Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள்.

பிரீமியம் ஸ்டோரி

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங் கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க் கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லிய மாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்

ம் தமிழகக் கோயில்களில் ஆமையின் சிற்பங்களுக்குப் பிரதான இடம் கொடுத்திருந்ததாக சில நூல்களில் படித்தறிந்தேன். சில தலங்களில் கூர்ம அவதாரத்துடன் ஆமைச் சிற்பங்களைத் தொடர்புபடுத்தும் விளக்கங்கள் உள்ளன. அந்தப் புராணம் மட்டுமன்றி, ஆமையுடன் தொடர்புடைய வேறு அடிப்படைக் காரணங்களும் உண்டு என்கிறார்கள், நண்பர்கள். எனவே, ஆமை தத்துவம் குறித்த விளக்கங்கள் இடம்பெற்ற நூல் ஏதேனும் இருப்பின் பகிர்ந்து உதவுங்களேன்.

-எம்.வேலன், திருச்சி-2

சித்திரக் கவிகள் குறித்து படித்தறிய ஆவல். அவை தொடர்பான நூல்களைப் படித்து வருகிறேன். `குக்குட பந்தனம்' எனும் சித்திரக்கவி குறித்துப் படித்தறிந்தேன். இவ்வகைச் சித்திரக்கவி எந்தத் தலத்தில் இடம்பெற்றுள்ளது. விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

-கே.தர்ஷினி, முசிறி

திருச்சி அருகிலுள்ள மண்ணச்சநல்லூர் அருள்மிகு பூமீஸ்வரரை தரிசித்து வழிபட்டால், நிலம் மனை தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என அறிந்தேன். அந்தக் கோயிலுக்குத் திருச்சியி லிருந்து எப்படிச் செல்வது, அங்கு செய்ய வேண்டிய பரிகார வழிபாட்டு நியதிகள் என்ன என்பவை குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிரலாமே.

உதவலாம் வாருங்கள்

திருச்சி மண்ணச்சநல்லூர் போன்று நிலம் மனைப் பிரச்னைகள் தீர்க்கும் வேறு தலங்கள் ஏதேனும் உண்டா. இதுகுறித்தும் தகவல் தேவை.

- மு.ராமநாதன், கோவை-2

நெல்லைச் சீமையில் தசாவதாரங்களுக்கும் உரிய 10 தலங்கள் இருப்பதாக அறிந்தேன். அந்தத் தலங்கள் என்னென்ன. அந்த ஊர்களுக்குச் சென்று தரிசித்து வருவதற்கான போக்குவரத்து மார்க்கம் என்ன. விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- ஜி.பத்மநாபன், சென்னை-2

சிவபெருமானைப் புஷ்பாதீஸ்வரர் என்றும் போற்றுவார்கள். ஈசனுக்கு எந்தெந்த நாள்களில் என்னென்ன பூக்களைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும். அதேபோல், காவல் தெய்வங்களுக்கு பூ அலங்காரப் பணி செய்யும் கலைஞர்களின் தொடர்பு எண் தேவை. விவரம் அறிந்தவர்கள் பகிரலாமே.

- எஸ்.லட்சுமணன், திருநெல்வேலி-2

எனக்கு மகான் வல்லபாசர்யரால் அருளப்பட்ட மதுராஷ்டகம் துதிப்பாடல்கள் தேவை. எவரிடமேனும் இருந்தால் பகிரலாமே.

- சொ.கீர்த்தனா, மானாமதுரை

உதவிக் கரம் நீட்டியோர்...

`திண்டிவனம் அருகில் முருகப்பெருமானின் வேலாயுதத்துக்குச் சிறப்பு விழா நடைபெறும் தலம் எது' என்று திருச்சி வாசகர் வி.ராமநாதன், சென்ற இதழில் கேட்டிருந்தார். அவருக்கு சென்னை வாசகி க.புவனா கீழ்க்காணும் விவரத்தை அளித்துள்ளார்.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

திண்டிவனம் - முன்னூர் இடையே 22-ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். இங்கே ஐயன் ஆடவல்லீஸ்வரர் நடராஜப் பெருமானாக இல்லாமல், சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார். அவரே குருபகவானாகவும் அருள்வது விசேஷம்!

இந்தக் கோயிலில்தான் வேலுக்குச் சிறப்பு விழா நடைபெறுகிறது.

இந்தப் பகுதியை நல்லியக்கோடன் எனும் மன்னன் ஆண்ட தருணம். அவன் மீது சோழர்கள் படையெடுத்து வந்தனர். அவர்களின் பெரும் படையை எதிர்கொள்ள வல்லமை வேண்டி முன்னூர் முருகனைப் பிரார்த்தித்தான் மன்னன். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘தாமரை மலர்களால் ஆயுதங்களை எடுத்து வந்து என் சந்நிதியில் வைத்து வழிபட்டு, தைரியமாகப் போர் செய். நான் வேல் படையாக இருந்து உன்னை வெற்றிபெறச் செய்வேன்’ என்று அருளினார். மன்னனும் அப்படியே செய்தான். மறுநாள் போர்க்களத்துக்குச் சென்றான்.

போர்க்களத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு தாமரைகள் மலர, அந்தக் கணத்தில் ஒரு விந்தை நிகழ்ந்தது. மலர்ந்த தாமரைக்குள் இருந்த வண்டுகள் பறந்து சென்று எதிரிப் படையினரின் யானைகளின் காதுகளில் புகுந்தன.

வண்டின் குடைச்சல் தாங்காமல் மதம் பிடித்துவிட்ட யானைகள் பின்னால் திரும்பி தலைதெறிக்க ஓட, எதிரிப் படை வீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். நல்லியக்கோடன் எய்த அம்புகள் முருகப் பெருமானின் கை வேல்களாக மாறி எதிரிகளை அழித்தன.

இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் விதம், வருடம்தோறும் சித்திரை மாதத்தில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் வரும் முதல் செவ்வாயன்று இங்கு வேல் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு