
இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.
எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் எதுவென்று தெரியாமல் இருந்தது. பிரச்னம் பார்த்தபோது, ஆற்றங்கரையில் கோயில் கொண்டிருக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மனே எங்கள் குடும்பத்துக் கான குலதெய்வம் என்று தெரியவந்தது.
இங்ஙனம், ஆற்றங்கரையில் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ள இடம் - ஊர் குறித்த தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் மிகவும் உதவியாக இருக்கும்.
- தாமரை, திருப்பூர்.
விநாயகி (விநாயகரின் பெண் வடிவம்) குறித்த தகவல்களை ஆய்வு செய்ய விரும்புகிறேன். சுசீந்திரத்தில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதேபோல், விநாயகி சிற்பம் வேறு எந்தத் தலங்களில் உள்ளது என்ற விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்தால் மகிழ்வேன்.
- சாரதி, சென்னை-45

திருஞானசம்பந்தர் குறித்த திருக்கதையை அவர் பாடிய தலங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தனி நூல்கள் எங்கு கிடைக்கும். எவரிடமேனும் பழைய நூல்கள் இருந்தால், நகல் எடுத்து அனுப்பினாலும் உதவியாக இருக்கும்.
- கே.சதாசிவம், திருநெல்வேலி-2
சமீபத்தில் ஜோதிடர் ஒருவர் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, மாமரம் தலவிருட்சமாகத் திகழும் திருத்தலங்களை தரிசித்து வரும்படி வழிகாட்டினார். மாமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட தலங்கள் குறித்த விவரம் தேவை. தகவல் அறிந்தவர்கள் பகிருங்களேன்.
- சி.ரேவதி, கஞ்சனூர்
வீட்டிலேயே தோட்டத்தில் விநாயகருக்கு சிறு ஆலயம் அமைக்க விரும்புகிறேன். அவ்வாறு தனிப் பயன்பாட்டுக்காக ஆலயம் அமைத்துக் கொள்ள லாமா. ஆலய பிரதிஷ்டை விதிகள் அடங்கிய நூல்கள் ஏதேனும் உள்ளனவா. கிடைக்கும் விவரத்தைப் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
- தி.ரகு, பெங்களூரு
சமீபகாலமாக ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்துக்குப் போய் வணங்கி வருகிறேன். வீட்டில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளுக்குரிய நித்ய பூஜை செய்ய விரும்புகிறேன். அவரை வழிபடுவதற்கான மந்திரங்கள், பூஜா விதிகள் அடங்கிய நூல்கள் தமிழில் ஏதேனும் உள்ளனவா? இருப்பின் எங்கு கிடைக்கும்? விவரம் பகிருங்களேன்.
- எஸ். ஹரிகிருஷ்ணன், ஹைதராபாத் 55

`நல் வழி'
`பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்ற வாக்கியத்தை அறிவோம். குறிப்பிட்ட இந்தப் பத்து விஷயங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் பண்டைய நூலொன்றில் இருப்பதாக அறிந்தேன். அதுபற்றிய விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்று திருச்சி வாசகி ராதிகா தகவல் கோரியிருந்தார்.
`நல்வழி' என்ற ஒளவை அருளிய நூலில்தான் மேற்காணும் தகவல் உள்ளது. அதுபற்றிய விவரம் வாசகர்கள் அனைவ ருக்காகவும் இங்கே...
மானம் - சுயமரியாதை, குலம், கல்வி, தருமம், அறிவு, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தும் பசியின் கொடுமை மிகுந்துவிட்டால் பறந்துபோகும் என்பது ஓளவையின் வாக்கு.
'பாலும் தெளிதேனும்...’ என்று நமக்கெல்லாம் பழக்கப்பட்ட பாடலுடன் தொடங்குகிறது இந்த நூல்.
உடம்பு, காலம், ஊழ்வினை, சுகம், வயிறு, தொழில், காவல், வியப்பு, அமைதி, பொய்சாட்சி, ஆடம்பரம், சஞ்சலம், ஒழுக்கம் ஆகியவை பற்றி 40 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பசியைப் பற்றியே இதில் பலப்பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காரணம், பசியின் கொடுமை அவ்வளவு பெரியது!
'உணவை உற்பத்தி செய். உணவை வீணாக்காதே’ என்று வேதம் சொல்கிறது. நம்மால் உணவை உற்பத்தி செய்ய முடிகிறதோ, இல்லையோ- அதை வீணாக்காமல் இருந்தாலே போதும்; அதுவே நாம் வேதத்திற்குக் காட்டும் மரியாதை; உழைத்து, அந்த உணவை நமக்கு அளித்த உழவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை.
`நல்வழி’ காட்டும் நல்வழிப் பாடல் ஒன்று:
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
அன்பார்ந்த வாசகர்களே...
உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...
ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.
இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:
`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன்,
757, அண்ணாசாலை
சென்ன-600 002
Email: sakthi@vikatan.com