுத்து அனுப்பலாம். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் முகவரி குறித்து அறிந்தவர்கள் விவரம் பகிரலாம்.

ஞான வாசிஷ்டம், திருஅருணை அந்தாதி (சிவ.எல்லப்ப நாவலர்), அண்ணாமலை வெண்பா (குரு நமசிவாய சுவாமிகள்), திருவாரூர் தியாகேசர் சகஸ்ரநாமம் ஆகிய நூல்கள் எங்களுக்குத் தேவை.

- சி.முருகன், சென்னை-44

எனக்கு திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருள்பிரசாதமான இலை விபூதி தேவைப் படுகிறது. ஒருமுறை நேரில் சென்றிருந்தபோது, பிரசாதமாக இலை விபூதி பெற்றுவந்தேன். தற்போது நேரில் செல்ல இயலாது. ஆகவே, வாய்ப்புள்ள வாசக நண்பர்கள் இலை விபூதி பெற்று அனுப்பிவைத்தால் மகிழ்வேன். அல்லது ஆன்லைன் மூலம் இலை விபூதி பெற இயலுமா? விவரம் அறிந்தவர்கள் வழிகாட்டுங்களேன்.

- கே.கந்தசாமி, திருவள்ளூர்

கார்த்திகை மாதம் மற்றும் தை மாதத்தில் எங்கள் குடும்பத்தில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்குப் படையல் வைத்து வணங்கி வழிபடுவோம். அடுத்த தலைமுறைக்குக் கருப்பண்ணசாமியின் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஆகவே, ஸ்ரீகருப்பண்ண சாமி பற்றிய மூல வரலாறு, பாடல்கள் மற்றும் கருப்பண்ணசாமி குறித்த தகவல்கள் ஆகியவை அடங்கிய நூல் எங்கு கிடைக்கும்? இதுபற்றி அறிந்தவர்கள் தகவல் தந்து உதவினால் நன்றி உடையவனாக இருப்பேன்.

- கே.மணிவேல், மேலூர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`முருகேசர் முதுநெறி வெண்பா'

`முருகேசர் முதுநெறி வெண்பா' எனும் நீதிநெறி நூல் குறித்த விவரம் வேண்டும் என்று விருதுநகரைச் சேர்ந்த வாசகர் காந்தி கேட்டிருந்தார். இதுகுறித்த விவரம், சக்தி விகடன் இதழில் `ஞானப் பொக்கிஷம்' எனும் தொடரில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்தது. அந்த விவரம் இங்கே:

நமக்குத் தெரிந்த வழக்கமான பல நீதி நூல்கள் தவிரவும், நமக்குத் தெரியாத இன்னும் ஏராளமான அபூர்வ நூல்களும் உள்ளன. அவற்றில் பல, திருக்குறளை அடிப்படையாக வைத்து உருவான நூல்கள். `வெண்பா’ முறையில் உருவான அந்த நூல்களில் உள்ள பாடல்களின் பின் பகுதியில், ஒரு திருக்குறள் அப்படியே முழுவதுமாக இடம் பெற்றிருக்கும். பாடலின் முன் பகுதியில், அந்தத் திருக்குறளின் கருத்தை விளக்கும் இதிகாச, புராண, காப்பியக் கதைகள் இடம் பெற்றிருக்கும்.ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒவ்வொரு குறளாக மொத்தம் 133 திருக்குறள்களும், அதை விளக்கும் 133 கதைகளும் அந்த நூல்களில் இடம் பெற்றிருக்கும்.

அவ்வாறு வெளியான அற்புதமான நூல்களில் சிலவற்றின் பெயர்கள்: முருகேசர் முதுநெறி வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, இரங்கேச வெண்பா எனும் நீதி சூடாமணி, முதுமொழி மேல்வைப்பு, தினகர வெண்பா, வடமலை வெண்பா, திருமலை வெண்பா, திருமலைக் கொழுந்து வெண்பா, வள்ளுவர் நேரிசை, சிவசிவ வெண்பா.

இவற்றில், முருகேசர் முதுநெறி வெண்பா நூல், சிதம்பரம் ஈசானிய மடம் ராமலிங்க சுவாமிகளால் இயற்றப்பட்டது. முருகப் பெருமானை முன்னிலைப்படுத்திப் பாடுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒரு பாடல் இங்கே..

வஞ்ச நலன் வாமதேவர்க்கு உதவான் வாசினச்சேய்

முஞ்சிய பின் ஈந்தான் முருகேசா - எஞ்சலின்றிச்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்

கொல்லப் பயன்படும் கீழ்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை சென்ன-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு